Last Updated : 05 May, 2021 03:13 AM

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கதை: புத்திசாலி பெட்டுனியா!

ஓவியம்: கிரிஜா

ரோஜர் டுவொய்சின், தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ

அதிகாலை எழுந்தவுடன் தோட்டத்திற்குச் சென்ற பெட்டுனியா, பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டது. இலைகள் மீதிருந்த பனித்துளிகளை எடுத்து தாகம் தீர்த்துக்கொண்டது. செடிகளுக்கு இடையில் விநோதமான ஒரு பொருளைக் கண்டது. தயங்கித் தயங்கி அதன் அருகே சென்று சோதித்துப் பார்த்தது.

வாசனை இல்லாததால் அது உணவுப் பொருள் இல்லை என்கிற முடிவுக்கு வந்தது. ஆனாலும் அதுபோன்ற பொருளை முன்பு ஒருநாள் பார்த்ததாக ஞாபகம். உரிமையாளர் மகன் பில், பள்ளிக்கூடம் போகும்போது இப்படி ஒன்றைக் கையில் வைத்திருப்பான். “ஆமாம்! இது ஒரு புத்தகம்” என்று சொல்லிக்கொண்டது.

“புத்தகம் மதிப்புமிக்கது. புத்தகமும் கையுமாக இருப்பவர்கள் அறிவாளிகள். புத்தகத்தை நேசிப்பவர்கள் புத்திசாலிகள்” என்று பம்கின், தன் மகன் பில்லிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. அதைப் பலமுறை சொல்லிப் பார்த்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.

‘இந்தப் புத்தகத்தை நான் வைத்துக்கொள்கிறேன். சீக்கிரம் புத்திசாலி ஆகிவிடுவேன். என்னைப் பார்த்து இனி யாரும் ‘முட்டாள் வாத்து’ என்று ஏளனம் செய்ய மாட்டார்கள்’ என்று எண்ணிய பெட்டுனியா, புத்தகத்தைச் சிறகால் அள்ளி எடுத்தது.

பெருமிதம் அடைந்த பெட்டுனியா, தன்னைத்தானே புகழ்ந்துகொண்டது. அறிவாளி ஆகிவிட்டேன் என்கிற கர்வம் தலைக்கேறியது. அன்று முதல் அதன் செயல்களில் நிறைய மாற்றங்களைக் காண முடிந்தது. அந்த மாற்றத்தை முதலில் கவனித்தது சேவல்தான். நண்பர்களிடமும் தெரிவித்தது.

பெட்டுனியா புத்திசாலி, படித்த மேதை என்று உடனிருந்த விலங்குகள் நம்பத் தொடங்கின. அதனிடம் ஆலோசனை கேட்டு நடந்தன. இவை எல்லாம் பெட்டுனியாவை மேலும் கர்வம் கொள்ளச் செய்தன.

ஒருநாள், பெட்டுனியாவின் நண்பர்களான சேவலும் பசுமாடும் ஏதோ விவாதித்துக்கொண்டிருந்தன. ‘சேவல் தலையில் உள்ள கொண்டை ஏன் சிவப்பாக உள்ளது?’ என்பதுதான் விவாதம்.

“ஓ, அதுவா? என் உடலில் ரத்தம் பாய்கிறது. அது சிவப்பு நிறத்தில் இருக்கும்” என்றது சேவல். அதை ஒப்புக்கொள்ள மறுத்த பசு, “உனக்குப் புத்தி குறைவு. எனக்குள்ளும் சிவப்பு ரத்தம்தான் பாய்கிறது. உனக்கே தெரியாமல் யாராவது, கொண்டைக்குச் சிவப்புச் சாயம் பூசியிருப்பார்கள். யோசித்துப் பார்” என்றது.

வழக்கு, அந்த வழியாக வந்த பெட்டுனியாவிடம் சென்றது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று பசுவும் சேவலும் நினைத்தன. அதற்குப் பதிலளித்த பெட்டுனியா, “கோழி முட்டை சாப்பிடும் விவசாயி, கோழிக்கும் சேவலுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிய, கடையில் ஒரு சீப்பை வாங்கி உன் தலையில் சொருகி இருக்கிறார். இந்த விவரம் தெரியாதா உனக்கு?” என்று சொல்லிவிட்டு நகர்ந்தது. தவறான தீர்ப்பு என்று உணர்ந்த சேவலுக்கு ஒரே கவலை.

அடுத்ததாக பெட்டுனியாவைச் சந்தித்த கோழி, “எனக்கு ஒரு உதவி வேண்டும். நான், குஞ்சுகளுடன் வெளியே உலவச் சென்றிருந்தேன். திரும்பிவரும் வழியில் ஒரு சந்தேகம் எழுந்தது. குஞ்சுகள் தொலைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவற்றைக் கணக்கிட்டுச் சொல்லச் சொல்லி ஒருவரிடம் கேட்டேன். அவர், ஒவ்வொன்றாக எண்ணி 9 என்றார். அது தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. நீயும் ஒருமுறை சரிபார்த்துச் சொல்வாயா?” என்றது.

