Last Updated : 08 Dec, 2015 03:01 PM

 

Published : 08 Dec 2015 03:01 PM
Last Updated : 08 Dec 2015 03:01 PM

இப்படியும் பார்க்கலாம்: நதியாகிறவர்களும், கரையாகிறவர்களும்...

திறமை குறைந்தவர்கள் முன்னேறிச் செல்ல,அவர்களின் விமானம் வானில் உயர உயரச் செல்வதை திறமை நிறைந்தவர்கள் பார்க்க நேரிடுவது, வாழ்வின் சோகங்களில் ஒன்று.

அப்படி ஒருவர் ரயிலில் ஏசியில் பயணம் செய்ய,வழியனுப்ப வந்த உங்களுக்கு அவரது அறிவுரை டானிக்கைப் பருக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். “மனசைத் தளர விட்ராதீங்க. நாங்கள்லாம் இருக்கோம். கொஞ்சம் மினரல் வாட்டர் வாங்கிட்டு வந்துடறீங்களா?”

மைண்ட் வாய்ஸில் - பழுதான வீணைகள் பஞ்சு மெத்தையில் ஏன் இருக்கின்றன?

நூலகர் பணிக்கான இண்டர்வியூவிற்காக சென்னைக்கு வந்தார் வசந்தி.

அடிப்படைத் தகுதி இளங்கலை நூலக அறிவியல் பட்டம். வசந்தி இதில் முதல் வகுப்பு பெற்றிருந்தாள். இப்போது ஒரு ‘A' முதுநிலை எம்.எல்.ஐ.எஸ். படித்தவர் வருகிறார் என்றால் அவருக்கே கூடுதல் வாய்ப்பு. அடுத்து ‘B’ பி.எச்டி செய்தவர் என்றால்,அவருக்குத் தகுதி அதிகம். ‘C’ கூடுதலாக 5 வருட வேலை அனுபவத்தையும் வைத்திருக்கிறார் என்றால்? இப்படியே டாக்குமெண்டேஷனும் படித்தவர், கேட்லாக்கில் சான்றிதழ் கொண்டிருப்பவர் என்று தகுதிகள் கூடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த இண்டர்வியூவில் வெற்றி பெற்றவருக்கு அப்படியொன்றும் அதிகத் தகுதி கிடையாது.

திறமை, தகுதி இவற்றின் உச்சி எது என்பது புரியாத விஷயம். சிரமப்பட்டு மலையில் ஏறி ஒரு குன்றில் அமர்ந்து “அப்பாடா...வந்துட்டோம்” என்று பார்த்தால், அதையும் தாண்டி ஒரு இளம்பெண் அமர்ந்து “இங்கே ஸேஃபாத்தான் இருக்கேன்” என்று சூழலை ஃபோனில் அனுப்பிக்கொண்டிருக்கிறார். இப்படியே போய்க்கொண்டிருந்தால்,எதுதான் எல்லை?

ஆனால் உங்கள் மதிப்பீட்டின்படி தகுதி, திறமையற்றவர்களும்,உண்மையிலேயே தகுதி, திறமை இல்லாதவர்களும்கூட வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி?

எல்லா ஊர்களிலும் ஒதுக்குப்புறமாய் கரடு, முரடான இடம் இருக்கும். பகலில் கடந்து செல்லவே பயப்படுவார்கள். “அங்க பேய் இருக்கு,பாம்பு இருக்கு...’ அதை விலைக்கு வாங்க வந்தவரை, “இதப் போய் வாங்கறானே...முட்டாள் !”, “ ஓசிக்குக் கொடுத்தாலும் எவனாவது வாங்குவானா?”என்றெல்லாம் பேசுவார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு அந்த இடம் ஊரின் பிரதானப் பகுதியாக மாறியிருக்கும். இப்போது வாங்க முடியாதவர்கள் முன்பு கைக்கு எட்டும் தூரத்தில் இடமும் சாத்தியங்களும் இருந்தும் வாங்காத தங்களின் புத்திசாலி முன்னோர்களைத் திட்டிக்கொண்டிருப்பார்கள்.

“கேட்டாங்களே, எங்க தாத்தாகிட்ட. இதை மனுசன் வாங்குவானான்னு ரைஸ் மில் வைக்கப் போய்ட்டார். இவர் ரைஸ் மில் வைக்கலைன்னு எவன் அழுதான்?”, “அறிவுள்ளவன் எவனாவது இதை வேண்டாம்னு சொல்லுவானா?” - நூற்றுக்கு 90 குடும்பங்களில் 90 சதவீத மனிதர்களிடம் இந்தத் தினுசில் ஆதங்கம் இருக்கும்.

