Last Updated : 12 Dec, 2015 12:54 PM

 

Published : 12 Dec 2015 12:54 PM
Last Updated : 12 Dec 2015 12:54 PM

வெள்ளப் பாதிப்பு: ஏன் மூழ்கியது சென்னை?

எந்த நெறிமுறைகளும் இல்லாத நகர விரிவாக்கம், நம் ஏரிகளையும், சதுப்பு நிலங்களையும் விழுங்கியிருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழைக்குச் சென்னை தடுமாறிய நிலை எப்படி உண்டானது என்று பார்ப்போம்.

பலத்த மழையால் சென்னையில் உருவான பேரிடருக்குக் காரணம் மோசமான நகரத் திட்டமிடல்தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நகரத்தின் நீர்நிலைகளான ஆறுகள், ஏரிகள், சதுப்புநிலங்களை மனசாட்சியில்லாமல் அழித்து, அவற்றின் மீது ‘ரியல் எஸ்டேட்டை’வளர்ச்சியடையச் செய்ததற்கான விலையைத்தான் இப்போது நாம் கொடுத்திருக்கிறோம். கடலோர ஒழுங்கமைப்பு மண்டலத்தின் (CRZ) விதிகளை மீறுதல், மோசமான கட்டமைப்பு நடைமுறைகள், குடிமை உள்கட்டமைப்பின் அச்சுறுத்தும் நிலவரம் போன்றவற்றின் மீது இப்போது குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், அதைவிடப் பெரிய பிரச்சினைகள் இந்தப் பேரிடருக்குப் பின்னால் இருக்கின்றன.

அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மக்கள் தொகை, நிலப்பரப்பை விரிவாக்கும் நிலைக்குச் சென்னை நகரைத் தள்ளியது. அதன் விளைவாகவே சென்னை நிலப்பரப்பின் எல்லைகள் விரிவடைந்தன. நகர விரிவாக்கம் போதிய திறனுடனும், நிலைத்தன்மையுடன் இருக்கும்படி, உள்கட்டமைப்பு மேம்பாட்டை உருவாக்குவதில்தான் தற்போதைய சவால் அடங்கியிருக்கிறது.

விரைவான தீர்வு உதவாது

நாம் நிரந்தர தீர்வுகளைப் புறக்கணிக்கிறோம். அதற்கு மாற்றாக, ‘பூச்சு வேலை’ தீர்வுகளைக் கையாள நினைக்கிறோம். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA), தனிப்பட்ட நில ஒப்புதல்கள் வழங்கும் அமைப்பாக மட்டுமல்லாமல் பெரிய திட்டமிடல் அதிகாரத்துடன் செயல்படும் அமைப்பாக மாற வேண்டும். “இந்திய நகரத் திட்டமிடுபவர்கள் நிறுவனம் (Institute of Town Planners of India), ‘இந்திய கட்டிடக் கலைஞர்கள் நிறுவனம்’(Indian Institute of Architects) போன்றவற்றுடன் இணைந்து சிஎம்டிஏ தன்னை மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம். “கேரளா மாநிலம், இந்த முறையைத் தீவிரமாகப் பின்பற்ற தொடங்கியிருக்கிறது” என்று சொல்கிறார் நகரத் திட்டமிடுபவரும், கட்டிடக்கலைஞருமான சேவியர் பெனிடிக்ட்.

அரசு வளர்ச்சிக்காகத் திட்டமிடும்போது, சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூக இலக்குகள் என்ற மூன்று காரணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இது எல்லாப் பகுதிகளிலும் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

நகரத்துக்குள்ளேயே நடக்கும் அடர்த்தி அதிகரிப்பும், எல்லை விரிவாக்கமும், சிறந்த இணைப்புகளும் அறிவியல்பூர்வமாக நடக்க வேண்டும். அதுதான் நமக்குமுன் இருக்கும் வழி. இந்திய கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுஜாதா சங்கர், “பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியதும், அவை தங்களுடைய உள் இணைப்புகளைத் தொலைத்ததும்தான் தற்போதைய சென்னையின் நிலைமைக்குக் காரணம். நம் ஆறுகளும், ஏரிகளும் வளமுடன் இருக்க வேண்டுமென்றால், அவற்றின் நீரோட்டம் மதிக்கப்பட வேண்டும். அத்துடன் காலியிடங்கள் குறைந்து, பெரிய கட்டிடங்களை எழுப்புவது இப்போது அதிகரித்திருக்கிறது. பருவமழையின்போது நடக்கும் எந்தவொரு கட்டிட வேலையும் அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்” என்கிறார்.

