Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

மறைந்துவரும் ஊளைச் சத்தம்

டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்

உவமைக்காகவும் கதைகளிலும் அடிக்கடி பேசப்படும் நரிகளைத் தமிழகத்தில் நேரில் காண்பது அரிதாகிவிட்டது. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களிலும் தர்மபுரியை ஒட்டிய வறண்ட பகுதிகளிலும் அரிதாக நரி கண்ணில் படுகிறது.

நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தவை நரிகள். வட இந்தியாவில் கன்ஹா, பரத்பூர் ஆகிய சரணாலயங்களில் காணப்படும் நரிகளைவிடத் தமிழக நரி சற்றே சிறிதாகக் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இவை வாழ்கின்றன. கிராமத்தின் வெளிப் பகுதிகள், வேளாண் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள் போன்ற பகுதிகளில் நரி வாழ்கிறது.

கிராமத்தை ஒட்டிய பகுதிகளிலும் வேளாண்மை புரியும் காட்டுப் பகுதிகளிலும் பூமிக்கு அடியில் வளை தோண்டிவாழ்கிறது. தமிழில் வட்டார வழக்கில் பலவகையில் அழைக்கப்பட்டாலும் நரி, கணநரி, குறுநரி ஆகிய பெயர்கள் பதிவாகியுள்ளன.

நரியின் பண்புகள்

30 ஆண்டுகளுக்குமுன் மாலை மங்கத் தொடங்கிய வேளையில், உணவு தேட வருவ தற்கு முன்னும், கதிரவன் எழுவதற்கு முன்னும், கிழக்கு வெளுக்கத் தொடங்கும் வேளையிலும், ஓய்வெடுக்கத் தங்குமிடம் தேடித் திரும்பும் வேளையிலும் நரிகள் ஊளையிட்டதைக் கேட்க முடிந்தது. தலையை உயரே தூக்கி ஊளையிட்டபடி, ஆங்காங்கே மாறிமாறி நின்று ஊளையிடுவதை அந்தக் காலத்தில் கேட்கவும் பார்க்கவும்கூட முடிந்தது.

நரி வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டது. மாலைப் பொழுதில் உணவுக்காக வெளிவந்து அதிகாலைப் பொழுதில் தங்குமிடத்திற்குத் திரும்பிச் சென்று ஓய்வெடுக்கும்.குளிர்காலத்திலும் மேகமூட்டமான காலங்களிலும் மனிதர்கள் நடமாடாத பகுதிகளில் வேட்டையாட வரும். வெப்பமான காலங்களில் நீர் அருந்தவும், நீரில் அமரவும், குளிக்கவும் பகற்பொழுதில் வெளியே வரும் இயல்புடையது.

குட்டிகளும் எல்லையும்

பெண் நரி சற்று குறைந்த உயரம், எடையுடன் காணப்படும். ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் குட்டிகள் ஈனும். பெண் நரி வளையில் 2-4 குட்டிகளை ஈனுகிறது. குட்டிகள் ஓராண்டுக்குள் வளர்ந்து பெரியவையாகிவிடுகின்றன. 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. நீண்ட தூர ஓட்டத்திற்கு ஏற்றவாறு நரிகளின் கால்கள் நீண்டு அமைந்துள்ளன. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் ஓடும்திறனைப் பெற்றிருப்பது, நரி வேட்டையாடுவதற்குப் பெரிதும் உதவுகிறது.

சில பாலூட்டிகளைப் போல தன் வாழிட எல்லையைச் சிறுநீர், மலம் கொண்டு வரை யறுக்கும். அத்துடன் நிலப்பரப்பைச் சுற்றி அடையாளங்களைக் குறிப்பதன் மூலமும் தன் இணையை மற்ற இணைகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளும். குட்டிகள் வளர்ந்து தங்கள் வாழிடத்தை நிறுவும்வரை பெற்றோருடனே வாழ்கின்றன.

உணவு

கிராமப் பகுதிகளில் வாழும் நரிகள் பெரும்பாலும் எலிகள், சில வேளைகளில் முயல்கள், வயல்வெளி நண்டுகள், பறவை கள், பூச்சிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன. சில நேரம் காய்கறி களைக்கூட விட்டு வைப்பதில்லை.

