Published : 02 Dec 2015 12:49 PM
Last Updated : 02 Dec 2015 12:49 PM

சித்திரக்கதை: குட்டி முயலின் சமயோசிதம்

ஜன்னல் வழியே நுழைந்த சூரிய ஒளி முகத்தில் அடித்ததால், டிங்கு முயலுக்குத் தூக்கம் கலைந்தது. சோம்பல் முறித்ததும், அம்மாவின் அறையை நோக்கிச் சென்றது. அம்மா முயல் பிங்கு, வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தது. அதனருகில் போய் நின்றதும், “எழுந்துவிட்டாயா!” என்று டிங்குவை முத்தமிட்டது அம்மா முயல்.

“அம்மா… நான் இன்றாவது தனியாக வெளியே போய் விளையாடட்டுமா?” என்று ஏக்கத்துடன் கேட்டது டிங்கு.

“தனியாகவா, முடியாது. நீ குட்டிப் பையன். கொஞ்ச நேரம் பொறு. வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு வருகிறேன். இருவரும் சேர்ந்து போகலாம்” என்றது அம்மா முயல்.

“அம்மா… என் வயசுப் பசங்களெல்லாம் தனியாக விளையாடுகிறார்கள். என்னை மட்டும் ஏன் விட மறுக்கிறீர்கள்?” என்று சிணுங்கலுடன் கோபித்துக்கொண்டது டிங்கு.

“நீ எனக்கு ஒரே மகன். உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டாமா?”

“பக்கத்து வீட்டு நண்பர்கள் என்னை உலகம் தெரியாதவன் என்று கேலி செய்கிறார்கள். தனியாகப் போனால்தானே உலகத்தை நான் புரிந்துகொள்ள முடியும்?” என்று கேட்டது டிங்கு.

சில நொடிகள் யோசித்த அம்மா முயல், “சரி, நீ தனியாக வெளியே சென்று விளையாடி விட்டு வா!” என்று, சில அறிவுரைகளைக் கூறி அனுப்பிவைத்தது. சிங்கம், புலி, நரி போன்ற விலங்குகளிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்ற வழிமுறையைக் கூறிக் குட்டியை அனுப்பி வைத்தது.

டிங்கு மிகவும் சந்தோஷத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்தது, நண்பர்கள் விளையாடும் புல்வெளிக்கு போனது. அங்கு யாரையும் காணாமல் ஏமாற்றம் அடைந்தது. ஆனால், அங்கு பீன்ஸ் போன்ற சுவையுள்ள காய்களும் பிளம்ஸ் போன்ற இனிப்பான பழங்களும் கீழே சிதறிக் கிடப்பதைப் பார்த்து, ஆர்வத்துடன் அவற்றை எடுத்துக் கடித்து மென்று சுவைத்தது.

அப்போது பாங்கோ என்ற நரி, முயலின் நடவடிக்கையைச் சற்று தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்தது. அதுதான் பீன்ஸையும் பிளம்ஸையும் இறைத்து விட்டிருந்தது. செடிகொடிகளின் வழியே பதுங்கிப் பதுங்கி முயலை நெருங்கிக் கொண்டிருந்தது.

‘முயலின் அருகே சென்று தந்திரமாகப் பேசி மடக்கலாமா அல்லது பாய்ந்து பிடித்துவிடலாமா?’ என அது யோசித்துக் கொண்டிருந்தபோதே, சற்றுத் தொலைவில் சிங்கம் ஒன்று கம்பீரமாக வந்துகொண்டிருப்பதைப் பார்ததது பாங்கோ.

அருகில் எங்காவது இரை திரிகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு வந்த சிங்கத்தின் கண்களில், வெள்ளையாக ஏதோ அசைவது தெரிந்தது. அதை, முயல்தான் என்று மிகச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட நொடியில், “கர்…” என்று கர்ஜனை செய்தது.

சிங்கத்தின் குரலைக் கேட்டதும், அடுத்த நொடியே பயத்தை உதறித் தள்ளிக் குரல் வந்த திசைக்கு நேர் எதிர் திசையில் பதற்றத்துடன் வேகமாக ஓடியது முயல். சிங்கம் போன்ற விலங்குகள் வந்தால், இப்படித்தான் ஓட வேண்டும் என்று அம்மா முயல் சொல்லி அனுப்பியதால், அதன்படி ஓடியது.

