Last Updated : 30 Apr, 2021 03:12 AM

 

Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

C/O கோடம்பாக்கம் 03: படைப்பாளி - ஓடிடி இடையே ஓர் இடைவெளி!

‘‘திருநெல்வேலிதான் என் சொந்த ஊரு. சின்ன வயசுல அம்மன் படங்கள், விஜய், தனுஷ் படங்கள்னு பார்த்துக்கிட்டு இருந்த என்னைச் சென்னையை நோக்கி கை பிடிச்சு கூட்டிவந்தது மணி சார் படங்கள்தான். நான் 9-வது படிக்கும்போது மணிரத்னதின் ‘குரு’ படத்தைப் பார்த்தேன். ஒரு டப்பிங் படத்துல என்ன இருக்கப் போகுதுன்னு அலட்சியமாத்தான் போனேன். ஆனா, சினிமா என்பதன் மையச்சரடு, இயக்குநர் ஒருவரின் ஜாலத்தில் இயங்குவதை அந்தப் படத்துல கண்டு பிரமிச்சேன்’’

தெற்கிலிருந்து தொடங்கிய தன் பின்னணியைப் பகிர்கிறார் ஸ்ரீகாந்த். பார்த்திபன், ஸ்ரீகணேஷ், பிஜோய் நம்பியார் ஆகிய மூன்று இயக்குநர்களிடம் இவர் பணிபுரிந்துள்ளார்.

மூன்று இயக்குநர்களிடம் சேர்ந்த கதையை அவரே ஆர்வமாகப் பகிர்ந்தார்.

‘‘ ‘குரு’ படம் பார்த்தப்போ படத்தின் செய்நேர்த்தி, அழகியல், காட்சி மொழி, படம் நெடுகே கூடியிருந்த அமைதி, அபிஷேக் பச்சன் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு, எடிட்டிங், கிளைமேக்ஸ் ட்ராமா கையாளப்பட்ட விதம்னு அவ்ளோ பிடிச்சது. ஒரு படத்தோட ஐடியா எப்படி இருக்கணும், அதுல எப்படி ஒரிஜினிலாட்டியைக் காட்டணும், கேரக்டர் ஸ்கெட்ச், ஆல்பம், பாடல் வரிகள், பின்னணி இசை, கேமரா கோணங்கள், கதையை எப்படிச் சொல்றது, அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போற விதம்னு சினிமாவை பற்றிய ஒரு தீவிர அணுகுமுறைக்கான விதை ‘குரு’ படத்தின் தாக்கம் மூலமா எனக்குள்ளே ஆழமா விழுந்துச்சு. அப்பவே சினிமாதான்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்பா, அம்மா ஆசைக்காக சிவில் இன்ஜினீயரிங் முடிச்சேன். உடனே சென்னைக்கு வந்துட்டேன். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ வெளியாகியிருந்த சமயம். அந்தப் படத்தைப் பத்தி நான் எழுதின ஒரு கட்டுரை பார்த்திபன் சார் கவனத்துக்குப் போச்சு. சந்திச்சோம். அப்படியே அவர்கிட்ட உதவி இயக்குநர் ஆகிட்டேன். அப்புறம் ‘8 தோட்டாக்கள்’ படத்துல ஸ்ரீகணேஷிடம் சேர்ந்தேன். அதுக்கு முன்னமே அவர் எனக்கு நல்ல நண்பர். ரசனை, வாசிப்புன்னு ரெண்டு பேருக்கும் பொது ஈர்ப்புகள் இருந்ததால சேர்ந்து வேலை செய்றது ஈஸியா இருந்தது.

இதுக்கிடையில நான் நடத்திவரும் ‘மணிரத்னம் தி குரு’ங்கிற முகநூல் பக்கத்தைப் பல நாட்களாக அறிந்திருந்த இயக்குநர் பிஜோய் நம்பியார், அவரோட ‘சோலோ’ படத்துக்குத் தமிழ் தெரிஞ்ச உதவி இயக்குநர் தேவைன்னு கேட்டார். தயங்காம சேர்ந்துட்டேன். ‘சோலோ’வுல 3-வது ஷெட்யூல்ல தொடங்கிய பயணம் இப்போ ‘நவரசா’ வரைக்கும் வந்து நிற்குது'' என்கிறார் விக்னேஷ் ஸ்ரீகாந்த்.

