Last Updated : 23 Apr, 2021 03:14 AM

 

Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

ஓடிடி உலகம்: நான்கு காதல்கள்!

ஓடிடி உலகின் அண்மைக்கால ஈர்ப்பு ஆந்தாலஜி படைப்புகள். அந்த வரிசையில் கடந்த வாரம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ திரைப்படம். ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’, ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ வரிசையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களுடைய கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்தப் புதிய ஆந்தாலஜியை கரண் ஜோகர் தயாரித்துள்ளார்.

கறுப்பும் வெள்ளையுமாக நாம் எதிர்கொள்ளும் வாழ்வின் அபத்தங்கள் பலவும், உண்மையில் இந்த இரண்டுக்கும் இடையில், எளிதில் பிடிபடாத எண்ணற்ற சாயல்களைக் கொண்டிருக்கும். அப்படியான வினோத சாயல்களின் சில தெறிப்புகளை வினோதக் கதைகள் எனப் பொருள்படும் தலைப்பில் வெளியாகியிருக்கும் ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ ஆந்தாலஜியில் காணலாம். இதில் மொத்தம் நான்கு குறும்படங்கள்.

1.முதல் குறும்படம் ‘மஜ்னு’. இருவீட்டார் இசைவுடன் நடந்த ஏற்பாட்டுத் திருமணத்தின் முதலிரவு. ’பெயருக்கு மட்டுமே கணவன்’ என்று அவன் தன்னிலையை விளக்கி விலகுகிறான். விக்கித்துப் போகும் அவளுக்கு அந்த மாட மாளிகை பாலையாகிறது. தடம்புரண்ட இல்லற ரகசியம் வெளியே கசிகிறது. அடுக்கடுக்காய் ஆண்கள் அம்பெய்தியும் மசியாத அவள், கணவனின் புதிய விசுவாசியாய் வரும் ஒரு கட்டழகனிடம் சரிகிறாள்.

அந்த இருவரும் ஊரை விட்டு ஓடிப்போகத் திட்டமிடுகிறார்கள். அந்த நாளில் பழிவாங்கல், ஏமாற்றம், துரோகம் எனப் புதைந்திருந்த பலவும் வெளிப்படுகின்றன. அவற்றோடு முறிந்த இல்லறத்தைப் பதியமிடும் வினோத உறவொன்றும் மலரத்தான் செய்கிறது. ஜெய்தீப், ஃபாத்திமா சனா உள்ளிட்டோர் நடிக்க ஷஷாங் கைதான் இயக்கி உள்ளார்.

2. ஒரே வசிப்பிடத்தில் குறுக்கிடுகிறார்கள் இருவேறு வர்க்கத்தினர். அவர்கள் மத்தியில் ’பொம்மை’ என்பதன் பொருளை உலுக்கும் அதிர்ச்சியுடன் பேசுகிறது ‘கிலோனா’ குறும்படம். பணக்காரக் குடியிருப்பின் இளம்வயது பணிப்பெண் மீது கண் வைக்கிறான் கபட கனவான். அவனை அலட்சியம் செய்யும் அவள், பத்து வயது சுட்டித் தங்கையின் பாசத்திலும் சக தொழிலாளி இளைஞனின் அணைப்பிலும் தன் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறாள். ஆனால் வீட்டின் தொலைந்த மின்சாரம் திரும்புவதற்குக் கனவானின் தினவுக்கு அவள் இரையாக வேண்டிய நிர்பந்தம் வருகிறது.

இந்தச் சூழலில் குடியிருப்பில் கோரச் சம்பவம் ஒன்று நேரிடுகிறது. அதன் குற்ற விசாரணைகள் நிகழ்காலத்திலும், அதையொட்டிய பின்னணியில் இதரக் காட்சிகளுமாக நான் - லீனியர் கதை சொல்லலில் குறும்படம் விரிகிறது. சஸ்பென்சைத் தாங்கும் முயற்சியில் மையத்திலிருந்து கதை விலகினாலும், சகோதரிகளாக வரும் நஷ்ரத் - இனயத் நடிப்பு அதை மறக்கடிக்கிறது. பார்வையாளர்களைத் தொந்தரவு செய்யும் ஒரு காட்சியைக் கோக்க இயக்குநர் ராஜ் மேத்தாவுக்கு ஓடிடி சுதந்திரம் உதவி இருக்கிறது.