சற்று தூரத்தில் நிழலுருவமாகத் தெரிந்த பாங்கோவைக் கண்டவுடன் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொள்ள டிங்கு சட்டென்று திரும்பிப் பக்கவாட்டில் ஓட ஆரம்பித்தது. சிங்கமும் நான்கு கால் பாய்ச்சலில் துரத்தியது. பாங்கோவோ, தனது இரை கைநழுவிப் போனதை எண்ணி வருந்தி வேறு பக்கம் ஓடி மறைந்தது.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய டிங்குவின் பாதையில் அடர்த்தியான சிறிய அளவிலான புதர் குறுக்கிட்டது. அதற்குள் நுழைந்து பாதி தூரம் ஓடிய டிங்குவுக்கு அம்மா முயல் கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது.

புதருக்குள் ஓடியும், மறைந்தும், ஒளிந்தும் சிங்கத்துக்குப் போக்குக் காட்டியது. அம்மா முயல் கூறியது போலவே ஓடிஓடி ஒளிந்தது. சிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த முயல் இப்படிப் போக்குக் காட்டுகிறதே என நினைத்து ஏமாற்றமடைந்தது. அப்போது சிங்கம் சட்டென்று திரும்பிப் பார்த்தது. டிங்கு மறைந்து ஓடுவதைப் பார்த்ததும் திரும்பவும் துரத்த ஆரம்பித்தது.

இப்படியே டிங்கு அங்குமிங்கும் ஓடி, அதன் வீடு அருகே வந்துவிட்டது. அப்போது சட்டென்று ஒரு புதருக்குள் புகுந்து மறைந்துகொண்டது. ஏனென்றால், தன் வீட்டைத் தெரிந்துகொண்டால் தனக்கு மட்டுமல்லாமல், தன் அம்மாவுக்கும் சேர்த்து ஆபத்து வந்துவிடும் என்ற பயம். ஒரு கட்டத்தில் சிங்கம் சலிப்படைந்து ஏமாற்றத்துடன் திரும்பியது.

சில நிமிடங்கள் கழித்து சிங்கத்தின் நடமாட்டம் தெரிகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தது டிங்கு. பின்னர் வேகவேகமாக ஓடித் தன் வீட்டை அடைந்தது.

மூச்சு வாங்கியபடி வெளிறிய முகத்துடன் வீட்டுக்குள் வேகமாக ஓடிவந்த தன் மகனைப் பார்த்துப் பயந்து போய் சட்டென்று கதவைச் சாத்தியது அம்மா முயல்.

“அம்மா… என்னை ஒரு சிங்கம் துரத்தியது. எப்படியோ தப்பி வந்துவிட்டேன்” என்று கூறிய டிங்கு, ஆசுவாசத்துடன் பெருமூச்சு விட்டது.

அம்மா முயல் வேகமாக உள்ளே சென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தது.

“அம்மா… நான் புல்வெளிக்குச் சென்று பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. ஒரு வேளை செடிகொடிகள் நிறைந்திருக்கும் காட்டுப் பகுதிக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ என நினைத்து அங்கே போனேன். அங்கு யாரும் இல்லை. கீழே சிதறிக்கிடக்கும் பீன்ஸையும் பிளம்ஸையும் தின்றுகொண்டிருக்கும்போதுதான் நரி என்னை நோட்டமிட்டது.

“பழங்களை இறைத்து வைத்து இரை பிடிப்பது நரியோட வேலைதான்” என்றது அம்மா முயல்.

“இதை எனக்குச் சொல்லவில்லையே. ஆனால், நீங்கள் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றியதால் உயிர் தப்பித்தேன்” என்றது படபடப்பான குரலில் டிங்கு.

கொஞ்சம் படபடப்பு அடங்கியவுடன், “ இப்படிப் பயந்து ஓடி ஒளிவது எனக்கு மிக அவமானமாக இருக்கிறது” என்று வெட்கத்துடன் கூறியது டிங்கு.

“என்ன செய்வது டிங்கு! நாம் உடல் வலிமை குறைந்தவர்கள். உடல் வலிமை மிக்கவர்களிடம் நேருக்கு நேர் மோதக் கூடாது. முதலில் அவற்றிடமிருந்து நம்மைக் தற்காத்துக் கொள்ளத்தான் முயல வேண்டும். எதிரியிடம் சிக்காமல் தப்பிப்பதே ஒரு பெரிய கலை! அதை நீ சரியாகவே செய்திருக்கிறாய். இதில் அவமானப்படவும், வெட்கப்படவும் எதுவும் இல்லை!” என்று டிங்குவைச் சமாதானப்படுத்தியது.

டிங்குவும் மன அமைதி அடைந்து தூங்கச் சென்றது.

ஓவியம்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x