ஒருங்கமைந்த பெருந்திட்டம் தேவை

கட்டிடங்கள் கட்டப்படும் முறைகளைப் பற்றி, பல் அண்ட் வெங்கங் ஆர்கிடெக்ட்ஸ் முதன்மைக் கட்டிடக்கலைஞர் பல் முன்ஷி இப்படிச் சொல்கிறார், “ ஒன்று, நாம் மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களைப் பின்பற்றி ‘ஃப்ளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்’(FSI) மூலம் செங்குத்தான வளர்ச்சியைப் பாதுகாப்பாக அடைய வேண்டும். அப்படியில்லாவிட்டால் பக்கவாட்டில் வளர்ச்சியடைய வேண்டும். சென்னையில் வளர்ச்சி என்பது ஏற்றத்தாழ்வுகளுடன்தான் இருக்கிறது. இங்கே பொருளாதாரமும், வாய்ப்புகளும்தான் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.

இயற்கை, சுற்றுச்சூழல், நகரவிரிவாக்கம் என எல்லாற்றையும் சமமாக இணைக்கும் முழுமையான அணுகுமுறைகளுடன் ஒருங்கமைந்த பெருந்திட்டம் எதுவும் இல்லை”. குடியிருப்புகளையும், வணிகரீதியான திட்டங்களையும் தாழ்வான பகுதிகளில் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே அமைத்தாலும், மழைநீரும், கழிவுநீரும் இருமடங்கு திறன் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

“இயற்கை, நீரை அருகில் இருக்கும் ஏரிகளிலும், நீர்நிலைகளிலும் சென்று சேர்க்கும்படியான இயற்கைப் பாதையை எப்போதும் வழங்குகிறது. ஆனால், அந்தப் பாதைகளைப் புறக்கணித்தும், தடுத்தும், அழித்தும் நமக்கு நாமே ஆபத்தை வரவழைத்துக்கொள்கிறோம்” என்கிறார் முன்ஷி. இதனால்தான் சென்னை இந்த ஆண்டு மோசமாகப் பாதிக்கப்பட்டது.

“கட்டுநர்கள் கட்டிடம் கட்டும்போது கட்டாயமாகக் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நிலப் பயன்பாட்டுத் திட்டம், கடலோர ஒழுங்கமைப்பு மண்டலத்தின் விதிகள், கட்டிடத்தின் உயரம், பின்னடைவுகள் போன்ற எல்லா அம்சங்களையும் கட்டுநர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஜேஎல்எல் தேசிய இயக்குநர் ஏ. சங்கர்.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகச் சில பகுதிகளை உள்ளாட்சி அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. ஆனால், அதன் வழிகாட்டுதல்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டின் (EIA) அறிக்கைகள் பாரபட்சமின்றித் தயாரிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு வழங்கும் தடையில்லாச் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களால் பயமின்றி, சலுகைகள் இன்றி வழங்கப்படுன்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.

உள்ளூர்களைப் பின்பற்றுதல்

நகரத்தின் திட்டமிடல்கள் வெள்ளத்தில் மிதந்ததை நாம் எல்லோரும் பார்த்தோம். கற்பனை செய்ய முடியாத இழப்பைச் சென்னை சந்தித்திருக்கிறது. போதாக்குறைகளுடனான சமநிலையற்ற வளர்ச்சியும், மோசமான உள்கட்டமைப்பு திட்டமிடலும்தான் அதற்குக் காரணம்.

