Last Updated : 25 Apr, 2021 04:57 AM

 

Published : 25 Apr 2021 04:57 AM
Last Updated : 25 Apr 2021 04:57 AM

நலமும் நமதே: பழைய சோறு புதிய தகவல்!

ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் பொதுமக்களுக்குக் கிடைப்பதன் மூலம் ஆரோக்கியம், நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவை பற்றி விழிப்புணர்வை அளிக்க முடியும். இதற்காக மருத்துவர் தாரிணியும் பல் மருத்துவரான மேனகாவும் ‘தாரிணி கிருஷ்ணன் ஈஸி டயட்ஸ்’ என்னும் பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கினர்.

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் உணவு முறைகள் போன்றவை பற்றி ஓராண்டுக்கும் மேலாகக் காணொளிகளைப் பதிவிட்டுவருகின்றனர். உடலின் வெப்பத்தை மட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை அளிக்கும் பதிவு, காணொளிப் பானையிலிருந்து இரு பருக்கைகள்!

தாகம் தணிக்கும் தர்பூசணி

தர்பூசணியையும் கிர்ணிப் பழத்தையும் பூசணியையும் பலர் குழப்பிக்கொள்கின்றனர். 92 சதவீதம் நீர் இருப்பதால்தான் தர்பூசணியை வாட்டர்மெலன் (Watermelon) என்கின்றனர். 100 கிராம் பழத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கும் நன்மை தரும் சத்துகள் உள்ளன. இந்தப் பழத்தை உண்பதால் உடல் எடை குறையும். சர்க்கரை நோயாளிகளும் அரை கப் தர்பூசணி சாறு சாப்பிடலாம். விட்டமின் சி, சிட்ரஸ் சத்து உடலுக்கு நல்லது.

பழத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. மில்க்ஷேக் செய்யத் தேவையில்லை. இது தாகத்தைத் தணிக்கும் கனி என்பதால்தான் வெயில் காலத்தில் விளைகிறது. இதில் பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் பொட்டாசியம் சேர்க்கை அதிகம் இருப்பவர்கள் தர்பூசணியைத் தவிர்ப்பது நல்லது.

பழைய சோறு

மீந்த சோற்றை 10 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து உண்டாக்குவது பழைய சோறு. இப்படிச் செய்வதால் இதில் பி காம்ப்ளக்ஸ், விட்டமின் கே, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்றவை கிடைக்கின்றன. அத்துடன் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த பாக்டீரியாக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கின்றன. பச்சரிசிப் பழைய சோற்றைவிடப் புழுங்கலரிசி பழைய சோறு நல்லது. அதையும்விடச் சிறந்தது கைக்குத்தல் அரிசி. சிலருக்குப் பழைய சோறு சாப்பிடப் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் சோறு ஊறியிருக்கும் நீரைக் குடித்தாலே போதும். அவர்களுக்கு மேற்படி சத்துக்கள் கிடைக்கும். பழைய சோற்றுக்குத் தொட்டுகையாக சின்ன வெங்காயத்துக்கு முதலிடம். இல்லாவிட்டால் எலுமிச்சை ஊறுகாயைத் தொட்டுக்கொள்ளலாம். வெயில் காலத்தில் உடலின் குளிர்ச்சிக்கு இந்தப் பழைய சோறு உதவுகிறது. மூன்று வயது குழந்தையிலிருந்து எல்லோரும் சாப்பிடலாம். வாயுத் தொல்லை இருப்பவர்கள் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

https://www.youtube.com/watch?v=xxPGLmFIrZQ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x