Last Updated : 27 Apr, 2021 06:29 AM

 

Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

அந்த ஒரு நிமிடம் 3: தயக்கத்தைத் தகர்த்தெறிந்த வெற்றி

பால் ரட்

ஹாலிவுட்டில் காலடி எடுத்துவைத்திருந்த இளைஞர் லியோ, ரொம்பவும் ஜாக்கிரதையாக முன்னேறிக் கொண்டிருந்தார். காதல் படங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். ‘ரோமியோ - ஜூலியட்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அவருக்குப் புதிய பட வாய்ப்புத் தேடி வந்தது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸின் படம். கதாநாயகன் கதாபாத்திரத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்களைப் பார்த்து சலித்துபோயிருந்த ஜேம்ஸ், நாயகனாக லியோ சரியாக இருப்பார் என முடிவெடுத்திருந்தார்.

கேள்வி மேல் கேள்வி

உடனே லியோவை அணுகிய ஜேம்ஸ், ஸ்கிரிப்ட்டைக் கொடுத்துவிட்டு கதையை விவரித்தார். ஆனால், ஜாக் டாவ்சன் என்கிற கதாபாத்திரம் சிக்கலானதாகவும் சட்டென்று கவரக்கூடியதாகவும் இல்லை என லியோ நினைத்தார். அதில் தான் நடிப்பது சரியாக இருக்குமா என்று யோசித்தார். ஆனால், ஜேம்ஸ் விடாமல் லியோவை அணுகிக்கொண்டே இருந்தார். படத்தின் எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளர் ரே சஞ்சினியை லியோவிடம் இயக்குநர் ஜேம்ஸ் அனுப்பிவைத்தார். சஞ்சினியும் லியோவிடம் கதையை விரிவாகக் கூறி ஒப்புதல் பெற முயன்றார்.

“ஜாக் டாவ்சன் கதாபாத்திரம் ஒரு தூய்மையான இதயம்னு சொல்றீங்க. அவர் எதற்கும் பயப்பட மாட்டார்ங்கறீங்க. ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். விரும்பும் பெண்ணுக்காக உயிரை விடுகிறார்னு வேற சொல்றீங்க. அப்படின்னா ஜாக் டாவ்சன் உண்மையிலேயே யார்? அவனுக்கு அந்த படத்துல என்னதான் வேலை? அவன் ஏன் செத்துபோகணும்?” என்று படத்தில் வரும் கதாபாத்திரம் பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டார் லியோ.

பால் ரட்

கிடைத்த அறிவுரை

சஞ்சினி 15 நிமிடங்கள் மட்டுமே படத்தைப் பற்றி லியோவிடம் விவரித்திருந்தார். ஜேம்ஸும் சஞ்சினியும் பிறகு சந்தித்தபோதெல்லாம், கதையைப் பற்றி லியோ நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். இப்படியே மூன்று மாதங்களுக்குக் கதையைப் பற்றி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தார் லியோ. ஆனாலும், அந்தக் கதாபாத்திரம் தனக்குச் சரியாக அமையுமா என்கிற குழப்பம் மட்டும் அவருக்குத் தீரவில்லை.

ஒரு நாள் ‘ரோமியோ-ஜூலியட்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, அந்தப் படத்தில் நடித்துவந்த நண்பன் பால் ரட்டுடன் (‘ஆன்ட் மேன்’ நாயகன்) லியோ காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தனக்கு வந்த பட வாய்ப்புப் பற்றி லியோ பகிர்ந்துகொண்டார்.

“பால், எனக்கு ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. அது ரொம்பப் பெரிய படம். பெரிய பட்ஜெட். ஆனா, அது ஒரு ஸ்டுடியோ படம்”.

“அற்புதம் லியோ. அந்தப் படத்தில் நீ கண்டிப்பாக நடிக்கணும். அந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதே” என்று பால் ரட்டிடமிருந்து சட்டென பதில் வந்தது.

“என்னை நடிக்கச் சொல்லி கேட்டுக்கிட்டே இருக்காங்க பால். ஆனால், அந்தப் படத்தோட கதையை நினைக்குறப்ப நடிக்கிறதா, வேண்டாமான்னு ஒரே குழப்பமா இருக்கு”.

“அந்தக் கதையின் உண்மைத்தன்மை பத்தி எனக்கு நிறைய தெரியும். என்னோட அப்பா அதைப் பத்தி நிறைய சொல்லியிருக்காரு. ரொம்ப யோசிக்காதே. பெரிய இயக்குநர் படம் வேற. நிச்சயம் ஹிட் அடிக்கும், ஒத்துக்கோ” என்று பால் ரட் கூறினார். கடைசியாக சமாதானமடைந்து அந்தப் படத்தில் நடிக்க லியோ ஒப்புக்கொண்டார்.

தேடித் தந்த புகழ்

அடுத்த சில நாட்களில் அந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது. அது, 1990-களின் இறுதியில் உலக பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் பெரும் சாதனை படைத்த ‘டைட்டானிக்’. புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘டைட்டானிக்’ படத்தில், ஜாக் கதாபாத்திரத்தில் நடிக்க அவ்வளவு யோசித்த அந்த நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ.

‘டைட்டானிக்’ வெளியான பிறகு நிகழ்த்திய சாதனை இன்றைக்கு வரலாறு. அந்தப் படத்துக்குப் பிறகு டிகாப்ரியோவின் புகழ் தொட முடியாத உயரத்துக்குச் சென்றது. உலகெங்கும் டிகாப்ரியோவுக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள். கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் ‘லியோமேனியா' என்கிற புதிய அலையே உருவானது. படத்தில் அவருடைய சிகை அலங்காரத்தைப் போலவே பலரும் தங்கள் சிகையை மாற்றிக்கொண்டார்கள். இத்தனைக்கும் காரணம் ‘டைட்டானிக்’.

ஒரு கார் பயணத்தில் நண்பனின் சில நிமிட அறிவுரையும் டிகாப்ரியோ உறுதியான முடிவெடுக்கத் தூண்டுகோலாக இருந்தது. கேள்விகளைக் கேட்பது எவ்வளவு அவசியமோ, அதற்கு இணையாக பதிலுக்கான தேடலும் அவசியம்!

( ‘டைட்டானிக்’ படம் இந்த ஆண்டு 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது)

(நிமிடங்கள் நகரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x