Last Updated : 29 Apr, 2021 03:12 AM

 

Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

இயேசுவின் உருவகக் கதைகள் 37: மனிதமே புனிதம்

மனிதருக்கு எதிரான காரியங் களைச் செய்துகொண்டே இறைவனுக்கு நெருங்கி இருக்க முடியும் என்று நினைப்போர் உள்ளனர். மனித நலனில் சிறிதும் அக்கறையின்றி வாழ்ந்துகொண்டே இறைவனின் அன்பையும் அருளையும் பெற முடியும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது. இது சாத்தியமற்றது என்பதே இயேசுவின் வாழ்க்கை நமக்குக் காட்டும் உதாரணம் ஆகும்.

ஒருமுறை இயேசுவும் அவரது சீடர்களும் ஒரு வயல் வழியே சென்று கொண்டிருந்தனர். சீடர்களுக்கு கடும்பசி. எனவே வயலில் விளைந்திருந்த கோதுமைக் கதிர்களைப் பிடுங்கி, தங்கள் கைகளில் வைத்துக் கோதுமை மணிகளை உதிர்த்து அவற்றை உண்டனர். அன்று யூதர்களின் ஓய்வு நாள்.

ஓய்வு நாள் வந்தது

வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் நேரத்திலிருந்து சனிக்கிழமை மாலை சூரியன் மறையும் வரை ஓய்வு நாளாகக் கருதப்பட்டது. ஓய்வு நாள் என்று வாரத்தில் ஒரு நாளை அனுசரிக்கும் பழக்கம் எப்படி வந்தது? பைபிளின் முதல் நூலான தொடக்க நூல் கடவுள் உலகை ஆறு நாட்களில் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார் எனச் சொல்கிறது. கடவுளைப் போலவே யூதர்களும் வாரத்தில் ஆறு நாட்கள் உழைத்து, ஏழாவது நாள் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வாக இருக்க வேண்டும் என்று யூதர்களின் சட்டம் வலியுறுத்தியது. இந்த ஓய்வுநாள் சட்டம் மோசே வழியாக இறைவன் தந்ததாக யூதர்கள் நம்பிய பத்துக் கட்டளைகளில் நான்காவதாகும்.

ஓய்வு நாள் அன்று வழக்கம்போல் உழைக்காமல் ஓய்வெடுக்க வேண்டும் என்றுதான் அவர்களின் மறைநூல் கூறியதே தவிர, வேறு விவரங்களை அது சொல்லவில்லை. ஆனால் ஆர்வக் கோளாறு காரணமாக, தீவிரமாக இது பற்றிச் சிந்தித்து, ஓய்வு நாளில் எதைச் செய்யலாம், எதைச் செய்யாமல் கவனமாகத் தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு நுணுக்கங்களைப் பரிசேயர்கள் வலியுறுத்தினர்.

இவற்றை இயேசுவும் அவரது சீடர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் மிகுதியாக இருந்த பசியால் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் உண்பதை இயேசுவும் தடுக்கவில்லை.

இதனால் கோபமுற்ற சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, "ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வது ஏன்?" என்று கேட்டனர். இயேசு யூத மறைநூலில் உள்ள ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டினார். யூதர்கள் மதித்துப் போற்றிய தாவீதும் அவருடைய வீரர்களும் ஒரு ஓய்வு நாள் அன்று பசியும் களைப்பும் மேலிட ஆலயத்துக்குள் புகுந்தனர். தங்களது நிலையைச் சொல்லி உண்பதற்கு அப்பம் ஏதும் இருக்கிறதா என்று தாவீது கேட்டார். குருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய திரு அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இல்லை என்றாலும் அவர்கள் பசியில் வாடியதால் அங்கிருந்த திரு அப்பங்களை ஆலயக் குரு தாவீதிடம் தர, அவற்றை அவரும் அவரது வீரர்களும் உண்டனர். ஓய்வு நாள் அன்று தன் சீடர்கள் பசியில் தானியக் கதிர்களை உண்பது தவறு என்றால் தாவீது செய்ததும் தவறு என்றாகி விடும் அல்லவா?