அன்று அந்த இடத்தை வாங்கிப் போட்டவர் தன் கையிலுள்ள சேமிப்பை எல்லாம் இழந்து வாங்கினார். அப்போது இன்று ஏங்குபவர்களின் முன்னோர்கள் பணமிருந்தும் முதலீடு செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.

அப்படியானால், சரியான நேரத்தில் முதலீடு செய்யப்படும் செல்வம்தானே சிறந்த செல்வம்? பசித்த நேரத்தில் கிடைக்கும் உணவுதானே சிறந்த உணவு? தேவைப்படும் நேரத்தில் வெளிப்படும் - அது எவ்வளவு குறைந்த திறமையாகட்டும், தகுதியாகட்டும் - அவைதானே சிறந்த திறமையாகவும்,தகுதியாகவும் இருக்க முடியும்?

இதைப் பெரும்பாலும் தங்களை அறியாமல் வெளிப்படுத்தியவர்களே இன்று உங்களுக்கு டாட்டா காட்டிச் சென்றவர்கள்; உங்கள் முன்னோர் வாங்கத் தவறிய இடத்தை வாங்கிய அன்றைய ஏழைகள்!

கொஞ்சம் உற்றுப் பார்த்தால், திறமையும் தகுதியும் அற்றவர் என்று முத்திரை குத்தப்பட்டவர் வாய்ப்பு கிடைத்த நேரத்தில் தன் துண்டைப் போட்டுத் தனக்கான இருக்கையை முன்பதிவு செய்ததை உங்களால் பார்க்க முடியும்.

நிறையப் பணத்தைச் சேர்த்துக்கொண்டுதான் முதலீடு செய்வேன் என்றால், ஒரு பைசாகூட சம்பாதிக்க முடியாது. எல்லாத் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டுதான் முயற்சி செய்வேன் என்றால் இருந்த இடத்திலேயே சமாதி ஆக வேண்டியதுதான். கற்றது பைட் அளவு. கல்லாதது ஜி.பி அளவு.

ஒரு அலுவலகத்தில் ஒருவர் அதிகத் திறமையுடன் இருக்க, ஏனையோர் சராசரிக்கும் கீழே இருந்தால், அது ஒட்டுமொத்தமாய் சிறந்த அலுவலகம் அல்ல. ஒரு மாணவி மாநிலத்திலேயே முதலாவது வர, ஏனையோர் தோற்கிற வகுப்பைவிட அனைவரும் ஜஸ்ட் பாஸ் எடுக்கிற வகுப்புதானே சிறந்தது?

சராசரித்தனமாய் இருப்பதே மகிழ்ச்சி என்று இதற்கு அர்த்தமல்ல. நன்மைகள் விளைய அரிய ஆற்றல்களும், அதீதத் திறமைகளும் வேண்டியதில்லை.வெற்றி பெற சராசரித்தன்மைகூடப் போதுமானது.

1983-ல் கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற நம் அணியினர் ஒரு நாள் ஆட்டத்திற்கு லாயக்கில்லாதவர்களாகவே கருதப்பட்டார்கள். அவர்களில் யாருமே தனியாகப் பிரகாசிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லோரும் சராசரியாக ஆடினார்கள். ஒரு மேட்சில் கபில்தேவ் ஜொலித்தார் என்றால்,இன்னொன்றில் அமர்நாத். வேறொன்றில் காந்த், மதன்லால். கிளைமாக்ஸில் எல்லோரும் அவரவர் பங்கை அளித்தார்கள். ரன்னும் விக்கெட்டும் எடுக்காதவர்களும்கூட கேட்ச் பிடித்துத் தம் பங்கை ஆற்றினார்கள்.

ஒரு சினிமாவில் நல்ல கதை. ஆனால் மீதி எல்லாம் குப்பை. இன்னொரு படத்தில் எதுவுமே பிரமாதமில்லை. ஆனால் நடித்தவர்கள், இயக்கியவர்கள் எல்லோரும் தங்களின் ‘சுமாரை’ வழங்கியிருந்தால் வெற்றி பெற அதுவே போதுமானது. சொல்லப்போனால் இதுதான் சினிமாத் துறையை வாழ வைக்கிறது.

எனவே இருக்கிற சராசரித் திறமையை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதிகத்தகுதி இருந்தும் அது வெளிப்படாமல் இருப்பதை விட, குறைந்த தகுதியைத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்துபவர்தானே சிறந்தவர்?

நீச்சல் நன்கு தெரிந்தவர் குளிர் கண்டு தயக்கம் கொள்கையில், நீச்சல் தெரியாதவர் செம்பும் கையுமாக இறங்கி, சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நதியாகிறார். யார் சிறந்தவர்?

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x