Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM

சூழலியலும் பெண்ணியமும்: பிரிக்க முடியாத உறவு :

நாராயணி சுப்ரமணியன்

பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் சுற்றுச்சூழலியல் சீர்கேட்டுக்கும் தொடர்பு உண்டு.

முதலாளித்துவம், தொழில்மய மாக்கல், ஆண்மையச் சிந்தனை ஆகிய மூன்றும் இணையும் புள்ளியிலிருந்தே இதை அணுக வேண்டும். ‘மற்றைய அனைத்தும்’ அடக்கி ஆளப்பட வேண்டும் என்கிற எண்ணம், இந்தப் புள்ளியிலிருந்தே தொடங்குகிறது. இதில் பெண்கள், தொல்குடிகள், ஒடுக்கப்பட்டவர்கள், இயற்கை என்று எல்லாமே அடங்கும். ஆண்மையச் சிந்தனையானது (Patriarchy), பெண்களையும் இயற்கையையும் ஒருசேர ஒடுக்கு கிறது.

அணு ஆயுதங்கள், தீவிர ராணுவ மயம், மாசுபடுத்துதல், காடழிப்பு ஆகிய சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகள், ஆண்மையச் சிந்தனையிலிருந்து தோன்றும் செயல்பாடுகள். இதற்கு எதிராக, பெண்ணியத்தையும் சூழலியல் பாதுகாப்பையும் இணைத்து உரு வாக்கப்பட்ட கருத்தாக்கமே சூழலில் பெண்ணியம் (Eco feminism). ஃபிரான்சுவா த உபன் (Francoise d'Eaubonne) என்கிற பெண்ணியவாதி 1974-ல் முன்வைத்த கருத்தாக்கம் இது.

இரண்டு அடிப்படைகள்

சூழலியல் பெண்ணியத்தை ஒட்டிய எல்லாக் கருத்தாக்கங்களுமே இரு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை:

1. சூழலியல் சீர்கேடுகளால் பெண்களே அதிகம் பாதிக்கப்படு கிறார்கள்: சூழலியல் சீர்கேடு நிகழும் போது, பெண்கள் அடிப்படைத் தேவைகளான உணவுக்காகவும் நீருக்காகவும் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே பாலினம் சார்ந்த ஊதிய ஏற்றத்தாழ்வு இருக்கும் சமூகத்தில், சூழலியல் மாசுபட்டுவிட்டதால் காடு, வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஊதியம் குறைக்கப்படுகிறது. பெண்களுக்கான வருமானம், ஊட்டச்சத்து, உடல்நலம் போன்றவை குறைகின்றன, குறைபாடு அடைகின்றன. அவர்களின் சமூக உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. மரபார்ந்த தொல்குடி அறிவு அழிந்துபோகிறது. சூழலியல் பேரிடர்கள் நிகழும்போது, பெண்கள்,குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

2. பெண்களுக்கும் இயற்கைக்குமான பிணைப்பு: இயல்பாகவே ஆண்களை விடப் பெண்கள் இயற்கை மீது அதிகமான பிணைப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் சூழலியல் பெண்ணியவாதி வந்தனா சிவா. இந்தப் பிணைப்பு மரபு சார்ந்ததாகவும், பூடகமானதாகவும் (Mystic) பார்க்கப்படுகிறது. பெண்களுக்கும் இயற்கைக்குமான பிணைப்பு இவ்வாறு புனிதப்படுத்தப்படுவதைச் சில பெண்ணியவாதிகள் எதிர்க்கிறார்கள். அதீத புனிதப்படுத்துதல் மூலம் நிதர்சனங்களிலிருந்து விலகிவிடக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். அதேவேளை, புனிதங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் உணவு, குடிநீர் போன்ற குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொறுப்பு பெண்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளது என்பதால், இயற்கைச் சூழலுடன் பெண்களே அதிகம் பிணைக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கும் இயற்கைக்கு மான பிணைப்பின் இன்னொரு அங்கம், சூழலியல் பாலின இடைவெளி (Eco gender Gap). பெரும்பாலான சூழலியல் பாதுகாப்புப் பொருட்கள் பெண்களை மையப்படுத்தியே விளம்பரப்படுத்தப்படுகின்றன. “குடும்பத்தைப் பெண்கள் கவனித்துக்கொள்வதுபோலவே பூமியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் பெண்களிடமே விடப்படு கிறது" என்கிறார்கள் சூழலியல் பெண்ணியவாதிகள்.

