Last Updated : 21 May, 2021 03:11 AM

 

Published : 21 May 2021 03:11 AM
Last Updated : 21 May 2021 03:11 AM

அஞ்சலி - கி.ராவின் சினிமாப் பார்வை

கி.ராஜநாராயணன் படம்: புதுவை இளவேனில்

புதுச்சேரிக்கு இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்ற பல தருணங்களில் எழுத்தாளர் கி.ராவுடன் உரையாடியிருக்கிறேன். ஆனால், அவருடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. அவருடைய ‘கிடை’ என்கிற குறுநாவலைப் படமாக்க முடிவு செய்தவுடன், அவரை எப்படி முறையாக அணுகுவது என்பது குறித்து சிந்திக்கலானேன். நான் கேட்டவுடனேயே கதையைத் தூக்கி கொடுத்துவிடுவார் என்றெல்லாம் தோன்றவில்லை.

புதுவையில் அவருடன் நன்கு பழக்கத்திலிருந்த எழுத்தாளர் பிரேமை முதலில் தொடர்புகொண்டு என்னுடைய எண்ணத்தை வெளிப் படுத்தினேன். அவரும் உடனேயே கி.ரா.வைத் தொடர்பு கொண்டார். ‘’அம்ஷன் குமார் என்னுடைய கதையை நன்றாகப் படமெடுப்பாரா?’’ என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பிரேம், ‘அவர் உங்கள் கதையை விரும்புகிறார்.. அவர் நன்றாகப் படம் எடுக்காவிட்டால் அது அவரையும் பாதிக்குமல்லவா?’ என்று கேட்டிருக்கிறார். அதன்பின்னர் பிரேம் என்னிடம், ‘கி.ரா. உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று தெரிவித்தார்.

பயம் காட்டிய நண்பர்கள்

எனது முடிவைக் கேட்ட சில இலக்கிய நண்பர்கள் என்னை எச்சரிக்கும் தொனியில் தங்களுடைய எண்ணங்களைத் தெரிவித்தார்கள். ‘கி.ரா. தன்னுடையக் கதையைக் கொடுக்குமுன் நிறைய கெடுபிடிகள் அவரிடமிருந்து பிறக்கும்’ என்றும் படமெடுத்த பிறகோ, அதை அவரிடம் காட்டிய பின்னர் அவருக்கு நிறைவளித்தால் மட்டுமே அவர் படத்தை வெளியிட முழு அனுமதி தருவார்’ என்றும் ‘தன்னுடைய விருப்பப்படி நடக்காவிடில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டார்’ என்றெல்லாம் கூறினார்கள். அவரிடம் நேராகப் பேசாமல் எந்த முடிவையும் எடுக்க நான் விரும்பவில்லை.

‘சரி’ சொன்ன கி.ரா

நானும் என் மனைவி தாராவும் அவரது புதுச்சேரிக்கு வீட்டுக்குச் சென்றோம். ‘கிடை’ குறுநாவல் என்னை எவ்வாறெல்லாம் கவர்ந்துள்ளது என்பதைக் கூறினேன். படத்தின் திரைக்கதை பல மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பதையும் அவையனைத்தையும் முன்கூட்டியே என்னால் தெரிவிக்க இயலாது என்பதையும் திடமாகக் கூறினேன். அதேபோல், ‘கிடை’ என்கிற பெயரில் படம் இருக்காது என்பதையும் தெரிவித்தேன்.

அவர் என்மீது நம்பிக்கை கொண்டுவிட்டார் என்பதற்கு சாட்சியாக, ‘கிடை’யைப் படமெடுக்கவும் திரைக்கதையில் எனக்குத் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள அனுமதித்தும் தன் கைப்பட ஒரு தாளில் எழுதி கையொப்பமிட்டார். அவர் அதில் இறுதியாக ‘சரி’ என்று ஒரு வார்த்தையைச் சேர்த்தார். அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டேன். “அதுவா? ஒரு விஷயம் முடிஞ்சா அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி ‘சரி’ ன்னு எங்கப் பக்கத்திலே சொல்வோம்.” என்றார். பின்னர் அவரிடம் கதைக்கான ஒரு தொகையை காசோலையாகத் தந்தேன். கி.ரா.வின் மனைவி திருமதி கணவதி அம்மாள் எங்களுக்கு அன்புடன் விருந்தளித்தார்.

