Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

புதிய கண்டுபிடிப்புகள்: வட்டமிடும் கடல் ஆமைகள்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் கொமொரோஸ் தீவுகளின் அருகே வாழும் பேராமைகள் (Chelonia Mydas) குறித்து ஆய்வு செய்துவந்தார் டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர் டொமோகோ நராசாகி.

வளர்ப்பு நாயை இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி விட்டாலும் வீட்டுக்கு வந்துவிடும். அதுபோல ஓர் ஆமையைப் பிடித்து, வேறொரு தீவில் விட்டால் அதனால் தன் வாழிடத்துக்கு வர முடிகிறதா என்று பரிசோதனை செய்ய முடிவெடுத்தார்.

ஆமையின் முதுகில் நுண்ணிய ஜிபிஎஸ் வயர்லெஸ் கருவியைப் பொருத்தினார். ஆமை செல்லும் இடத்தை எல்லாம் இந்தக் கருவி கூகுள் மேப் போன்று பதிவு செய்து அவருக்குக் காட்டும். இதன் மூலம் ஆமையின் முப்பரிமாணப் பாதையைக் கண்காணிக்க முடியும்.

வட்டமிடும் ஆமை

கடலில் நீந்திச் சென்ற ஆமை திடீரென்று சுற்றிச் சுற்றி வட்டமிட்டு, பிறகு மீண்டும் தன் இருப்பிடம் நோக்கி நீந்த ஆரம்பித்ததைக் கண்டு வியந்தார் நராசாகி. வழி முழுவதும் பல தடவை ஆமை வட்டமிட்டுக்கொண்டே சென்றது. 76 முறை இப்படி வட்டமிட்டது.

ஆமை மீது பொருத்திய கருவி கழன்று கடலில் மிதக்கிறது என்றும் அதனால்தான் வட்டமிடுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது என்றும் முதலில் கருதினார் நராசாகி. ஆனால், கரைக்குத் திரும்பிய ஆமையின் மீது கருவி அப்படியே இருந்தது.

ஏன் இலக்கின்றி வட்டமிடுகிறது என்று அவருக்குத் தெரியவில்லை. தான் கண்ட வியப்பான இந்த நிகழ்வை, சக ஆய்வாளர்களுடன் பகிர்ந்துகொண்டார் நராசாகி. அப்போது அவர்களும் பல்வேறு நீர்வாழ் பாலூட்டிகள் விநோதமாக வட்டமிடுவதைப் பதிவுசெய்து வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.

டொமோகோ நராசாகி

கடந்த பத்து ஆண்டுகளாகப் பல்வேறு கடல்வாழ் விலங்குகளின் இயக்கத்தை ஆய்வாளர்கள் பதிவுசெய்த தரவுகளைத் தொகுத்து, பகுத்துப் பார்த்தார். கடல் ஆமைகள், சுறாக்கள், அரசப் பென்குவின்கள் போன்ற சுமார் பத்து கடல்வாழ் உயிரினங்கள் திடீரென்று வட்டமிடுவதை உறுதி செய்துகொண்டார்.

ஹவாய் தீவுகளின் அருகே நான்கு புலிச்சுறாக்களில் திரட்டப்பட்ட தரவுகளில் 272 வட்டமிடும் நிகழ்வுகளைக் கண்டார். 2-30 தடவை இவை வட்டமிட்டன. சராசரியாக 9.4 மீட்டர் ஆழத்தில் 5, 6 நிமிடங்கள் வட்டமிடுதல் நிகழ்ந்தது.

ஏன் வட்டமிடுகின்றன?

கடல் விலங்குகள் வட்டமிடுவது வெவ்வேறு இலக்குகளைக் கொண்டிருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இரையைத் தேடிச் செல்லும்போது வரிப்புலியன் சுறா வட்டமிடுகிறது. ஹம்ப்பேக் திமிங்கிலங்கள் இரையைச் சுற்றி வட்டமிடுகின்றன என்று தெரிந்தது.

ஆனால், இரையைத் தேடுவது மட்டுமே கடல்வாழ் உயிரினங்களின் வட்டமிடும் போக்கை விளக்கப் போதுமானதாக இல்லை. குவியரின் பீக் திமிங்கிலம் கடலடியிலிருந்து மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு மேலே வரும்போது, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல நேர்கோட்டில் செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் ஆழத்தை அடையும்போது சுழல்வட்டப் பாதையில் பயணிக்கிறது. 3-6 முறை வட்டமிட்டுதான் கடல் மட்டத்தை அடைந்து மூச்சு விடுகிறது.

ஆழ்கடல் அழுத்தத்தில் கடல்வாழ் பாலூட்டிகளின் சுவாசக் காற்றில் உள்ள நைட்ரஜன் ரத்தத்தில் கலந்துவிடும். சடாரென்று கடலின் மேலே வந்துவிட்டால் கடல் மட்ட காற்றழுத்தத்தில் ரத்தநாளங்களில் நைட்ரஜன் குமிழிகள் உருவாகி, உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதனால் மேலே வரும்போது வட்டமிட்டு, ரத்தத்தில் கலந்துள்ள நைட்ரஜனை அகற்ற முயற்சி செய்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அரசப் பென்குவின்கள் கடல் மட்டத்துக்கு அருகே வரும்போது வட்டமிடுகின்றன. குறிப்பிட்ட இடத்தில் வட்டம் அடிப்பதன் மூலம் தன்னுடன் ஆழ்கடலுக்குள் சென்ற சக பென்குவின்களின் வருகைக்குக் காத்திருக்கும் விதமாக இவை வட்டமிடுகின்றன.

பூமியின் காந்தப் புலத்தை உணர்ந்து ஆமைகள் திசைகள், இருப்பிடத்தை அறிந்துகொள்கின்றன என்று ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. ஆமை போன்ற கடல்வாழ் விலங்குகள் தமது காந்த வழித்தடச் செயலியைப் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் வட்டமிட்டுட்டுச் செல்கின்றன என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x