Published : 25 Dec 2015 12:32 PM
Last Updated : 25 Dec 2015 12:32 PM

சினிமா ரசனை 29: இவரது துணிச்சல் யாருக்கு வரும்?

இன்று கிறிஸ்மஸ். இந்தத் தேதியில், இந்தத் தொடரில் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் படம் ஒன்று வெளியாகிறது. இப்படம் வெளியாவது அமெரிக்காவில் மட்டுமே. உலகமெங்கும் ஜனவரியில்தான் வருகிறது. திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்கர்கள் வென்றிருக்கும் க்வெண்டின் டாரண்டினோவின் ‘ஹேட்ஃபுல் எய்ட் ’ (The Hateful Eight’) படம்தான் அது.

இந்தப் படம் Ultra 70MM என்ற வடிவில் வெளியாவதைப் பற்றி நாம் முதலிலேயே பார்த்துவிட்டோம். உலகில் இந்த வடிவில் இதுவரை பத்தே படங்கள்தான் வந்துள்ளன. இது பதினோராவது. இதற்கு முன்னர் வந்துள்ள அல்ட்ரா 70MM படங்களைப் படமாக்கிய அதே லென்ஸ்களில்தான் இந்தப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. இதுதான் கடைசியாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், படச்சுருளில் படமெடுப்பது உலகம் முழுதுமே அருகிவிட்ட காலம் இது. அதிலும் இருப்பதிலேயே மிகவும் அகலமான ஃப்ரேம் ரேட்டில் (2:76:1) வெளியாவதே இந்த அல்ட்ரா 70MM-ன் முக்கியமான அம்சம்.

அமெரிக்கர்களுக்கு ரோட் ஷோ!

கிறிஸ்மஸ் அன்று, அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 70MM தியேட்டர்களில் ரோட் ஷோ என்ற பெயரில் ஒரு முக்கிய நிகழ்வாக இப்படம் வெளியிடப்படுகிறது. ரோட் ஷோ என்றால், பழைய காலத்தில் நம்மூரில் வெளியான ஆங்கிலப் படங்கள் எப்படித் திரையிடப்பட்டன? முதலில் பல நிமிடங்களுக்கு நீளமான டைட்டில் இசை வரும். அதன் பின்னர் படம் ஆரம்பிக்கும்.

பாதியில் ஒரு நீண்ட இடைவேளை. அதன் பின் படம் தொடர்ந்து முடியும். Gone with the Wind, El Cid, Bridge on the River Kwai, Benhur, The Ten Commandments, Lawrence of Arabia, Cleopatra, My Fair Lady, Doctor Zhivago போன்ற காவியங்களில் இதை நன்றாகக் காண முடியும். இந்த நீளமான தொடக்க இசைக்கு Overture என்று பெயர். பழைய ஹாலிவுட் படங்கள் உலகம் முழுதுமே இப்படித்தான் திரையிடப்பட்டன. இதன் பின்னர்தான் அங்கே இந்தத் தொடக்க ஆர்கெஸ்ட்ரா இசை, இடைவேளை முதலியன அகற்றப்பட்டன (நம்மூரில் இன்னும் இந்த இடைவேளை அப்போதிலிருந்தே இருந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்).

இத்தகைய, பழைய ஹாலிவுட் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் அதேபோன்ற நீளமான தொடக்க இசை, நீண்ட இடைவேளை ஆகியவற்றை இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று ‘The Hateful Eight’ படத்தின் அமெரிக்க வெளியீட்டில் காண முடியும். படத்தின் இசை, உலகத் திரையிசையின் ஜாம்பவானான என்னியோ மாரிகோனி (Ennio Morricone) என்பதால், அவசியம் அட்டகாசமான overtureஐயும் பின்னணி இசையையும் இப்படத்தில் கேட்க முடியும்.

இயக்குநரைக் கவர்ந்தது ஏன்?

‘ஹேட்ஃபுல் எய்ட்’ படத்தில் மட்டும் ஏன் இந்தப் பழைய பாரம்பரியத்தை டாரண்டினோ தொடர விரும்பினார்? அவரைப் பொறுத்தவரை, டாரண்டினோ ஒரு சினிமா வெறியர். அவரது சிறு வயதில் பார்த்த காவியங்கள் அவரது மனதை விட்டு இன்னும் அகலவில்லை. எனவே, Benhur, How the West was Won, Mutiny on the Bounty, The Greatest Story Ever Told, Khartoum முதலான அல்ட்ரா 70MM படங்கள் அவருக்கு அளித்த அனுபவத்தை இப்போது தனது ரசிகர்களுக்குத் தர நினைத்தே இந்தப் பழைய, வழக்கொழிந்துபோன பாரம்பரியத்தைத் தற்போது அமெரிக்காவில் அவர் மீண்டும் கொண்டுவரக் காரணம்.