இயக்குநர்களிடம் கற்றதும் பெற்றதும் பற்றிக் கேட்டதும் பெரிய பட்டியல் போட்டவர், உதவி இயக்குநர்கள் மீது இங்கு தொடர்ந்து நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலையும் சாடினார்.

‘‘ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எவ்வளவு நேர்மையா எடுக்கலாம், ரைட்டிங் எந்த அளவுக்குத் தூக்கி நிறுத்தும், செய்யற வேலையின் ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் எப்படி இருக்கணும்னு ஸ்ரீகணேஷ்கிட்ட கத்துக்கிட்டேன்.

பிஜோய் சார் உதவி இயக்குநர்களைக் கண்ணியமா நடத்துற விதம் ரொம்பவே ஆச்சரியப்பட வைச்சது. உதவி இயக்குநர் பணி, சினிமாவுல இருக்குற 24 துறைகள் எல்லாம் சரியா நடக்குதான்னு பார்க்கிற கங்காணி வேலை இல்லைன்னு புரிஞ்சது. தமிழ் சினிமாவுல இயக்குநர்கள் சொல்றதை 24 மணி நேரமும் செய்றதுதான் உதவி இயக்குநர்களின் வேலையா இருக்கு. முதலாளி - தொழிலாளி வர்க்கபேதம் கூடாது, 8 மணிநேரம் ‘ஷிப்ட்’ வேற வேற வேலைகள்ல இயந்திரமா இயங்க விருப்பமில்லாமதான் நிறையப் பேர் சினிமாவுக்கு வர்றாங்க.

ஆனா, இங்கேயும் அந்த அதிகார அமைப்பு தொடர்ந்தா வேலை செய்யற இயக்குநர்கிட்ட அன்பு இருக்காது. ஒருமாதிரி வாய்ப்புக்கான பயம்தான் எஞ்சும். இங்க உதவி இயக்குநர்களுக்குப் பல நேரங்கள்ல விடுமுறையே கிடையாது. அவங்களுடைய தனிப்பட்ட வேலைகளைப் பார்க்க முடியாது. ஸ்கிரிப்ட் எழுத முடியாது. ஆனா, இந்தி, மலையாள சினிமாக்கள்ல அப்படி இல்லைன்னு நேரடியா உணர்ந்தேன். இன்னிக்கு வரை ‘ஸ்ரீகாந்த் நீங்க ஃப்ரீயா? ஆர் யூ அவைலபிள்?’னுதான் பிஜோய் சார் கேட்பார்.

உதவி இயக்குநர்கள் இல்லைன்னா ஒரு படத்தோட பணிகள் ஒரு அங்குலம்கூட நகராதுன்னு இங்க எல்லோருக்கும் தெரியும். ஆனா, அவங்க சம்பளம்தான் இன்னமும் பெரிய கேள்விக்குறியா இருக்கு. இதை ரொம்பவே வருத்தத்தோட பதிவுசெய்றேன். எந்தப் படத்தையும் எந்த உதவி இயக்குநரும் கஷ்டப்பட்டுப் பண்ணக் கூடாது” எனும் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இதுவரை நான்கு குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.

அவற்றில் 1 மணி நேரம் ஓடும் ‘விழிகளின் அருகினில் வானம்’ ஸ்ரீகாந்தின் நான்காவது குறும்படம். பரவலான கவனம் பெற்றுள்ள இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்கலாமே என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் முக்கியமானது.

‘‘எல்லோருக்கும் போய்ச் சேரணும்னுதான் யூடியூப்ல ரிலீஸ் பண்ணேன். மக்கள் இதை எப்படி எடுத்துகிறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். ஒரு குறும்படத்துக்கு ஓடிடில காசு கொடுத்துப் பார்க்கணும்னா பெரும்பாலான மக்கள் பார்க்க மாட்டாங்க. ஓடிடியில் இன்னும் நம்ம கலாச்சாரம் பதிவாகலை. ‘பாவக்கதைகள்’ ஒரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. ‘நவரசா’ போன்ற அடுத்தடுத்த சில முயற்சிகள் அதன் போக்கைக் கொஞ்சம் மாத்தும்னு நம்புறேன்.

