Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

திரை வெளிச்சம் - ‘அந்நியன்’ யாருக்குச் சொந்தம்? :

கடந்த 2005-ம் ஆண்டு வெளியானது ‘அந்நியன்’ திரைப்படம். அந்தப் படத்தின் கதை யாருக்குச் சொந்தமானது, என்பதில் சர்ச்சை எழுந்திருக்கிறது. அந்தப் படத்தைத் தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் அதை இயக்கிய ஷங்கருக்கும் இடையில் இவ்விவகாரத்தில் அறிக்கை மோதல் நடந்தது. கதை உரிமை சார்ந்து இதுபோன்ற சர்ச்சைகளும் மோதல்களும் தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒரு வியாபாரத்தில் ஒரு பொருள் விற்கப்படுமேயானால் அந்தப் பொருளை வாங்குபவர் முழு உரிமையையும் பெற்றவராகி விடுவார். ஏனென்றால் அதற்கான விலையை அவர் கொடுத்துவிடுகிறார். இதுதான் அனைத்து வியாபாரத்திலும் நடைமுறையாக இருக்கிறது. சினிமாவிலும் தொடக்கத்தில் இப்படித்தான் இருந்தது. கதாசிரியர் தனது கதைக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, சினிமா தயாரிப்பாளருக்கு அதை விற்ற பிறகு அது எத்தனை மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டாலும் அதன் உரிமைத் தொகை தயாரிப்பாளரை மட்டுமே போய்ச் சேரும்.

முக்தா வி. சீனிவாசன்

ஒப்பந்தம் பேசும்

ஆனால், பிரபலமான கதாசிரியர்கள் தற்போது இதே வழிமுறையில் கதையை விற்றாலும் அந்த உரிமை ‘தமிழுக்கு மட்டும்’ தான் என்றும் பிற மொழிகளில் மறுஆக்க உரிமை விற்பனை செய்யப்படும்போது அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, அதாவது 50 சதவிகிதத்தை தங்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். அப்படி பிரத்யேகமாக ஒப்பந்தம் எதுவும் போட்டுக்கொள்ளாத பட்சத்தில், அந்த படம் மறுஆக்கம் செய்யப்படும்போது எந்த ஒரு தொகையையும் தயாரிப்பாளர் அந்த படத்தின் கதாசிரியருக்குத் தர வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நடைமுறையானது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் - தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியவற்றில் தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்ட ஒன்று. அவ்வகையில் பார்த்தால் ‘அந்நியன்’ படத்தின் முழு உரிமையும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு மட்டுமே போய்ச் சேரும். ஏனென்றால் இயக்குநர் ஷங்கர் கதை, திரைக்கதை, படத்தை இயக்குவது ஆகியவற்றுக்கான முழு ஊதியத்தையும் முன்னதாகவே பெற்றுக்கொண்டு விட்டார் என்பதை தயாரிப்பாளரின் ஆதாரத்துடன் கூடிய அறிக்கை சொல்கிறது.

‘முதலாளி’ போட்டுக் கொடுத்த பாதை

எனது தந்தை அமரர் முக்தா ஸ்ரீனிவாசனுடைய முதல் படம் ‘முதலாளி’. அந்தப் படத்தில் இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொண்டார். ‘முதலாளி’ படத்தின் வெற்றியால், அது பல மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. ஆனால், தமிழைத் தவிர வேறு எந்த மொழியின் மறுஆக்கத்தின்போதும் அந்தக் கதைக்கான ஊதியமாக ஒரு பைசாகூட எனது தந்தைக்குத் தரப்படவில்லை. மிகுந்த மனவருத்தம் அளித்த இச்சம்பவத்தால், ‘இந்தக் கஷ்டம் தன்னோடு போகட்டும்’ என்று தீர்மானித்தார். பிற்காலத்தில் தன்னுடைய படங்களின் கதாசிரியர்களுக்கு அந்தப் படங்கள் மறுஆக்க உரிமை விற்று வரும் தொகையில் 50 சதவிகிதத்தை நியாயமாக அளித்தார்.

கமல் ஹாசன் நடித்த ‘சிம்லா ஸ்பெஷல்’ திரைப்படத்தை என்னுடைய தந்தையார் இயக்கும்போது அமரர் விசு அந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதினார். விசு எனது தந்தையாரிடம் ஒப்பந்தம் இட்டுக்கொண்டபோது, ‘இந்த படம் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டால் எனக்கு 40 ஆயிரம் ரூபாயும் தெலுங்கு மறுஆக்கம் எனில் 20 ஆயிரம் ரூபாயும் மலையாளம், கன்னட மறு ஆக்கம் என்றால் தலா 10 ஆயிரமும் தரவேண்டும்’ என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டார். அந்த ஒப்பந்தம் இன்னும் எங்களிடம் பொக்கிஷமாக இருக்கிறது.

