Published : 10 May 2021 10:49 AM
Last Updated : 10 May 2021 10:49 AM

காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வருடக் கணக்கில் கஷ்டப்பட்டு காப்பீட்டுக்கான பிரிமீயம் செலுத்தி வருவோம். ஆனால், நமது காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அது நம்மை பெரும் பதற்றத்துக்கும் கவலைக்கும் தள்ளிவிடும். நமது நம்பிக்கையைச் தளரச் செய்து விடும். காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படுவது, கோரிக்கை நிறைவேற்றப் படுவதில்தாமதம், சரியான பதில் கிடைக்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளைப்பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்; பல சமயங்களில் இந்த பிரச்சினைகளை நாமே அனுபவித் திருப்போம். உங்கள் காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அல்லது முறையான பதில் தரப்படாவிட்டால் நீங்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

முதல் படி

நீங்கள் ஒரு பாலிசியில் சேருகிறீர்களோ அல்லது உங்கள் காப்பீட்டுக்கான உரிமையை கோருகிறீர் களோ எதுவாகினும் நீங்கள் உரிய ஆவணங்களைக் கொண்டிருப்பது அவசியம். காப்பீட்டு நிறுவனத்துடனான உங்கள் தொடர்புகள் உட்டபட அனைத்து விதமான பரிமாற்றங்களையும் நீங்கள் ஆவணப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதன் வழியேதான் உங்கள் காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படும்பட்சத்தில், மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். நீங்கள் முறையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்பித்து, காப்பீட்டுக் கோரிக்கைக்கு விண்ணப்பித்த பிறகு அடுத்த இரண்டு வாரத்துக்குள் உங்கள் காப்பீட்டு நிறுவனம் உங்கள் விண்ணப்பத்தை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும்.

இந்தக் கால அளவு முறையாக கடைபிடிக்கப்படாவிட்டால் நீங்கள் பாலிஸி செலுத்தும் அலுவலகத்தில் உள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் அதை தெரிவிக்க வேண்டும். உங்கள் பாலிஸி மற்றும் உங்கள் காப்பீட்டு கோரிக்கை குறித்த விவரங்களை எழுத்துவடிவில் அவருக்குத் தெரிவிக்க வேண்டும், அது கடிதமாகவோ,மின்னஞ்சலாகவோ இருக்கலாம். நீங்கள் புகார் அளித்ததற்கான ஒப்புதல் சான்றை மறக்காமல் பெற்றுவிட வேண்டும். உங்கள் காப்பீட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால்தான் புகார் அளிக்க வேண்டும் என்றில்லை, உங்கள் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் பதில் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் நீங்கள் புகார் அளிக்கலாம்.

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (ஐஆர்டிஏஐ) விதிமுறையின்படி ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் அதன் பாலிஸிதாரர்களுக்கான சேவை தொடர்பான கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். அதில் குறை தீர்ப்பு தொடர்பான கால அளவுகள் போன்ற விவரங்கள் குறிப்பிட்டப்பட்டிருக்க வேண்டும். உங்களது புகார் உங்களது காப்பீட்டு நிறுவனம் பற்றியதாகவோ, இடைத்தரகர்கள், விநியோக நடைமுறை, சேவைக் குறைபாடு ஆகியவற்றைப் பற்றியதாக இருக்கலாம். நீங்கள் புகார் அளித்த இரண்டு வாரங்களுக்குள் உங்கள் காப்பீட்டு நிறுவனம் அந்த புகாருக்கு தீர்வு வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு தீர்க்கப்படவில்லை என்றால் அல்லது அந்த நிறுவனத்தின் பதில் உங்களுக்கு திருப்தி தரவில்லை என்றால் நீங்கள் உங்கள் புகாரை இந்திய காப்பீடு ஒழுங்கு
முறை மற்றும் மேம்பாட்டு வாரியத்திடம் (ஐஆர்டிஏஐ) எடுத்துச் செல்லலாம். அவ்வாரியம் உங்கள் புகார் தொடர்பாக உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை விசாரிக்கும்.

ஐஆர்டிஏஐ-யிடம் எப்படி புகார் அளிப்பது?

ஐஆர்டிஏஐ-யின் குறைதீர்ப்பு மையம் திங்கள் முதல் சனி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும். ஆங்கிலம் மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய இந்திய மொழிகளில் சேவை வழங்கப்படுகிறது. 155255 / 1800 4254 732 என்ற தொலைப்பேசி எண் வழியாக உங்கள் புகாரை ஐஆர்டிஏஐ-க்குத் தெரிவிக்கலாம்.
அதேபோல், complaints@irda.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் புகாரை அனுப்பலாம். மேலும், www.policyholder.gov.in என்ற ஐஆர்டிஏஐ-யின் இணையத்தளத்துக்கு சென்று அதிலுள்ள விண்ணப்பத்தில் உங்கள் புகாரை பதிவு செய்துகொள்ளலாம். இன்னொரு சிறந்த வழி உங்கள் புகாரை தபால் வழியாக அனுப்புவது. உங்கள் புகார் மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் The General Manager, Consumer Affairs Department - Grievance Redressal Cell, Insurance Regulatory and Development Authority of India (IRDAI), 4th Floor, Survey No. 115/1, Financial District, Nanakramguda, Gachibowli, Hyderabad – 500032 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இணைய வழி புகார்

ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் மேலாண்மை அமைப்பு (ஐஜிஎம்எஸ்) என்ற இணையவழி குறை தீர்க்கும் அமைப்பை 2011-ம் ஆண்டு ஐஆர்டிஏஐ நிறுவியது. www.igms.irda.gov.inஎன்ற அதன் இணையதளத்தில் உங்கள் புகாரை பதிவு செய்தால், உங்கள் புகாரானது ஒழுங்குமுறை வாரியத்துக்கும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்துக்கும் அனுப்பப்படும். ஐஆர்டிஏஐ உங்கள் புகாரை கண்காணிக்கும் என்பது உங்கள் நிறுவனத்துக்குத் தெரியும். எனவே அவர்கள், குறிப்பிட்ட கால அளவுக்குள் பதில் அளித்தாக வேண்டும். அந்த இணையத்தில் உங்கள் புகார் மீதான நடவடிக்கை தொடர்பான விவரங்களை நீங்கள் பின்தொடர முடியும். உங்கள் புகார் இரண்டு வாரங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.

அதன் தீர்வு தொடர்பாக அடுத்த எட்டு வாரங்களுக்குள் நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி உங்களிடமிருந்து எந்தத் தகவலும் வராதபட்சத்தில் உங்கள் புகார் முடிக்கப்பட்டுவிட்டதாக உங்கள் நிறுவனம் கூறிவிடும். உங்கள் நிறுவனம் 15 தினங்களுக்குள் உங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்களது பதில் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலோ நீங்கள் உங்கள் புகாரை மீண்டும் ஐஆர்டிஏஐ-யிடம் கொண்டு செல்லலாம். அப்போது ஐஆர்டிஏஐ உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உங்கள் புகார் தொடர்பாக தீர்வுக்கு அழைக்கும். இந்த நடைமுறைகள் தவிர, சட்ட ரீதியாகவும் இந்த விவகாரத்தை அணுக முடியும். எனவே, காப்பீட்டு கோரிக்கை மறுக்கப்படுவது என்பது இறுதி முடிவு அல்ல என்பதை புரிந்துகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x