Last Updated : 20 Apr, 2021 03:14 AM

 

Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

அந்த ஒரு நிமிடம் 2: கவனம் சிதறிய சிறுவனின் விஸ்வரூபம்!

பயிற்சியாளர் பாப் பவுமனுடன்

“இந்தச் சிறுவன் எதற்கும் உதவ மாட்டான்” - மைக்கேலின் அம்மா டெப்பியைப் பார்ப்பவர்கள் எல்லாம் இதைத்தான் சொன்னார்கள். சிறு வயதிலிருந்தே மைக்கேல் வித்தியாசமாக இருந்தான். எதிலும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.

எப்போது பார்த்தாலும் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டேயிருப்பான். எதையுமே அவனால் ஒழுங்காகச் செய்ய முடியாது. படிப்பிலும் படுமந்தம். ஏற்கெனவே கணவர் பிரிந்துசென்றுவிட்ட நிலையில், மகன் மைக்கேலின் நிலையால் நிலைகுலைந்துபோனார் டெப்பி.

பயந்த குழந்தை

தன் மகனை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றார். மைக்கேலுக்குக் ‘கவனச்சிதறல்’ பிரச்சினை இருப்பதாக சில மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்குத் தீர்வாக நீச்சல் கற்றுக்கொடுக்கும்படி பரிந்துரைத்தார்கள். அதன்படியே டெப்பி செய்தார். ஆனால், நீச்சல் குளத்தைக் கண்டதுமே பயந்து தெறித்து ஓடினான் மைக்கேல். இதைக் கண்டு டெப்பி மேலும் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்.

அந்த நேரத்தில்தான் மைக்கேலுக்கு, பாப் பவுமன் என்கிற நல்ல பயிற்சியாளர் கிடைத்தார். துறுதுறுவென இருக்கும் மைக்கேலைக் கண்டதும், ‘பிற்காலத்தில் இவன் பெரிய நீச்சல் வீரனாக வருவான்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார். இதைக் கேட்டு டெப்பிக்கு ஆச்சரியம். எல்லோருமே எதிர்மறையாகக் கூறும் தன் பிள்ளையை, இவர் மட்டும் நேர்மறையாக கணிக்கிறாரே என்று உள்ளுக்குள் சந்தேகம்.

செதுக்கிய சிற்பி

பாப் பவுமன் சொன்ன அந்த வார்த்தைகள் உண்மையாகின. மைக்கேலைப் படிப்படியாகச் செதுக்கினார் பாப். அவர் அளித்த பயிற்சியில் மைக்கேலுக்கு நீச்சல் அத்துப்படியானது. தண்ணீரைக் கண்டு பயந்த மைக்கேல், எப்போதும் நீச்சல் குளமே கதியெனக் கிடக்கத் தொடங்கினான். பிறகு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டிகளுக்கு அனுப்பத் தொடங்கினார் பாப். சில போட்டிகளில் வெற்றி கிடைத்தது. அதுவே மைக்கேலின் அம்மாவுக்குப் பெரிதாகத் தெரிந்தது. ஆனால், ‘மைக்கேலின் திறமைக்கு இந்த வெற்றியெல்லாம் தூசு’ என்று மைக்கேலை இன்னும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தினார் பாப்.

சிறிது சிறிதாக முன்னேறி வந்த மைக்கேல் 15 வயதிலேயே அமெரிக்க தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களைக் குவித்தான். அந்தத் தருணத்தில் வீடு திரும்பிய மைக்கேலை, அவனுடைய அம்மா டெப்பி ஆடம்பரமாகச் செலவுசெய்து வரவேற்றார். இதைக் கண்டு பாப் முகம் சுளித்தார். “சின்ன சின்ன வெற்றிக்காக மைக்கேலைக் கொண்டாதீர்கள். அது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மறைத்துவிடும். தான் சாதித்துவிட்டோம் என்கிற எண்ணத்தை வரவழைத்துவிடும். மைக்கேல் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்” என்று டெப்பியிடம் முகத்துக்கு நேராகவே கடுகடுத்தார் பாப்.

ஒலிம்பிக் நாயகன்

மைக்கேலின் அம்மாவுக்கு அது புரிந்ததோ இல்லையோ, அருகிலிருந்த மைக்கேலுக்குப் பளிச்செனப் புரிந்தது. அன்று முதல் நீச்சலில் புதியபுதிய நுணுக்கங்களைத் தேடித்தேடிக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான் மைக்கேல். எப்போதும் தீவிரப் பயிற்சியில் இருந்தான். இவற்றையெல்லாம் விடாப்பிடியாக பின்தொடர்ந்த மைக்கேல், 23-வது வயதில் நீச்சலில் உச்சம் தொட்டான்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் நீச்சலில் எட்டுத் தங்கப் பதக்கங்களை வென்று மலைக்கவைத்த அந்தச் சாதனையாளர் மைக்கேல் பெல்ப்ஸ். தொடர்ந்து 2012 ஒலிம்பிக்கில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி என ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்களை வென்று நீச்சலில் புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்கள், அதிக பதக்கங்களைப் பெற்ற ஒரே வீரர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இந்த வெற்றி மைக்கேல் பெல்ப்ஸையே சேரும் என்றாலும், அதன் பின்னணியில் முழுக்கமுழுக்க உழைத்தவர் பயிற்சியாளர் பாப் பவுமன்தான். யாருமே ஒரு பொருட்டாக நினைக்காத சிறுவனைப் பார்த்த நிமிடத்தில் கணித்தது மட்டுமின்றி, அவன் பிரம்மாண்ட வெற்றியைப் பெற கவனச்சிதறல் கூடாது, சின்னக் கொண்டாட்டம்கூடக் கூடாது என்று அவர் சொன்ன அந்த ஒரு நிமிட அறிவுரையும்தான் மைக்கேல் பெல்ப்ஸை ஒலிம்பிக் சாதனையாளராக்கியது!

(நிமிடங்கள் வரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x