மேய்ச்சலில் உள்ள ஆட்டு மந்தைகள், கிடை/பட்டியில் உள்ள ஆடுகள், செம்மறி ஆடுகள், குட்டிகள், வளர்ப்புக் கோழிகள், புறாக்கள் போன்றவற்றையும் இரவு நேரத்தில் கவ்வியெடுத்துச் சென்று கொன்று தின்னக்கூடியது. சிறிய, அடிபட்ட பாலூட்டிகளையும் கொன்று தின்னும்.

சங்க இலக்கியத்தில் நரி

சங்க இலக்கியங்களில் நரியின் வாழிடம், வேட்டையாடும் முறை பற்றி வியப்படைய வைக்கும் குறிப்புகள் உள்ளன. ‘நாயும் நரியும்’ என்கிற வழக்கு உரையாடலில் இருந்துள்ளது. சங்க இலக்கியத்தில் கணநரி (Jackal) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூற்றிலும் புறநானூற்றிலும் கணநரி எனக் கூறப்பட்டுள்ளது. இவை கூட்டமாக வேட்டையாடுவது இந்தப் பெயருக்குக் காரணமாக இருக்கலாம்.

நரி பற்றிய மற்றொரு செய்தியும் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது. இறந்த விலங்குகளின் தசையோ எலும்போ கிடந்தால்கூட உண்டு வாழும் என்றும், இதனால் தோட்டி என்றும் அழைக்கப்படுகிறது. காடுகளில் கழிந்த ஊன் தசைகளையும், வேட்டையாடும் புலி முதலிய விலங்குகள் உண்டதுபோக எஞ்சியதையும் இந்நரிகள் உண்ணும். எனவே, இவற்றுக்கு எப்போதும் உணவுப் பஞ்சம் கிடையாது. ‘நரியிற் கூன் நல்யாண்டும் தீயாண்டும் இல்’ என்கிறது பழமொழி நானூறு (102). நரிக்கு உணவு நிறையக் கிடைக்கிற நல்ல காலமும், உணவு கிடைக்காத பஞ்ச காலமும் கிடையாது என்பதைக் கண்டுணர்ந்து கூறப்பட்டுள்ளது.

பாறுக் கழுகும் நரியும்

காடுகளில் வாழும் நரிகள் புலி, சிறுத்தை ஆகியவை வேட்டையாடித் தின்றது போக எஞ்சிய இரையைப் பெரும்பாலும் இரையாகக் கொள்ளும். இத்தருணங்களில் பிற உயிரினங்களுடனும் குறிப்பாக பாறுக் கழுகுகளுடன் (பிணந்தின்னிக் கழுகு) போட்டியிடுதலும், மோதலும் ஏற்படுவதுண்டு. அத்தருணங்களில் தனக்குரிய இரையை லாகவமாக எடுத்துக்கொள்ளும். எருவைக் கழுகுகளுடன் சேர்ந்து நரிகள் உண்ணும் என்பதை அகநானூறு 275ஆம் பாடலிலும், நற்றினை 352ஆம் பாடலில் சிவந்த தலையுடைய எருவைக் கழுகுடன் (Red-headed Vulture) சண்டையிட்டு இரையை நரி தின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

நரி ஊளையிடுவதைப் பற்றி மணி மேகலையில் “நீண்முக நரியின் தீவிளிக் கூவும்” என்கிற பாடல் தெரிவிக்கிறது. மலையாளத்தில் கணநரியை ஊளன் என்கின்றனர்.

அழியும் நரிகள்

தமிழகத்தில் தற்போது அழிந்துவரும் பாலூட்டிகளில் நரியும் ஒன்று. வேளாண் காடுகளில் பழங்கள், கரும்புகள், மக்காச் சோளம் போன்றவற்றைச் சேதம் செய்வதால், கோழி, ஆடு போன்றவற்றின் குடலினுள் வெடிக்கும் மருந்தை நரிகள் நடமாடும் பகுதிகளில் வைத்துவிடுகிறார்கள். இந்த வாய் வேட்டுவை நரி கவ்வும்பொழுது வெடித்து இறந்துவிடும். பூச்சிக்கொல்லிகளால் சிற்றுயிர்கள், பூச்சிகள், ஊர்வன போன்றவை பெருமளவு அழிந்ததால், நரிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் வாழிட அழிப்பு, காடுகள் சுருக்கப்பட்டதால் தமிழகத்தில் நரிகள் பெருமளவு அழிந்துவிட்டன.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

தொடர்புக்கு: arunthavaselvan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x