ஏன் படமாக்க விரும்பினேன்?

கரிசல் காட்டு மக்களின் மனிதம், அந்தக் கதையில் முற்றாகவே வெளிப்படுகிறது என்பதே ‘கிடை’யை நான் படமாக்க விரும்பியதற்கான அடிப்படைக் காரணம். கரிசல் பிரதேசக் கதை என்பது, பலரும் நினைப்பதைப் போன்று அதன் வட்டார வழக்கு மட்டுமல்ல. அது அதன் ஒரு பகுதிதான். அதிலுள்ள மனிதர்களின் மாண்புகள், அவர்களது பருத்தி விவசாயம், கால்நடை பராமரிப்பு, கீதாரியை முக்கிய கிராம அதிகாரியாக ஏற்கும் சமூக அமைப்பு, பேய் - பிசாசு - குறித்த நம்பிக்கை, நாட்டார் தெய்வங்கள், சாதிப் படிநிலை, பஞ்சாயத்து முறை என்று கரிசல் கிராம வாழ்க்கை முறை அனைத்தும் சேர்ந்தது. கி.ரா.வின் கரிசல் காட்டினர் வேடிக்கையையும் உல்லாசத்தையும் விரும்புகிறவர்கள்.

அதில் தலித் பெண் செவனிக்கும் நாயக்கர் சாதி ஆண் எல்லப்பனுக்கும் இடையேயுள்ள நிறைவேறாக் காதல் சொல்லப்பட்டிருக்கிறது. அதே சமயம், கிராமத்தில் களவு போனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டம் என்கிற பெயரில் நிவாரணத்தின் ஒரு பகுதியாக உதவித்தொகையை பொதுப் பணத்திலிருந்து உடனடியாக எடுத்துத் தந்துவிட்டு, பின்னரே களவு புரிந்தவர் யாரென கண்டுபிடிக்கும் முற்போக்கு, அச்சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் களன் எனக்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு திரைக்கதையை அமைக்கத் தூண்டிற்று. அவ்வாறான மனிதர்கள், தலித் பெண் ஒருத்தியால் நிரந்தரப் பலனை அடையும் பட்சத்தில், அவளுடைய திருமணக் கோரிக்கையை எவ்வாறு ஏற்பார்கள்? அது அவர்களை எவ்விதமான சங்கடத்துக்கு உள்ளாக்கும்? இத்தனையும் ‘கிடை’யின் அடர்த்தியான அம்சங்கள்.

‘ஒருத்தி’ படத்தில் பூர்வஜா, இ.வி.கணேஷ்பாபு

இரண்டு முறை பார்த்தார்!

மொத்தமே இருபத்தைந்து பக்கங்கள் கொண்ட குறுநாவல். அதிலும் இரண்டு பக்கங்கள் ஆடுகளின் பெயர்ப் பட்டியலால் நிரம்பியிருக்கும். இதை கி.ரா.விடம் தெரிவித்தபோது, அவர் தனது வேறு கதைகளிலிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அவருடைய கோபல்ல கிராமம் நாவலிலிருந்து சில சம்பவங்கள் அதில் சேர்க்கப்பட்டன. ‘கிடை’ குறுநாவலின் கதை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடக்கிறது. திரைக்கதையின் காலமோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. ‘கிடை’ நாவல், ‘ஒருத்தி’ என்கிற பெயரில் தயாரானவுடன், அது சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ‘இந்தியன் பனோரமா’ பிரிவுக்குத் தேர்வானது. கி.ரா.வைச் சந்தித்து படம் தேர்வுபெற்றதைச் சொல்லி, படத்தை அவருக்கு திரையிட்டேன். அடுத்தடுத்து இரண்டு முறை பார்த்தார். ஏற்கனவே அவருடைய சிறுகதை ‘கரண்ட்’ என்கிற அதேபெயரில், ஹரிஹரன் இயக்கத்தில் இந்தியில் வெளியாகியிருந்தது. அதில் ஓம்புரி நடித்திருந்தார். அந்தப் படம் பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ‘ஒருத்தி’ அவருக்குப் பிடிக்குமா, அதுவும் அத்தனை மாற்றங்களுடன்?

