Last Updated : 25 May, 2021 03:11 AM

 

Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

தொண்ணூறுகளின் ராஜா!

தொண்ணூறுகளின் பிற்பகுதி. ‘இமெயிலில் லவ் லெட்டர் தாரீயா..’, ‘தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை..’ என்பது போன்ற பாடல் வரிகளுக்கெல்லாம் வழி ஏற்படுத்திக் கொடுத்தது இணையதளம். அந்த இணையதளத்துக்குத் தலைவாசலாக இருந்தது தேடுதளமான இணைய பிரவுசர். அதில் ராஜாவாகத் திகழ்ந்தது, ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’. கால் நூற்றாண்டாக இணைய உலகில் வலம்வந்த ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’, அடுத்த ஆண்டு முதல் மவுனிக்கிறது!

25 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் இணைய வாசல் திறந்தது. சாலையோரங்களில் முளைத்த பிரவுசிங் சென்டர்களுக்குள் நுழைந்தால், சிறிய கஃபேவுக்குள் இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். கணினிக்கு முன்பாக கீபோர்டைத் தட்டோ தட்டென தட்டிக்கொண்டு மணிக்கணக்கில் பிரவுசிங் செய்து மூழ்கிக் கிடப்பார்கள். வேலை தேடுபவர்கள், தகவல் தேடுபவர்கள், பொழுதுபோக்குபவர்கள், இவ்வளவு ஏன் காதல் தேடுபவர்கள் எனப் பலருக்கும் அன்று பிரவுசிங் சென்டர்களும் இணையமும் ஒரு வடிகால்.

இப்போது இருப்பதுபோல ‘ஓப்ரா’, ‘மொசில்லா ஃபயர் பாக்ஸ்’, ‘யூசி பிரவுசர்’, ‘கூகுள் குரோம்’ எனப் போட்டிப்போட்டுக்கொண்டு செயல்படும் இணைய பிரவுசர்கள் அன்று இல்லை. ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்பதுபோல ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக இணையத்தில் கோலோச்சிக்கொண்டிருந்தது. 1996-ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கிய இந்தத் தேடுதளம்தான் இணையத்தையும் மக்களையும் இணைய வலைக்குள் நெருக்கமாக்கியது. பிரவுசிங் செய்ய வேண்டுமென்றால், ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ மட்டுமே ஒரேவழி. அந்த ஒத்தையடிப் பாதையில்தான் இணையமும் இணைய வளர்ச்சியும் இந்தியாவில் தொடங்கின.

விழுங்கிய வளர்ச்சி

இணையம் வளர வளர அதையொட்டி பல வளர்ச்சிகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ மாறியது. ஆன்லைன் வர்த்தகம் முதன்முதலில் செழிப்படையத் தொடங்கியதும் இந்த பிரவுசரின் மூலமாகத்தான். இப்படி ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ இந்தியாவில் இணைய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. ஆனால், இணையம் என்கிற தகவல் சுரங்கத்தை அள்ளித் தந்த இந்த ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ மீதான மோகம் 2010-களில் குறையத் தொடங்கியது.

கட்டுக்கடங்காத வளர்ச்சியும் நவீனமும் பழையதைக் கருணையின்றிக் கொன்றுவிடும் அல்லவா? அப்படி மேம்படுத்தப்பட்ட புதிய புதிய பிரவுசர்களின் வருகையால், ஒரு கட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் பழைய தேடுதளமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மாறிப்போனது. இன்னொரு புறம் ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியும் வேகம் பிடித்தது.

மவுனிக்கும் நாள்

தற்போது உலகமே பெரும்பாலும் ‘கூகுள் குரோம்’ என்கிற ஒற்றைத் தேடுதளத்துக்குள் இணையத்தைச் சுவாசித்துக்கொண்டிருக்கிறது. இணையம் - ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சிக்கு முன்பு பழைய ராஜாவான ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ இன்று களத்திலேயே இல்லை எனும் அளவுக்குச் சுயத்தை இழந்துவிட்டது. அதன் பயனாளர்கள் சுருங்கிக்கொண்டே வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழந்துவந்த ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ விரைவிலேயே முழுமையாக மறைய உள்ளது. தற்போது அது மவுனிக்கும் நாளை எண்ணத்தொடங்கியிருக்கிறது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ செயல்படாது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தத் தேடுதளம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், அது சார்ந்த செயலிகள் 2029-ஆம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இணையத்தை முதன் முதலாகச் சுவாசிக்கத் தொடங்கியவர்களுக்கு ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’தான் முதல் குழந்தை. அது ஏற்படுத்திய வியப்பும் தாக்கமும் அவர்கள் இணையத்தில் புழங்கும்வரை நினைவில் நிற்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x