திரையரங்குக்குள் நுழைந்து விளக்குகள் அணைக்கப்பட்டபின் மெதுவாகத் துவங்கி ராஜகம்பீரமாக ஒலித்து அனைவரையும் கவரும் நீண்ட துவக்க இசை, படம் ஓடிக்கொண்டிருக்கும்போது Intermission என்று அறிவிக்கப்பட்டு, படத்தில் ஆடியன்ஸ் ரசித்த முதல் பாதியைப் பற்றிப் பேசி விவாதிக்க அளிக்கப்படும் நிமிடங்கள், மறுபடியும் மணி ஒலித்த பின்னர் துவங்கும் இரண்டாம் பாதி, பின்னர் படத்தின் முடிவு என்ற அட்டகாசமான அனுபவத்தைப் பல ஆண்டுகள் கழித்து இவ்வாறாக டாரண்டினோ அவரது ரசிகர்களுக்குப் பிரத்தியேகமாக அளிக்கப்போகிறார். இது கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டுமே. அதன் பின் படம் ஜனவரியில் உலகமெங்கும் வெளியாகும்போது படத்தின் தொடக்க இசை, இடைவேளை முதலியன இருக்காது.

நமக்குப் புதிதல்ல!

இந்தியாவில் மட்டும் சினிமா தொடங்கிய காலகட்டம் முதல் இந்த இடைவேளை என்ற அம்சம் இருந்துகொண்டிருப்பதால் நமக்குப் பெரிதாக இதில் எதுவும் தெரியப்போவதில்லை என்பது வேறு விஷயம். இடைவேளையே இல்லாத ஹாலிவுட் படங்களிலேயேகூட இடைவேளையை வலிந்து சொருகுபவர்கள் ஆயிற்றே நாம்?

இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு வருடத்துக்கும் முன்னரே இணையத்தில் கசியவிடப்பட்டதையும், அதனால் டாரண்டினோ படம் எடுக்கும் எண்ணத்தையே கைவிட்டதையும், பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறுபடியும் படம் எடுக்கச் சம்மதித்ததையும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். இதன் பின்னர் டாரண்டினோ தனது திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்தார்.

ஆனால், இதில் புதிய விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தின் கிறிஸ்மஸ் வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்னரே, படத்தின் திரைக்கதையை டாரண்டினோ இணையத்தில் இலவசமாக அனைவரும் படிக்கும்வண்ணம் வெளியிட்டுள்ளார். யோசித்துப் பாருங்கள். உலகெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஹாலிவுட் படத்தின் திரைக்கதை, படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே இணையத்தில் அந்தப் படம் எடுத்தவர்களால் வெளியிடப்படுகிறது என்றால் அது எத்தனை துணிச்சலான முயற்சி? அதை டாரண்டினோவும் தயாரிப்பாளர்களான வெய்ன்ஸ்டீன் சகோதரர்களும் துணிச்சலாக மேற்கொண்டுள்ளனர்.

இதனால் என்னைப் போன்ற பல திரைக்கதை ஆர்வலர்களுக்கு ஒரு புதையல் கிடைத்ததுபோன்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பழைய திரைக்கதையையும் புதிய திரைக்கதையையும் ஒப்பிட்டுப்பார்த்து, எங்கெல்லாம் திரைக்கதை மாற்றப்பட்டுள்ளது, எங்கெல்லாம் ஏற்கெனவே இருந்த காட்சிகள் புதிதாக மெருகேற்றப்பட்டுள்ளன என்பதையெல்லாம் கவனித்தால், அதுவே திரைக்கதையை எழுதுவதற்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இதுவரை வெளியான டாரண்டினோ படங்களிலேயே இதுதான் நீளமான படம்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள். அதிலும் இரண்டே லொகேஷன்கள். இருப்பினும், படம் மிகவும் சுவாரஸ்யமாகச் செல்கிறது என்பதைப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த மிகச் சில ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதைப் படிக்கும் திரை ஆர்வலர்கள், இந்தப் படத்தைத் தவறவிட வேண்டாம். அதிலும் இதை நீங்கள் படிக்கும் நாளுக்கு மறுநாள் காலையில்தான் படத்தின் கிறிஸ்மஸ் வெளியீடு. Ultra 70MMமில் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கே. உலகிலேயே அன்று ஒருநாள்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x