இந்தியில் நிறைய மாறியிருக்கு. இங்கே ‘சூரரைப் போற்று’, ‘மண்டேலா’ன்னு சில படங்கள்தான் பேசுபொருள் ஆகியிருக்கு. ‘ஜகமே தந்திரம்’ மாதிரியான ஒரு ஜனரஞ்சக சினிமா வந்த பிறகு ஓடிடிக்கான இடத்தை இன்னமுமே கணிக்கலாம். ஆனா, இங்கே கிரியேட்டர்ஸுக்கும் ஓடிடி நிறுவனத்துல நம்ம கன்டென்டுக்கு அப்ரூவல் கொடுக்குறவங்களுக்கும் இடையில பெரிய இடைவெளி இருக்கு. சரியான கன்டென்ட் அவங்களப் போய்ச் சேர்றதில்ல. அதைச் சரிபண்ணியே ஆகணும்” என்கிற தன்னுடைய ஆழமான அவதானிப்பை முன்வைக்கிறார் ஸ்ரீகாந்த்.

தன் முதல் படம் குறித்துப் பேசும்போது, ‘‘ரியாலிட்டி வேற.. ரியலிசம் வேறங்கிறத நான் ரொம்பவே நம்புறேன். என்னோட படங்கள்ல ரியலிசம் இருக்கும். யார் என்ன பேசினாலும் உடனே கவுன்ட்டர் கொடுக்கிற காமெடியன், ஹீரோன்னே நிறையக் கதைகள் பார்க்கிறோம். என் படங்கள்ல அதைத் தவிர்க்க நினைக்குறேன். கைதட்டலுக்காக மட்டுமே நான் கதாபாத்திரங்களை உருவாக்க விரும்பல.

ஒவ்வொரு சினிமாவுமே இந்த உலகத்துல இருக்கிற யாரோ ஒருத்தருக்காகத்தான் எடுக்கப்பட்டிருக்குன்னு சொல்லுவாங்க. என் படத்தைப் பார்க்குற 10 பேர்ல ஒருத்தராவது இது என் கதை, இது எனக்கான படம், என் வாழ்க்கையைத்தான் இந்த டைரக்டர் காட்டியிருக்கார்னு உணர்ந்தா அதை நான் ரொம்ப மகிழ்ச்சியா எடுத்துப்பேன். ட்ராமா, எமோஷன், த்ரில்லர், ரொமான்ஸ்னு எது எடுத்தாலும் ஜானர் தாண்டிய இந்த கனெக்ட் என் படத்துல இருக்கும்’’ என்று புன்னகையுடன் முடிக்கிறார் ஸ்ரீகாந்த்.

கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் பகுதிகள்ல ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்கள் இருக்காங்க. அவர்களில் பலர் 10,15 வருஷங்களையும் தங்களோட இளமையையும் தொலைச்சுட்டு, என்னைக்காவது ஜெயிப்போம்ங்கிற தன்னம்பிக்கையின் அடிப்படையில் இயங்குறாங்க. ஆனா, ஜெயிக்கிறதுக்கு முன்னாடி வரைக்குமான உதவி இயக்குநர் வாழ்க்கைக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு அவசியம். அதை ஏற்படுத்திக்கொண்டு உதவி இயக்குநர்கள் வேலை செய்யவேண்டும்.

இப்போ வசதியான குடும்பங்களிலிருந்து, டிகிரி முடிச்சிட்டு, பைக், லேப்டாப், சாப்ட்வேர், டிசைனிங், கோடிங் நாலேஜ், மொபைல் ஆப் டெவலெப்மெண்ட் என்று பல தொழில்நுட்பத் திறமைகளுடன் அதிகம் பேர் வர்றாங்க.

தொழில்நுட்ப அறிவு - ஏழை - பணக்காரன் ஆகியவற்றுக்கு அப்பால் உதவி இயக்குநர்களுக்கு இங்கே தேவைப்படுவது கிரியேட்டிவிட்டி. அதைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள அவர்களைச் சுற்றி நல்ல சூழல் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் அதை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்

நான் உதவி இயக்குநரா இருந்து வெளியே வரும்போது என் இயக்குநர், ‘ஏன்டா வெளியே போறே’ன்னு அழுதார். இன்னொரு இயக்குநர், ‘நான் சுப்பிரமணிய சிவாகிட்ட டைரக்டரா வேலை செய்யுறேன்’னு எஸ்.ஏ.சியிடம் சொன்னார். எங்கள் உறவு ஆத்மார்த்தமானதா, அவ்ளோ அழகா இருந்தது. இயக்குநர் - உதவி இயக்குநர் உறவு அவ்வளவு சுமூகமாக இருந்தால் ஒரு திரைப்படம் கூடுதலாக செழுமையடையும்.

- இயக்குநர் சுப்பிரமணிய சிவா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x