Published : 13 May 2021 03:11 am

Updated : 13 May 2021 11:24 am

 

Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 11:24 AM

நடந்தாய் வாழி!

nadathaai-vaazhi

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் பல நாக ரிகங்களின் தொட்டில்களாக நதிகளே இருந்திருக்கின்றன. புவியியல் ரீதியாகவும் நதிகளின் முக்கியத்துவம் ஒவ்வொரு நாட்டின் வளத்துக்கும் நலத்துக்கும் பெரும் பங்களிப்பை அளிக்கின்றன.

நதிகளின் புனிதத்தைப் போற்று வதோடு நதிகளை வழிபடும் மரபும் நமக்கு உண்டு. இந்தியாவில் பாயும் முக்கிய நதிகளின் பெயர்களையும் அதன் பெருமைகளையும் டாக்டர் கன்னிகேஸ்வரன், ஒரே பாட்டின் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார். இவர் அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தில் வசிப்பவர்.


கன்னிக்ஸ் என்று அழைக்கப்படும் இவரின் பூர்விகம் திருவண்ணாமலை. கணினித் துறையில் பேராசிரியராக கன்னிக்ஸ் இருந்தாலும், அவரின் இன்னொரு முகம் இசை. அமெரிக்காவில் சேர்ந்திசை வடிவத்தைப் பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது இவர் வழங்கிய `முரசு’ என்னும் சிம்பொனி இசை, உலகம் முழுவதும் இசை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

1984ல் மெட்ராஸ் ஐ.ஐ.டியில் படித்தவர் கன்னிக்ஸ். 35 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடன் படித்த பழைய மாணவர்களின் சந்திப்புக்காக மெட்ராஸ் ஐஐடியில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கூடியிருக்கின்றனர். அப்போது ஐ.ஐ.டி. வளாகத்தில் செயல்படும் `இண்டர்நேஷனல் சென்டர் ஃபார் க்ளீன் வாட்டர் (ICCW)’ என்னும் அமைப்புக்காக நீர் மேலாண்மை சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிடும் யோசனையை கன்னிக்ஸ் தெரிவித்திருக்கிறார். அதைச் செயல்படுத்துவதற்குள் கரோனா பெருந்தொற்றின் பிடியில் உலகம் சிக்கிக்கொண்டது. தற்போது நதிகளின் பெருமையை மட்டுமில்லாமல் அவற்றை மனிதர்கள் அசுத்தப்படுத்துவதையும் சீரழிப்பதையும்கூட பளிச்சென்று உணர்த்தும் பாடலைப் பாடி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்காவி லிருக்கும் கன்னிகேஸ்வரனிடம் தொலைபேசி மூலம் பேசினோம். “புவி நாளைக் கொண்டாடும் வகையில் கடந்த ஏப்ரல் 22 அன்று `ரிவர்ஸ் ஆஃப் இந்தியா’ என்னும் ஆறு நிமிட காணொலியை யூடியூபில் `இண்டர்நேஷனல் சென்டர் ஃபார் க்ளீன் வாட்டர் (ICCW)’ என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ரத்த நாளங்களாக குறுக்கும் நெடுக்கும் பாய்ந்துகொண்டிருக்கும் நதிகளின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டியது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை நாம் அசுத்தப்படுத்தாமல் இருப்பதும் முக்கியம் என்பதை இந்தப் பாட்டின் மூலமாக உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறோம். நதிகளை வாழ்த்தும் இந்தப் பாடலைத் தொடர்ந்து விரைவில் மழையை வரவேற்கும் ஒரு பாடலையும் அடுத்து வெளியிட இருக்கிறோம்” என்றார்.

59 நதிகள்

இந்தியாவில் பாயும் முக்கிய நதிகளான கங்கை, யமுனை, சிந்து, காவேரி, நர்மதா, கோதாவரி உள்ளிட்ட 59 நதிகளின் பெயர்கள் இந்த ஒரே பாட்டில் கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. வடக்கில் பாயும் நதிகளும் தெற்கில் பாயும் நதிகளும் சங்கமிக்கும் இந்தப் பாடலை, ஹிந்துஸ்தானி இசையில் பெரிதும் எடுத்தாளப்படும் (கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடல் அமைந்த ராகம்) யமுனா கல்யாணியிலும், கர்னாடக இசையில் கொண்டாடப்படும் கீரவாணியிலும் அமைத்து வடக்கையும் தெற்கையும் சங்கமிக்க வைத்திருக்கிறார்.

ஸ்வரஸ்தானத்துக்கு ஏற்றாற்போல் நதிகளின் பெயரை எழுதியிருப்பது, பாடலின் த்வனியை மாற்றும் இடத்தில் ஸ்ருதியை மாற்றி உச்ச ஸ்தாயியில் கையாண்டிருப்பது, நதி என்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் வகையில் சிலப்பதிகாரத்தில் எடுத்தாளப்பட்ட `நடந்தாய் வாழி’ என்ற வார்த்தைகளை முத்தாய்ப்பாகப் பயன்படுத்தி எல்லா நதிகளையும் போற்றும் வகையில் நேர்மறை சிந்தனையோடு பாடலை முடித்திருப்பது என்று பல நுணுக்கமான இசைச் சிறப்புகளை இந்தப் பாடல் கொண்டிருக்கிறது.

வடக்கு தெற்கு சங்கமம்

ராகங்களைக் கையாண்டிருப்ப தோடு பாடகர்கள் தேர்விலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் கன்னிக்ஸ். பிரதான பாடகர்களாக தெற்கிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீயோடு, அவருடைய மகன் அம்ரித் ராம்நாத்தையும், வடக்கிலிருந்து கௌஷிகி சக்கர வர்த்தியோடு அவரது மகன் ரிஷித் தேசிகனையும் பாடவைத்திருப்பது பாடலை திருவிழாத் தன்மைக்குக் கொண்டுசெல்கிறது.

இவர்களோடு உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் கன்னிக்ஸின் சேர்ந்திசைக் குழு பாடகர்கள், ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பாடலின் சில எழுச்சியான பகுதிகளை சேர்ந்திசையாகப் பாடியிருக்கின்ற னர். இப்படி துண்டு துண்டாக பலரின் குரல்களையும் ஒன்று சேர்த்து ஒரு காணொலியில் கொண்டுவரும் சவாலை இனிமையான இசைக் கலவையோடு நேர்த்தியோடு சாத்தியமாக்கியிருக்கிறார் அண்மையில் கலைமாமணி விருது பெற்ற ஒரே சவுண்ட் என்ஜீனியரான சாய் ஷ்ரவணம்.

ரிவர்ஸ் ஆஃப் இந்தியா பாடலைக் காண: https://bit.ly/3o3NFvx


நடந்தாய் வாழி!வரலாற்றின் பக்கங்கள்நாக ரிகங்கள்புவியியல்59 நதிகள்வடக்கு தெற்கு சங்கமம்Nadathaai Vaazhi

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x