Published : 07 May 2021 03:12 am

Updated : 07 May 2021 09:39 am

 

Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 09:39 AM

முகம் புதிது: வாடிப்பட்டியிலிருந்து நியூயார்க்!

face-is-new
ஜெய்சிங் நாகேஸ்வரன்

இன்றைய ஒளிப்பட உலகம், இருபதுக்கும் அதிகமான கலைப் பிரிவுகளுடன் இயங்குகிறது. கருத்தாக்க ஒளிபடக் கலை, கானுயிர் ஒளிப்படக் கலை, விளம்பர ஒளிப்படக் கலை, பத்திரிகை ஒளிப்படக் கலை என அவற்றில் மிகவும் பிரபலமாக இருக்கும் சில பிரிவுகளில் மட்டுமே பலருடைய ஆர்வம் குவிகிறது. அதேபோல், சமூகத்தையும் மக்களையும் படம் பிடித்துக்காட்டும் ஒளிப்படக் கலைஞர்களும் காலந்தோறும் கவனம் பெற்றுவருகிறார்கள். ஜெய்சிங் நாகேஸ்வரனுடைய கேமரா அப்படிப்பட்டதுதான். சாமானிய மக்களின் அன்றாடத் தருணங்களை இயல்பும் அழகுணர்ச்சியும் கலந்த கலவையுடன் பதிந்துவருகிறார். மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த இவர், சர்வதேச ஒளிப்படப் போட்டி ஒன்றில் பரிசு பெற்றிருக்கிறார்.

நியூயார்க்கைச் சேர்ந்த மேக்னம் அறக்கட்டளை ‘சமூகநீதி ஒளிப்பட ஊக்கத்தொகை’ போட்டியை அண்மையில் நடத்தியது. இதில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 11 ஒளிப்படக் கலைஞர்களில் ஜெய்சிங் நாகேஸ்வரனும் ஒருவர். குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இப்போட்டியில் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறை.


“மதுரை அருகில் உள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்தவன் நான். இங்கு என்னுடைய பாட்டி பொன்னுத்தாய் நடத்திய அரசு உதவிபெறும் பள்ளியில், அப்பா, அம்மா இருவருவம் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். அந்தப் பள்ளியில்தான் நானும் படித்தேன். கருமாத்தூரில் இளங்கலை பயிலும்போது கையில் முதன் முதலில் கேமரா கிடைத்தது. பின்னர், மதுரை இறையியல் கல்லூரியில் முதுகலை இதழியல் படித்தேன். அங்கே, உலக சினிமா, ஆவணப்படங்கள், பலதுறை ஆளுமைகளின் கருத்தரங்கு, கலை விழாக்கள் எனப் புதிய திறப்புக்களின் உலகமாக எனக்கு விரிந்தது.

அந்தச் சமயத்தில் குஜராத்தில் நர்மதா அணைக்கட்டுத் திட்டத்துக்காக, பழங்குடி மக்கள் தங்களுடைய வாழிடத்திலிருந்து வலிந்து இடம்பெயர்க்கப்பட்டார்கள். அவர்கள் கிளர்ந்தெழுந்து, சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கரின் கரம் பிடித்துப் போராடினார்கள். அந்த மண்ணின் மைந்தர்களை நேரில் சென்று ஒளிப்படம் எடுத்தேன். கல்லூரிக்குத் திரும்பியபோது நான் பிடித்த படங்களை கண்ட எழுத்தாளர் வே.அலெக்ஸ் பெரும் ஊக்கம் தந்தார்” எனும் ஜெய்சிங், மதுரையிலிருந்து சென்னை வந்ததும் தன்னுடைய ஒளிப்பட வாழ்க்கை மேலும் மேம்பட்டது என்கிறார்.

“ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியன் அண்ணா, சென்னையில் வந்து முயற்சிகளைத் தொடரும்படி ஊக்கமளித்தார். சென்னை வந்த புதிதில் ‘பிளாக்’ இந்திப் படத்தின் ஒளிப்பதிவை திரையரங்கில் கண்டு பிரமித்தேன். தாமதிக்காமல் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரனின் வீட்டுக்குச் சென்றேன். வாய்ப்புக் கேட்டுவரும் வழக்கமான விஸ்காம் மாணவனாக இருப்பேன் என்கிற எண்ணத்திலேயே என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர். பிறகு நான் எடுத்த நர்மதா அணைக்கட்டுப் போராட்ட ஒளிப்படங்களை பார்த்ததும் உட்காரச் சொன்னார். படங்கள் அனைத்தையும் பார்த்து முடித்தபின், ‘வா என்னோடு மும்பைக்கு’ என்று அழைத்துச் சென்றார்.

அவர் ஒளிப்பதிவுசெய்த ‘சாவரியா’, இந்தி ‘கஜினி’, 'ஃபிராக்’ ஆகிய இந்திப் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அது மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது” எனும் ஜெய்சிங், இயக்குநர் விஷால் பரத்வாஜின் ‘ஹைதர்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கு ஒளிப்படக் கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார். திரைப்பட ஒளிப்பதிவுத்துறையில் பணியாற்றி வந்தபோதும் ஜெய்சிங்கின் மனம் ஒளிப்படக் கலையையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது. அதனால்தான் உதவி ஒளிப்பதிவாளர் என்ற நிலையிலிருந்து திரைப்படங்களுக்கான ‘ஸ்டில் போட்டோகிராபி'யை விரும்பித் தொடர்ந்திருக்கிறார்.

ஒரு மீனைப்போல் உணர்கிறேன்

பாலிவுட்டில் கிடைத்த அடையாளம் ஜெய்சிங்கைப் பல நாடுகளுக்கும் சென்றுவரும் பரபரப்பான தொழில்முறை ஒளிப்படக் கலைஞராக மாற்றியது. அந்த நேரத்தில்தான், கரோனா கால ஊரடங்கு அவரை 15 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய சொந்த கிராமத்தை நோக்கித் திருப்பியிருக்கிறது. 15 நாட்கள் எங்கும் நகராமல் பெற்றோர், சகோதரி, அவருடைய பிள்ளைகள் என்று உறவுகளுடன் வீடடங்கிய ஜெய்சிங், தன்னுடைய குடும்பத்தினரை அவரவர் இயல்பில் ஒளிப்படங்களாக எடுத்திருக்கிறார்.

தனது வீட்டின் சுற்றுச்சூழலும் அதில் இயல்பாகப் பதிவானதைக் கண்டு அந்தப் படங்களின் தொகுப்புக்கு ‘ஐ ஃபீல் லைக் ஏ ஃபிஷ்’ ( I feel like a fish) என்று தலைப்பிட்டு நியூயார்க்கின் மேக்னம் அறக்கட்டளை ஒளிப்படப் போட்டிக்கு அனுப்பிவைத் திருக்கிறார். ஒளிப்படக் கலைஞருக்கு அந்தப் படங்களுடனான பிணைப்பும் அதைத் தாண்டிய எளிய மனிதர்களின் இயல்பும் அந்தத் தொகுப்பில் யதார்த்தமாகப் பதிவாகியிருந்தது. அது அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


முகம் புதிதுவாடிப்பட்டிநியூயார்க்சமூகநீதி ஒளிப்பட ஊக்கத்தொகைசாமானிய மக்கள்மதுரைஒளிப்பதிவாளர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x