Last Updated : 06 May, 2021 03:12 AM

 

Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

மெய் வழிப் பாதை: இங்கேயே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

இலங்கையில் உள்ள திருகோணமலை நகரில் இல்லறத் துறவியாக வாழ்ந்து மறைந்த சாது அப்பாதுரையின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போதனைகள் அடங்கிய மிகச் சிறிய நூல் ‘தியானதாரா’. தமிழில் பாரதி, புதுமைப்பித்தனை அடுத்து கவிதை, சிறுகதை, விமர்சனத்தில் மேதைமையுடன் திகழ்ந்த பிரமிள் எழுதிய இந்நூல், ஆன்மிக இலக்கியத்தில் நடந்த சாதனைகளில் ஒன்றாகும்.

பிரமிள் தனது இளம்வயதில் சாது அப்பாத்துரையைச் சந்தித்து அவருடன் உரையாடிய அனுபவத்திலிருந்து அவர் வாய்மொழிகளைத் தொகுத்தி ருந்தார். தமது மறைவுக்குப் பின்னரே இந்த நூல் வெளியாக வேண்டும் என்று பிரமிள் கருதியிருந்த நிலையில் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரின் தூண்டுதலின் பேரில் 1989-ம் ஆண்டு இந்நூல் வெளி வந்துள்ளது.

ஆன்மிகத்தில் கவனம்

முத்துக்குளிக்கும் செல்வந்தக் குடும்பத்தில் 1892-ம் ஆண்டு ஜூன்-17-ம் நாள் பிறந்த சாது அப்பாத் துரைக்கு சகோதரரோ சகோதரியோ இல்லை. சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். தாத்தா அண்ணாமலையின் மகள் வயிற்றுப் பேத்தியும், அத்தை பெண்ணுமான தங்கப்பொன்னுவுடன் வளர்ந்தார். ஐந்து வயது தன்னைவிட மூத்த தங்கப்பொண்ணுவை, தாத்தாவின் மரணப்படுக்கையில் எதிர்பாராத விதமாக கைப்பிடித்து திருமணம் செய்ய வேண்டிவந்தது.

சிறுவயதி லேயே குடும்ப வியாபாரத்தில், பொரு ளீட்டுவதில் உற்சாகம் போய்விட்டது என்று பிரமிள் அப்பாத்துரையாரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். குடும்பத்தின் கடன்சுமையும் தன் வயதுக்கு மூத்தவரும் குழந்தைப் பருவத் தோழியுமாக இருந்த தங்கப்பொண்ணு வுடனான திருமணமும் அவரைத் தாக்கியிருந்தன. அவரது கவனம் படிப்படியாக ஆன்மிகம் பக்கம் திரும்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, அப்போது புகழ்பெற்றிருந்த முக்தியானந்தாவின் சீடர் சடைவரதரிடம் சென்று சேர்ந்தார்.

தன்னையும் சீடனாக சேர்த்துக் கொள்ளச் சொல்லி நின்ற அப்பாத்துரையிடம், நீங்கள் சொத்துக்காரர், உங்களுக்கு எங்கள் வழி ஒத்துவராது என்கிறார் சடைவரதர். அப்பாத்துரை உறுதியாக நின்றார். அப்போது சடைவரதர், அப்பாத்துரையைச் சோதிக்க பிச்சை எடுக்கப்போகச் சொல்கிறார். புறப்பட்ட அப்பாத்துரையை நிறுத்தி வேட்டி, சால்வையைக் கழற்றி விட்டு கோவணத்தோடு போகவேண்டுமென்கிறார். அத்துடன், எப்படி பிச்சை எடுப்பீர் என்று கேள்விகேட்கிறார்.

சுவாமிக்கு என்று பதில் சொல்கிறார் அப்பாத்துரை.

“சுவாமிக்கு சுவாமியே பிச்சை எடுக்கும். நீர் உமக்காகத் தான் பிச்சை எடுக்க வேண்டும்" என்று விமோசனத்துக்கான வழியைத் திறக்கிறார் சடைவரதர்.

அத்துடன் வியாபாரத்தில் யாரெல்லாம் போட்டியாளர்களாக, பகைவர்களாக அப்பாத்துரையார் குடும்பத்துக்கு இருந்தார்களோ அவர்களிடம் போய் பிச்சை கேட்கச் சொன்னார் சடைவரதர். அகந்தையும் புறகௌரவங்களும் அப்பாத்துரையிடம் கரைந்த நொடி அது. அப்பாத்துரையும் அவர் மனைவி தங்கப்பொண்ணுவும் சேர்ந்தே ஆன்மிக வாழ்க்கைப் பாதையில் சேர்ந்து மலர்ந்தனர் என்று பிரமிள் குறிப்பிடுகிறார். அப்பாத்துரையின் வியாபாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கும் எளிதாக ஒருகட்டத்தில் தீர்ந்தது. திருகோணமலையில் தமிழ்-சிங்களக் கலவரங்கள் பெரும்பாலனவை அப்பாத்துரையின் ஆலோசனையால் அக்காலத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன. மூத்த மகள் விசாலாட்சிக்கும் ஆன்மிக ஈடுபாடு இருந்ததையும் அவரது மரணத்தை தந்தையான அப்பாத்துரை முன்பே அறிந்திருந்ததையும் பிரமிள் குறிப்பிடுகிறார்.

