Published : 20 May 2021 03:11 am

Updated : 20 May 2021 09:18 am

 

Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 09:18 AM

சண்டிகேஸ்வரரின் அவதாரத் தலம்

chandikeshwarar

மு.வெ.சம்பத்

சோழ மன்னர்கள் முடிசூடும் ஐந்து தலங்களில் முதன்மையானதென பெரிய புராணம் கூறும் திருத்தலம் சேங்கனூர் சக்திகிரீஸ்வரர் திருக்கோயில் ஆகும். காவிரி வடகரையில் அமைந்துள்ள 41- வது திருமறைத்தலமாகக் கருதப்படுகிறது. மிகவும் பழமையான இந்தத் தலத்துகு ராஜகோபுர அமைப்பில்லை. ஆனால் நுழைவாயிலில் சிறு விமான அமைப்பில் சிவபெருமான், அம்பாள் சுதைச் சிற்பமாக இருக்கிறார்கள்.

உள்ளே கருவறையில் லிங்க வடிவில் சேங்கனூர்  சக்திகிரீஸ்வரர் அருள்பாலிக்கின்றார். நாகாபரணக் குடை அலங்காரத்தில் காட்சி தரும் சக்திகிரீஸ்வரர் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவர் முன்பு கைகூப்பி நிற்கையில் ஒரு விதமான ஈர்ப்பு ஏற்பட்டு மனம் அமைதியடைகிறதென பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.


இதற்கடுத்து நாம் தரிசிப்பது தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கும் அம்பாள்திருவுருவம். இந்த அம்பாள் திருநாமம் சகிதேவி யாகும். நின்ற கோலத்தில் புன்னகை பூத்த திருமுகத்துடனும், நான்கு கரங்களுடனும் காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் மலரேந்தியும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறார்.

அனைத்து சிவதரிசனங்களின் பலன்

அடுத்து நாம் காண்பது சண்டிகேஸ்வர நாயனார் சன்னிதியாகும். இந்தத் தலம் சண்டிகேஸ்வர நாயனார் அவதாரம் எடுத்த தலமாகக் கருதப்படுகிறது. சோழ தேசம் என்னும் சிவசாம்ராஜ்யத்தில் திருவிடை மருதூர் மகாலிங்க ஸ்வாமியின் சண்டேஸ்வர நாயனார் ஸ்தானம் ஆகும். குமரி முதல் இமயம் வரையில் உள்ள அனைத்து சிவத்தலங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்த புண்ணிய பலனை சேங்கனூர் சண்டிகேஸ்வர நாயனாரை தரிசனம் செய்தால் மட்டுமே கிடைக்கும். சண்டிகேஸ்வர நாயனார் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் காட்சி தருகின்றனர். பரிவாரத்தில் கன்னிமூலையில் சங்கடஹர கணபதி, காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், காசி விநாயகர், சண்முக சுப்ரமணியர், மஹாலட்சுமி, சுப்ரமணிய சுவாமி முதலிய தெய்வத் திருமேனிகள் அருள்பாலிக்கின்றனர். காமிக ஆகமப்படி சூரியன், சந்திரன் கோயிலின் ஈசான பாகத்தில் அருள்பாலிக்கின்றனர். இரட்டை பைரவராக இத்தலத்தில் பைரவர் காட்சி தருகிறார். இழந்தவற்றை மீட்கும் அனுக்கிரகம் செய்பவராக திகழ்கிறார். நடராஜரும் இத்தலத்தில் காட்சி தருகின்றார்.

சதுர்த்தியன்று கன்னிமூலையி லிருக்கும் சங்கடஹர கணபதிக்கு 21 தேங்காய்கள் உடைத்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் நீங்குகிறதாம். சஷ்டியன்று சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தால் மகப்பேறு பாக்கியம் கிட்டுகிறதாம்.

இங்கு அருள்புரியும் ஈசன் ‘பதவி தரும் பிரமன்’ என்ற பெயரில் வணங்கப்படுகிறார்.

சண்டிகேஸ்வரருக்கு சிவபக்தர்களுக்குள் முதல்வர் அதாவது சிவபக்தராஜன் என்ற பதவியை அருளிய அனுக்கிரக மூர்த்தியாக இங்கு ஈசன் இருப்பதால் நவக்கிரக சன்னதி இத்தலத்தில் தனியாக அமையவில்லை. இங்குள்ள ஈசனை வணஙகுவதாலேயே நவக்கிரக தோஷங்கள் நீங்குகிறதாம்.

தலவிருட்சம்

நல்லத்தி மரமே இத்தலத்தின் தலவிருட்சம் ஆகும். இம்மரத்தினடியில்  சண்டிகேஸ்வரருக்கு ஈசன் தரிசனம் கொடுத்ததால் இந்த மரமே தலவிருட்சமானது. பிரதி மாதம் சண்டிகேஸ்வரரின் திரு நட்சத்திரமான உத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிரதி மாத பிரதோஷம், அன்னாபிஷேகம், நடராஜர் அபிஷேகம் விமரிசையாக நடைபெறுகின்றன. கல்லினால் செய்த இரு யானைகள் படிக்கட்டுகள் முன்னே ஒய்யாரமாக நின்று வரும் பக்தர்களை வரவேற்கின்றன. படிக்கட்டுகள் ஏறியவுடன் இரு புறமும் சண்டிகேஸ்வரரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளின் வண்ணப்படங்களை நாம் கண்டு அனுபவிக்கலாம்.


சண்டிகேஸ்வரர்அவதாரத் தலம்சோழ மன்னர்கள்சிவதரிசனங்கள்Chandikeshwarar

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

the-hundred

இனி செஞ்சுரிதான்!

இணைப்பிதழ்கள்
weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x