நம் அன்புத் தந்தையான இறைவன் பசித்திருக்கிற தனது மக்கள் பசியாற உண்ண வேண்டும் என்று விரும்புவாரே தவிர, ஓய்வு நாள் என்பதால் அவர்கள் தொடர்ந்து பசியில் வாட வேண்டும் என்று ஒருநாளும் விரும்ப மாட்டார் என்ற உண்மையைத்தான் இயேசு அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

உன் கையை நீட்டும்

இதேபோல ஓய்வு நாள் அன்று உடல் குறைகள் உள்ளவர்களை இயேசு குணமாக்குவதற்கும் பரிசேயர்கள் மறுப்புத் தெரிவித்தனர். ஓய்வு நாள் அன்று தொழுகைக் கூடத்திற்குச் சென்று கற்பித்த இயேசு செயலிழந்த கையோடு ஒருவர் அங்கு இருப்பதைப் பார்த்தார். அவருக்கு குணம் தர விரும்பிய இயேசு அவரை எழுந்து வந்து நடுவில் நிற்கச் சொல்லிவிட்டு, பரிசேயர்கள் பக்கம் திரும்பி, "ஓய்வு நாளில் நன்மை செய்வது சரியா? தீமை செய்வது சரியா? ஓய்வு நாள் அன்று ஓர் உயிரைக் காக்க வேண்டுமா? அழிக்க வேண்டுமா? எது முறை?" எனக் கேட்டார். யாரும் பதில் எதுவும் கூறாமல் மௌனம் காத்தனர். அந்த மனிதரிடம், "உன் கையை நீட்டும்" எனச் சொல்ல, அவரது கை முற்றிலும் குணமானது.

இத்தனை ஆண்டுகளாய்ப் பட்ட‌ துன்பத்தினின்று விடுதலை பெற்று தமது குழந்தை மகிழ்ந்திருப்பதைப் பார்த்து, அன்புத் தந்தையான இறைவன் மகிழ்வாரா அல்லது ஓய்வு நாள் அன்று குணம் பெற்றதன் மூலம் ஓய்வு நாள் சட்டத்தை அவர் மீறி விட்டார் என்று கோபம் கொள்வாரா?

இயேசுவும் அவரது சீடர்களும் விருந்துகளில் கலந்து கொண்டதும் பரிசேயருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. “நாங்கள் நோன்பிருப்பது போல உங்கள் சீடர்களும் நோன்பிருப்பதற்குப் பதிலாக, விருந்துகளில் கலந்து கொண்டு, உண்டு குடிப்பது சரியா?” என்று இயேசுவிடம் கேட்டனர்.

அன்பே உயரிய சட்டம்

இயேசு திருமண விழாக்களில் நடப்பதைச் சுட்டிக்காட்டினார். ஏறக்குறைய ஒரு வாரம் நடந்த திருமண விழாக்களில் மணமகனும் அவருடைய நண்பர்களும் உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர். அது சரியான, முறையான பழக்கம். காரணம் அது உண்டு, குடித்து, கொண்டாடுவதற்கான நேரம். மணமகன் அவர்களை விட்டுச் சென்ற பிறகு, அவரது நண்பர்கள் நோன்பு இருக்கலாம் என்று சொன்னார் இயேசு.

ஒன்று சரியா தவறா, இறைவனுக்கு உகந்ததா இல்லையா என்பதை எதன் அடிப்படையில் புரிந்துகொள்வது? நம்மை அன்பு செய்வதால், நம் மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட நம் தந்தையாகிய இறைவனுக்கு இது மகிழ்ச்சி தருமா, இல்லையா என்ற சிந்தனையே நம்மை வழிநடத்த வேண்டுமே தவிர, சட்டத்திலிருந்து நமது சிந்தனையைத் தொடங்கி 'சட்டம் என்ன சொல்கிறது?' என்று கேட்பது தவறு.

மனிதம் தவிர வேறில்லை

எனவே ஆரோக்கியமான ஆன்மிகத்தின் மையம் மனிதம் தவிர வேறில்லை. மனிதநேயத்துக்கு எதிராக நடந்துகொண்டால், அது இறைவனின் அன்புள்ளத்தை வருத்துமே தவிர, மகிழ்விக்காது.

மனிதமே புனிதம். எனவே மனிதனுக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு, மனித நலத்திற்கு, மனிதநேயத்துக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எவரும் இறைவனுக்கு உகந்தவர்களாக ஒரு நாளும் இருக்க முடியாது என்பதே இயேசுவின் வாழ்வும் வாக்கும் நமக்குக் கற்பிக்கும் பேருண்மை.

(தொடரும்) கட்டுரையாளர்,

தொடர்புக்கு : majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x