Published : 07 Dec 2015 10:56 AM
Last Updated : 07 Dec 2015 10:56 AM

உன்னால் முடியும்: பாரம்பரிய மருத்துவம் கொடுத்த வெற்றி வாய்ப்பு

கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வர் ஐயப்பன். தனது படிப்பு மற்றும் அனுபவத்தைக் கொண்டு தற்போது சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இதில் என்ன புதுமை என யோசிக்கத்தோன்றும். ஆம் தனது துறையில் அவர் புதுமையை யோசித்ததால் இன்று தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். அதுவும் பத்து ஆண்டுகள் பார்த்துக் கொண்டிருந்த நிரந்தரமான அரசு பணியை உதறிவிட்டு சொந்த தொழிலில் இறங்கியவர். இந்த துணிச்சலும், புதுமையுமே அவரை வணிக வீதி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வைக்கிறது. இவரது தொழில் அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது.

அப்பா அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. எனக்கு பனிரெண்டாவதுக்கு பிறகு என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து எந்த திட்டமும் கிடையாது. அவரது ஆசைக்கு படிக்கலாம் என்றாலோ கட் ஆப் மார்க் குறைவு. ஆனால் அலோபதி டாக்டராகவில்லை என்றாலும் சித்த மருத்துவராக பணியாற்றலாம் என்பதால் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி யில் பிஎஸ்எம்எஸ் படிக்கச் சேர்ந்தேன்.

அந்த கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் நமது சித்த மருத்துவம் குறித்த பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பாரம்பரியமிக்க இந்த மருத்துவ முறையை நவீனப்படுத்த வேண்டிய அவசியத்தை எனது படிப்பு சொல்லிக் கொடுத்தது. படித்து முடித்ததும் சித்த மருத்துவராக அரசு பணி கிடைத்துவிட்டது. சுமார் பத்து ஆண்டுகள் உதவி மருத்துவ அலுவலராக பணியாற்றினேன். இதற்கிடையில் எனது தொழில் முனைவு ஆர்வம் காரணமாக காட்டாமணக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கினேன். இதை அப்பா கவனித்துக் கொண்டார்.

எனது பணி காலத்தில் மருத்துவப் பணி நேரம் தவிர, சித்த மருத்துவத்தின் பலன்கள் மக்களுக்கு எளிதாகவும், நவீனமாகவும் சென்று சேரும் விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவேன். உதாரணமாக ஒரு கப் தேநீர் கொடுக்கும் புத்துணர்ச்சி அனுபவத்தை ஒரு தேநீர் மாத்திரை விழுங்குவதன் மூலம் எடுத்துக் கொள்ளலாம். இது போல முருங்கை கீரை கேப்சூல் என பலவற்றையும் நவீனமாக முயற்சி செய்து வெற்றி கண்டேன். இதுதவிர மருத்துவ குணங்கள் நிரம்பிய உடனடி உணவுகள், சூப் வகைகள், மருந்துகள் இப்படியாக நவீன வடிவங்களில் தயாரிக்கத் தொடங்கி னேன். இதற்கான விற்பனை வாய்ப்புகள் கொடுத்த நம்பிக்கையால் 2010-ல் அரசு பணியிலிருந்து விலகி தனியாக நிறுவனம் தொடங்கிவிட்டேன்.

தற்போது உள்ளூர் சந்தைகள் தவிர ஏற்றுமதியும் செய்து வருகிறேன். ஆனால் இவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் தேடிக் கண்டுபிடிப்பது சவாலான விஷயம். இந்த விளை பொருட்களை ரசாயனங்கள் இல்லாமல் விளைவிக்கப்பட்டிருக்க வேண்டும். தரத்தில் சிறு குறை என்றாலும் ஏற்றுமதி செய்ய முடியாது. ஒரு ஏற்றுமதியிலேயே பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் தவிர இது மருத்துவம் மற்றும் உணவுபொருள் சார்ந்த துறை என்பதால் அரசின் அனைத்து தரச் சான்றுகளும் வாங்கியிருக்கிறேன்.

சித்த மருத்துவ தேவைகள் குறித்து மக்களுக்கு புரிதல் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் அதிக அளவுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிக்கன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சல்களுக்கு சித்த மருத்துவ தீர்வுகளால், இதை அதிக அளவு நாடி வருகின்றனர். இதற்கான சந்தையும் விரிவடைந்துள்ளது. தற்போது இயந்திர உற்பத்தி மற்றும் 40 பணியாளர்கள் என தொழில் விரிவடைந்துள்ளது.

அடுத்த கட்டமாக எங்களது தயாரிப்புகளைக் கொண்டு சூப் மற்றும் டீ வகைகளை தயாரித்து கொடுக்கும் சிறய கடைகளை உருவாக்கும் முயற்சிகளிலும் இருக்கிறோம்.

தொழில் முனைவராக உருவாக, நமது அனுபவம் மற்றும் நாம் இறங்க திட்டமிடும் தொழில்மீது தீவிரமான நம்பிக்கை வைக்க வேண்டும். நம்மைச் சுற்றி உள்ள வாய்ப்புகளை சரியாக புரிந்துகொண்டால் இந்த நம்பிக்கை தானாகவே உருவாகும். எனது வெற்றிக்கு பின்னே எந்த ரகசியமும் இல்லை. நமது பாரம்பரிய அறிவை கொஞ்சம் பட்டை தீட்டிகொண்டது தவிர என்கிறார் இந்த தொழில்முனைவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x