அவன் அவள் அது

எழுத்தாளருடன் ஒப்பந்தம்

அதேபோல், தொழில்முறை கதாசிரியர் என்றில்லாமல், எழுத்துலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் ஏராளமாகப் படமாகியிருக்கின்றன. உதாரணத்துக்கு சிவசங்கரி எழுதிய ‘சிங்கம் ஒன்று முயல் ஆகிறது’ என்கிற கதையின் உரிமையைப் பெற்ற தந்தையார், ‘அவன் அவள் அது’ என்கிற பெயரில் திரைப்படமாகத் தயாரித்தார். அப்போது ‘இந்தக் கதை உரிமை தமிழ் மொழி திரைப்படத்துக்கு மட்டும்தான்’ என்றும், பிறமொழிகளில் மறுஆக்க உரிமை விற்பனை செய்யப்பட்டால் அத்தொகையில் 50 சதவிகிதம் தனக்குக் கொடுக்கப்பட வேண்டும்’ என ஒப்பந்தம் இட்டுக்கொண்டார்.. அந்தப் படம் தமிழில் வெற்றியடைந்த பிறகு, வேறு சில மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. ஒப்பந்தப்படி மறுஆக்க வருமானத்திலிருந்து 50 சதவிகிதம் பங்கினை சிவசங்கரிக்குக் கொடுத்தார்.

ஃபிளாஷ் டான்ஸ்

காப்பிரைட் நடைமுறை

ஹாலிவுட் உட்பட பல வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களில் காப்பிரைட் சட்டம் உறுதியாகச் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியத் திரையுலகில் காப்பிரைட் பற்றிய சரியான புரிதல் இல்லை. காப்பிரைட் என்றால் திரைப்படங்களில் வரும் வசனம், உடைகள் தொடங்கி எதுவொன்றையும் வேறு ஒருவர், வேறு படத்திலோ, விளம்பரத்திலோ, ஊடகத்திலோ, அல்லது விற்பனை, சேவை என எதற்குப் பயன்படுத்தினாலும் அதற்கான நஷ்ட ஈட்டை, தயாரிப்பாளர் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஹாலிவுட்டில் 1983-ல் வெளியான ‘ஃபிளாஷ் டான்ஸ்’ என்கிற படத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அந்தப் படத்தின் கதாநாயகி ஜெனிஃபர் பீல்ஸ், இடது தோள் பட்டை தெரிகிற மாதிரி படம் முழுவதும் அணிந்து நடித்த டி சர்ட்டினை, பிரதி செய்தும் கொஞ்சம் மாற்றியும் டிசைன் செய்து மேலாடைகளைத் தயாரித்தவர்கள், காப்பிரைட் சட்டத்தின்படி, அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு வழங்கினார்கள். இன்னும் புரியும்படி கூற வேண்டுமானால், ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிகாந்த் பேசும் ‘நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி..’ என்கிற வசனம், வேறு படத்தில் பயன்படுத்தப்படுமானால் ‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பாளர், நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து முறையான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுதான் காப்பிரைட் சட்டம்.

முதலாளி

ஒரு படத்தின் தணிக்கைச் சான்றிதழ் என்பது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே வழங்கப்படும் அரசாங்க அங்கீகாரம். சான்றிதழில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதோ அவர்களுக்கே காப்பிரைட்டின் முழு உரிமையும் போய்ச் சேரும். அந்த வகையில் பார்த்தால், ‘அந்நியன்’ படத்தைப் பொறுத்தவரை தமிழில் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குவதற்காகத் தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் இட்டுக்கொண்டு, அதற்கான சம்பளம் முழுவதையும் படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனிடமிருந்து இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டுள்ளார். படத்தின் இந்தி மொழிமாற்றுப் பதிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. அப்போது இயக்குநர் ஷங்கருக்கு எந்தவொரு தொகையும் வழங்கப்படவில்லை. தற்போது அந்தப் படத்தை இந்தியில் மறுஆக்கம் செய்வதற்குத் தயாரிப்பாளருடன் எந்தவித ஒப்பந்தமும் செய்துகொள்ளாத பட்சத்தில், ஷங்கர் எந்த வகையிலும் ‘அந்நியன்’ கதைக்கு உரிமை கோர முடியாது. இதுவே நடைமுறை.

கட்டுரையாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், முக்தா பிலிம்ஸ்.

தொடர்புக்கு: muktha.sri@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x