தொடக்கமும் இயக்கங்களும்

சில சூழலியல் பெண்ணிய வாதிகள், ‘இயற்கை அன்னை’ என்பது போன்ற முத்திரைகளைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். என்ன தவறு செய்தாலும் தாய் பொறுத்துக்கொள்வாள் என்கிற எண்ணத்தின் நீட்சி இது என்று சுட்டிக்காட்டுகிறார்கள். பெண்களைப் புனிதப்படுத்தி, அவர்களைப் பொறுமையின் சிகரங்களாகச் சித்தரிப்பதுபோலவே இயற்கையும் சித்தரிக்கப்படுகிறது என்பது அவர்களின் கருத்து. அடக்கி ஆள்பவனாக ஆண் இருந்தாலுமே தொடர்ந்து பொறுமையையும் அன்பையும் புரிதலையும் மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய சகிப்புத்தன்மையைப் பெண்களிடம் மட்டுமல்லாது இயற்கையிடமும் நாம் எதிர்பார்க்கிறோம்.

காட்டு மரங்களைக் கட்டிப் பிடித்தவாறு போராட்டம் நடத்திய மலைவாழ் பெண்களின் ‘சிப்கோ இயக்கம்’ சூழலியல் பெண்ணியத்தின் முக்கிய நிகழ்வு. சூழலியல் சீர்கேடுகளால் கென்யாவில் உணவுக்கும் விறகுக்கும் நீருக்கும் பெண்கள் அதிக தொலைவு நடக்க வேண்டியிருந்தது. அதைக் கவனித்த வங்காரி மாத்தாய், ஆயிரக்கணக்கான மரங்களை நடுவதற்கான ‘பசுமைப் பட்டை’ இயக்கத்தைத் தொடங்கினார். போபால் நச்சு வாயுக் கசிவுக்கு எதிராகப் பெண்கள் நடத்திய போராட்டங்கள், நர்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படு வதை எதிர்த்த மேதா பட்கர் தலைமையி லான போராட்டம் ஆகியவையும் முக்கிய பெண்ணிய சூழலியல் இயக்கங்கள்.

சில விமர்சனங்கள்

சூழலியல் பெண்ணியத்தின் மேல் இரண்டு முக்கிய விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஏற்கெனவே பாலின ஏற்றத்தாழ்வு உள்ள ஒரு சமூகத்தில், சூழலியல் பெண்ணியக் கருத்தாக்கங்கள் ஆண், பெண் என்கிற இருமையை (Binary) அதிகரிக்கின்றன என்பது ஒரு குற்றச்சாட்டு. இதற்கு மாற்றாக, பால்புதுமையினர் கோட்பாட்டைச் (Queer theory) சூழலியல் பாதுகாப்போடு இணைக்கும் பால்புதுமையினர் சூழலியல் பாதுகாப்பு (Queer environmentalism) என்கிற கருத்தியலை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

எல்லாப் பெண்களையும் சூழலியல் பெண்ணியம் ஒரே தட்டில் வைக்கிறது என்பது அடுத்த குற்றச்சாட்டு. சாதி, மதம், இனம், பாலீர்ப்பு என்று பெண்களுக் குள்ளேயே பல அடுக்குகள் உண்டு. மேலை நாடுகளில் இருக்கும் ஒரு பெண்ணும் மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஒரே மாதிரியான சூழலியல் சீர்கேட்டை எதிர்கொள்வதில்லை. இவற்றைச் சூழலியல் பெண்ணியம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. எல்லாச் சமூக, அரசியல் கூறுகளின் சங்கமமாகப் பல பிரிவுகளைச் சார்ந்த சூழலியல் பாதுகாப்பு (Intersectional Environmentalism) தேவை என்பது அவர்களின் வலியுறுத்தல். அதைச் சூழலியல் பெண்ணியவாதிகள் பலரும் ஏற்கிறார்கள்.

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x