நம்முடைய பாரம்பரியமான வட்டாரக் கட்டிடக்கலையைப் பின்பற்றுவது இதற்கு ஒரு சிறந்த தீர்வு. “தமிழ்நாட்டுக் கிராமங்களில் இருக்கும் பாரம்பரியமான வீடுகளில் அடிப்பீடம் எழுப்பப்பட்டிருக்கின்றன. தெருக்கள் எல்லாம் கோயில் குளங்களுடனும், ஊர் குளங்களுடனும் இணைக்கப்பட்டிருந்தன. நம்முடைய நவீன கல்விமுறை மேற்கத்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அதனால்தான் நாம் நம்முடைய வட்டார வடிவமைப்புகளையும், கொள்கைகளையும் கட்டிடக் கலையிலும், பொறியியலிலும் பயன்படுத்த மறந்துவிட்டோம். இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது” என்கிறார் பெனிடெக்ட்.

சூறாவளிகள், புயல், சுழற்காற்று போன்றவை உலகம் முழுவதும் நடக்கின்றன. “ஆனால், அறிவார்ந்த வடிவமைப்பு, சீரான பொறியியல் கொள்கைகள், ஒழுங்கான பராமரிப்பு போன்றவை இந்த மோசமான சூழலை கட்டிடங்கள் சமாளிக்க உதவும்” என்கிறார் முன்ஷி.

உதாரணத்துக்கு, ஹாங் காங் சூறாவளியால் ஒவ்வொரு ஆண்டும் கடுமையாகப் பாதிக்கும். அங்கே, ஒரு மணிநேரத்துக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தடன் காற்று வீசும். ஆனால், அங்கேயிருக்கும் கட்டிடங்கள் அந்தச் சூறாவளியைத் தாங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சுற்றுச்சூழல் சமச்சீரின்மை

கட்டிடம் கட்டுபவர்களுக்குத்தான் இதில் அதிகமான பங்கிருக்கிறது என்றாலும், வீட்டை வாங்குபவர்களும் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். நியாயமற்ற கட்டுநர்கள் அத்துமீறித்தான் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். தற்போது ஏற்பட்ட பருவமழை வரும் ஆண்டுகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

“நம் நகரத்தின் சூழலியல் மற்றும் புவியமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியம். எங்கேங்கே நீர்நிலைகள் இருந்தன என்பதைப் பற்றி நமக்குப் பெரிய ஆதாரமில்லை. பருவமழையின்போதுதான், நாம் நீர்நிலைகளை வணிகப் பகுதிகளாக மாற்றியிருக்கிறோம் என்பது தெரியவருகிறது” என்கிறார் இஎஃப்ஐ அருண் கிருஷ்ணமூர்த்தி.

எம்ஆர்டிஎஸ் போன்ற பெரிய திட்டங்கள்கூட நீர்நிலைகளை ஆக்கிரமித்துத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அடையாறு சிற்றோடையில் இருந்து கோவளம் சிற்றோடைவரை நீண்டிருந்த தெற்கு பக்கிங்காம் கால்வாய் இந்தத் திட்டத்துக்காகக் குறைக்கப்பட்டது. இந்தமாதிரி பெரிய உள்கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யும்போது, அரசு அதன் விளைவுகளை அறிந்து செயல்படுத்தவேண்டும்.

உதாரணத்துக்கு, கூவம் ஆற்றைப் பற்றி பல ஆண்டுகளாக நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். அதன் பழைய அழகை மீட்டெப்பது என்பது கஷ்டமான விஷயம்தான். ஆனால், அதைச் சாதிக்கக்கூடிய சாத்தியங்களும் இருக்கவே செய்கின்றன. “உலகம் முழுவதும் நீர்நிலைகள் மதிக்கப்படுகின்றன. நகரத்தின் சுவாசமாகப் போற்றப்படுகின்றன. நமக்கு ஒத்தேவராத பல மேற்கத்திய கோட்டுப்பாடுகளை வலிந்து நாம் பின்பற்றிவருகிறோம். அப்படியிருக்கும்போது, அவர்களின் இந்த நீர்நிலைகளை மதிக்கும் பண்பையும் நாம் பின்பற்றலாமே?” என்கிறார் சுஜாதா சங்கர்.

தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: என். கௌரி

படங்கள்: ஜோதி ராமலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x