சரி என்று ஒப்புக்கொண்ட பெட்டுனியா, “3 கோழிக்குஞ்சுகள் தானியத் தொட்டியில் குருணைமணிகளைக் கொத்திச் சாப்பிடுகின்றன. 3 குஞ்சுகள் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கின்றன. 3 குஞ்சுகள் உன் காலடியைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. மூன்றை மூன்றால் பெருக்கினால் என்ன வரும்? ஆறு! மொத்தம் 6 குஞ்சுகள். ஆறு, ஒன்பதைவிடப் பெரியது” என்று சொல்லிவிட்டு நகர்ந்தது. கோழிக்கு ஒன்றும் புரியவில்லை.

பெட்டுனியாவின் நண்பனான குதிரை, “எனக்குப் பல் வலிக்கிறது. சரியான வைத்தியம் சொல்லேன்” என்றபடி வந்து சேர்ந்தது. குதிரையை வாய் திறக்கச் சொல்லி சோதித்த பெட்டுனியா, “எனக்குப் புரிந்துவிட்டது. இதோ, என் வாயைப் பார். எனக்குப் பற்களே இல்லை. உன் வாயில் வளர்ந்திருக்கும் பற்களைப் பிடுங்கி எடுத்துவிட்டால் வலியே இருக்காது” என்றது. அதைக் கேட்ட உடனே அங்கிருந்து பாய்ந்தோடியது, குதிரை.

ஒரு மரத்தடியில் பெட்டுனியாவின் நண்பர்கள் கூடி இருந்தன. மரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த ஒரு குட்டிப் பூனைக்குக் கீழே இறங்கத் தெரியவில்லை. எல்லா விலங்குகளும் சேர்ந்து பூனைக் குட்டிக்கு உதவ முயன்றன.

புத்திசாலி பெட்டுனியா தொலைவில் வருவதைப் பார்த்த தாய்ப் பூனை, தன் குட்டியைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்டது. பெட்டுனியா, ஒரு யோசனை சொன்னது.

அதன்படி, மரத்தடியில் பசு நின்றது. பசுவின் முதுகில் பன்றி ஏறிக்கொண்டது. பன்றியின் முதுகில் வெள்ளாடு. வெள்ளாட்டுக்கு மேலே ஒரு செம்மறியாடு. அதன் மீது, வான்கோழி. வான்கோழியின் முதுகில் ஒரு வாத்து.

கடைசியில் பாரம் தாங்க முடியாத பசுமாட்டின் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. குட்டிப் பூனை குதிப்பதற்குள் பசுமாடு சரிந்ததால் எல்லாம் ஒன்றின் மீது ஒன்று விழுந்தன. “அப்பாடா! கடைசியில், பூனைக்குட்டி இறங்கிவிட்டது பாருங்கள்” என்றபடி அங்கிருந்து நகர்ந்து சென்றது, பெட்டுனியா.

ஒருநாள், தோட்டத்தில் புதிதாக ஓர் அட்டைப்பெட்டி இருப்பதை பெட்டுனியாவின் நண்பர்கள் கவனித்தன. பசுவும் பன்றியும் பெட்டுனியாவை அழைத்து, அட்டைப்பெட்டியில் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்டன.

“அட்டைப்பெட்டியில் மிட்டாய்கள் உள்ளன. நாம் எல்லோரும் அவற்றைப் பகிர்ந்துகொள்ளலாமே?” என்றது பெட்டுனியா, கழுதை, பசு, பன்றி, ஆடு, நாய் என அனைத்து நண்பர்களும் பெட்டியைத் திறந்து, மிட்டாய்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டன.

சில நொடிகளில் அங்கு ஒரு விபரீதம் நிகழ்ந்தது. விலங்குகள் வைத்திருந்த மிட்டாய்கள் ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறின. அனைத்தும் காயமடைந்தன. பெட்டியில் இருந்தவை பட்டாசுகள் என்பது தெரியாமல் போனதால் வந்த வினை. பெட்டுனியாவின் கழுத்துப் பகுதியில் காயம் உண்டானது.

பட்டாசு வெடித்ததில், பெட்டுனியா வைத்திருந்த புத்தகமும் சேதம் அடைந்தது. நடந்ததை எண்ணி பெட்டுனியா கவலை அடைந்தது. வலியால் கதறும் நண்பர்களைப் பார்த்து மனம் வருந்தியது. கண்ணீர்ப் பெருகியது. தன் தவறால் நண்பர்களுக்கு நேர்ந்த விபரீதத்தை எண்ணிப் புலம்பியது. இனி, புத்திசாலி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை இல்லை.

சோகத்தில் ஆழ்ந்த பெட்டுனியா, மரத்தடியில் உட்கார்ந்து யோசித்தது. அப்போது வீசிய இதமான காற்று, அருகில் இருந்த புத்தகத்தின் பக்கங்களைத் திறந்து வைத்தது. அதில் ஏதோ அச்சாகி இருப்பதைக் கவனித்தது பெட்டுனியா.

புத்தகத்தைச் சிறகில் ஒளித்து வைத்துக்கொள்வதில் பயனில்லை. அதனால், அறிவுப் பெருக்கம் அடைவதில்லை. இதயம் தெளிவடைவது இல்லை. புத்தகத்தை வாசிக்க வேண்டும்; பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானத்த பெட்டுனியா, அன்று முதல் புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க ஆரம்பித்தது.

‘சீக்கிரமே ஒருநாள் புத்திசாலி என்று பெயர் எடுப்பேன். நண்பர்கள் மத்தியில் அறிவாளியாக அறியப்படுவேன். நண்பர்களுக்கு உதவுவேன்’ என்று நம்பிக்கையோடு காத்திருந்தது பெட்டுனியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x