நீ வெறும் கருவி

அப்பாத்துரையை புற்றுநோய் தாக்கியபோது கொழும்பு நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார். அப்போது அவரை மதிப்புடன் கவனித்துக் கொண்ட மருத்துவர் அந்தனிஸிடம் ஒருமுறை கோபமாக அப்பாத்துரை கூறியிருக்கிறார்.

“நீ வெறும் கருவி. உன்னால் என்னைக் குணப்படுத்த முடியாது. இதை உணர்ந்து செயல்பட்டால்தான் உன் மூலம் வேலை சரிவர நடக்கும்" என்பதுதான் அது.

கடையிற்சாமிகள் வழியாக அளிக்கப்பட்டதென்று, சாமி அப்பாத்துரையார் சொன்னதாக நான்கு மகாவாக்கியங்களை பிரமிள் குறிப்பிடுகிறார். அவை இதுதான். தியானதாரா என்பது பிரமிளின் கேள்விகளுக்கான பதில்களாகத் தான் உருவம் பெற்றது.

ஒரு பொல்லாப்புமில்லை.

எப்பவோ முடிந்த காரியம்.

நாமறியோம்.

முழுதுண்மை.

என்ற நான்கு உண்மைகள் தான் அவை. அவை தெரிந்த ஒருவரின் ரகசியங்கள் போல இருக்கிறது. பிரமிள், சாது அப்பாத்துரையாரிடம், ஜே. கிருஷ்ணமூர்த்தி சொன்னதை ஒத்திருக்கிறதே என்று தான் கேட்டதைக் குறிப்பிடுகிறார். அத்துடன் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் Commentaries on living நூலையும் அப்பாத்துரையாரிடம் தந்திருக்கிறார். அந்த நூலைப் படித்த அப்பாத்துரையார், “இது ரகசியமாக ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒருவருக்கு இன்னொருவர் சொல்கிற விஷயம். இன்றுவரை இது பகிரங்கத்தில் சொல்லப்பட்ட தில்லை” என்று கூறியிருக்கிறார்.

இங்கே தவிர வேறெங்கேயும் விமோசனமோ, மோட்சமோ இல்லை என்பதையும் பிரமிளிடம் சாது அப்பாத்துரையார் உணர்த்தியுள்ளார். இந்தப் பூமி யில் மட்டும்தான் நம் அளவுக்கு வளர்ச்சி பெற்று அறிவு கொண்டு உயிர்கள் உள்ளனவா என்று கேள்விக்கு அப்பாத்துரையார் சொன்ன பதில் இது.

“ஆம். இந்தப் பூமியில் மட்டும்தான் நாம் இருக்கிறோம். இங்கேயே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்"

வீடும் பேறும் வேறெந்த லோகத்திலும் அல்ல; இங்கேயே சாத்தியம். கருணை கொண்டு கருணையை ஊறவைத்தல் தான் உபதேசம் என்கிறார் சாமி அப்பாத்துரையார். தன்னை நேசிக்கிறவனை நேசிப்பது ஒரு பெரிய காரியமா என்று சாது அப்பாத்துரையார் கேட்கிறார்.

அவரே பதிலும் சொல்கிறார். தன்னை நேசிப்பவனை நேசிப்பதை நாயும் செய்யும். தன்னைப் பகைத்த வனையும் நேசிக்க வேண்டும், அதுவல்லவா மனுஷத்தன்மை என்கிறார்.

காமம், உணர்ச்சி வேகம் ஆகியவற்றை எதிர்மறையாகப் பார்க்காமல் கவனிக்க வேண்டிய ஆற்றல்களாகக் குறிப்பிடும் அப்பாத்துரையார் அதே வேகம்தான் ஆத்மிகத்துக்கும் பயன்படும் என்கிறார். மனத்துக்கும் மூச்சுக்கும் உள்ள உறவு பற்றி மிக எளிமையாகப் பேசும் அப்பாத்துரையாரின் உபதேசங்கள் ஈழப்பேச்சுத் தமிழில் சாதாரணமாக அமைந்தவை; பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தெரியும் இந்நூலை ஒருவர் சரியாகப் பிடித்துக்கொண்டால் போதும்; கூடவே வழிகாட்டும் சக்தி கொண்ட படைப்பு இது.

சத்தியம் ஒன்றே காலத்தை விழுங்கும் என்று கூறிய சாது அப்பாத்துரையின் போதனைகளை பிரமிள் என்ற கலைஞன் ஆவணப்படுத்தியிருக்காவிட்டால் அவை காற்றிலும் நினைவுகளிலும் கரைந்து போயிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x