3.பாலின, சாதி அரசியலை ஒருசேரப் பேசுகிறது ‘கீலி புச்சி’. தனக்குச் சேர வேண்டிய பதவி, சாதி காரணமாக இன்னொருத்தித் தட்டிச் செல்வதைப் பார்த்து அடிமட்டத் தொழிலாளியாக நீடிக்கும் அவள் கொதிக்கிறாள். இருவரைத் தவிர வேறு பெண்களே இல்லாத அந்தத் தொழிற்சாலையின் சூழல், ஒரு கட்டத்தில் இந்த இரு பெண்களையும் தவிர்க்க இயலாது நட்பு பாராட்டச் செய்கிறது. பின்னர், தன்பாலீர்ப்பு, இருவருக்கும் இடையே பொதுவானதாக முகிழ்கிறது.

கணவனிடம் ஈர்ப்பே இல்லை எனக் குமையும் அதிதி ராவ், சாதியம்-ஆணாதிக்கம் இரண்டையும் எகிறித் தாக்கும் கொங்கனா சென் எனப் பெண்கள் இருவரும் படிப்படியாய் தன்பால் ஈர்ப்பில் சரியும் காட்சிகள் அழகு. பாலினச் சிறுபான்மையிலும் ஓங்கும் சாதி மனப்பான்மை, இரட்டைக் குவளை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியதில் இயக்குநர் நீரஜ் கெய்வான் தனது படைப்பை இந்த ஆந்தாலஜியின் ஆகச்சிறந்ததாக நிலை நிறுத்துகிறார்.

4. காதலின் ’பேசப்படாத’ பக்கங்களைப் புரட்டுகிறது கயோஸ் இரானி இயக்கியிருக்கும் ‘அனகஹா’ குறும்படம். பதின்மத்தில் கால் வைக்கும் செல்ல மகளின் செவித்திறன் பாதிப்பை எண்ணி அவள் தாய் மருகுகிறாள். மகளுடன் நேரம் செலவழிக்காத, மகளின் உலகத்தில் பிரவேசிப்பதற்கான சைகை மொழியைக் கற்றுக்கொள்ளாத தன் கணவனுடன் அவளுக்குச் சதா சண்டையும் நீடிக்கிறது. இந்தப் பிணக்கின் ஊடே தனது தாம்பத்திய வாழ்க்கை நசிந்திருப்பதையும் அவள் கண்டுகொள்கிறாள்.

ஓவிய கண்காட்சி ஒன்றில் செவித்திறனற்ற ஓவியன் ஒருவனிடம் அநிச்சையாய் சைகை மொழியில் தொடங்கும் அவளது நட்பு, அவனது வெகுளித்தனத்தால் மேலும் நெருக்கமாகிறது. ஓரிரவு அவனோடு கழித்ததில் தனது காதல் உயிர்ப்பித்தையும் உணர்கிறாள். கனத்த மனத்தோடு வீடு திரும்பும் அவளை, அந்தக் காதலனும் தவிப்பாய்ப் பின்தொடர்ந்து வருகிறான். தங்கள் வீட்டு வாயிலில் அந்த இருவரையும் கண்ணுறும் மகள், தாயிடம் தவிப்பாய் ஒரு கேள்வியைக் கேட்பதுடன் குறும்படம் நிறைகிறது.

மாற்றுத் திறனாளி மகளைத் தேற்றுவதிலும் அவளுக்காகக் கணவனிடம் சண்டையிடுவதிலும் மகளுக்கான தேடலின் வழியே தன் காதலைக் கண்டுகொண்டதிலுமாகப் பேரிளம் பெண்ணாக பொருந்திப் போகிறார் ஷெஃபாலி ஷா. அவரது அகன்ற கண்களே பக்க வசனங்களை அநாயாசமாய்ப் பேசி விடுகின்றன. மனத்தோடு பேசும் மாயக்காரனாக சைகையில் வசியம் பண்ணும் மானவ் கௌவ், நிறைவுக் காட்சியில் கலங்க வைக்கிறார். இந்த ஆந்தாலஜின் சிறந்த படைப்புகளில் இது இரண்டாவதாகிறது.

தொடர்புக்கு:leninsuman5k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x