கி.ராவின் பாராட்டு

இரண்டாம் முறைப் பார்த்து முடித்தவுடன் கி.ரா. ஒருத்தி பற்றி கூறியது என்னை மகிழ்ச்சியில் மட்டுமல்ல; வியப்பிலும் ஆழ்த்தியது. அவர் சொன்னார்: “’நான் ஒரு வீடு கட்டினேன். நீங்கள் அதன்மீது ஒரு மாடி கட்டியிருக்கிறீர்கள்.’’ என்ன அற்புதமான பாராட்டு! தனது கதையின் மூலத்தையும் அதற்கு மேற்பட்ட திரைக்கதை அம்சங்களையும் அதில் கண்ணுற்று அவ்வாறெல்லாம் பாராட்டிப் பேச கி.ரா.வால் மட்டுமே முடியும். கி.ரா.பற்றி மற்றவர்கள் கூறியிருந்ததெல்லாம் அந்த நொடியில் காணாமல் போயின. பொதுவாகவே எழுத்தாளர்கள் தொட்டாற் சிணுங்கிகள். முதலில் கதையைப் படமாக்க அனுமதித்துவிட்டு, திரைவடிவம் பெற்றதும் அதில் அவர்கள் ஆயிரம் குறை காண்பார்கள். சினிமா என்கிற காட்சி ஊடகத்துக்கும் இலக்கியம் என்கிற எழுத்து ஊடகத்துக்குமுள்ள வேற்றுமைகளை உணர்ந்துள்ள எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் குறைவு.

கரிசலின் கோடுகள்

ஆனால், பள்ளிக்கூடத்துக்கு மழைக்காக மட்டுமே ஒதுங்கிய வராகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டிருந்த கி.ரா.வின் சினிமா பார்வை, மிகவும் பாராட்டப்பட வேண்டியது. “ஒரு நல்ல கதைசொல்லி தனக்குள் போன ஒரு கதையை மற்றவருக்கு அப்படியே சொல்லுவதில்லை. அப்படி வெளியிடுவது ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும்தான்.” என்றார் கி.ரா. ஒருத்தியை படமாக தனித்துப் பார்த்தார். அதைக் ‘கிடை’யின் ஜெராக்ஸாகப் பார்க்க அவர் விரும்பவில்லை. கிடை எழுத்து அவருடையது. எப்போது அது வேறு ஊடகத்துக்கு மாற்றப்படுகிறதோ அப்போது அது வேறாகிவிடுகிறது. ’சரி.’ என்று அவர் எழுதியதன் அர்த்தம் அதுதான். திரைக்கதைக்காக இலக்கியத்தை நாடும் கலைஞர்களை அவரது சினிமா புரிதல் மிகவும் ஊக்குவிக்கும்.

கி.ரா.விரும்பியிருந்தால் ஒரு சிறந்த திரைக்கதாசிரியராகவும் ஆகியிருக்க முடியும். அவரது கதைகள் பெரும்பாலானவை திரைப் படங்களுக்கு ஏற்றவை. அவரது கதைசொல்லி மரபு வெகுஜனம் நோக்கியது. அவரது கதைகளில் வரும் சம்பவங்கள் பல தமிழ்ப் படங்களில் இடம்பெற்றிருப்பதை அவரது வாசகர்கள் அறிவார்கள். கிராமியப் படங்கள் அதிக அளவில் தமிழில் வெளிவந்து அவை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் மனோபாவம் உருவாகியிருக்கிறதென்றால் அதற்கு கி.ரா.வின் கதைகளும் ஒரு முக்கிய காரணம். திரையில் நாம் காண்கிற எல்லா நிலப்பரப்புகளிலும் கரிசலின் கோடுகள் விழுந்துள்ளன.

கட்டுரையாளர், எழுத்தாளர், திரைப்பட, ஆவணப்பட இயக்குநர்.

தொடர்புக்கு: amshankumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x