Published : 18 Apr 2021 03:17 am

Updated : 18 Apr 2021 04:44 am

 

Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 04:44 AM

பாடல் சொல்லும் பாடு 12: திருமணத்துக்குள் புதைக்கப்படும் கனவுகள்

marriages

கவிதா நல்லதம்பி

ரயிலடியில் ஒன்றுக்கும் மேலாய் ஒரே சிமென்ட் வட்டத்துக்குள் முரணின்றி இணைந்து வாழும். எல்லோருக்கும் உகந்ததாய், யாருக்கும் உறுத்தாததாய்... இட நெருக்கடியில் சற்றே இடம் மாறி குறுக்காக வளர முற்பட்டால் சட்டென்று முறிக்கப்பட்டு மொண்ணையாகவே நிற்கும் இப்புன்னை - பெண்ணைப் போல

- கிருஷாங்கினி


களவும் கற்புமாக அறியப்பட்ட அகவாழ்வில், திருமணம் என்பது நம்பிக்கை இழப்புகளால் தோன்றியது. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று கரணம் என்னும் திருமணம் தோன்றிய சூழலைச் சுட்டுகிறார் தொல்காப்பியர்.

‘தாய்வழிச் சமூகமாக இருந்தபோது திருமணங்கள் இதுபோன்ற சடங்கு ரீதியான பண்பைப் பெறவில்லை. பெண் தனக்கான ஆணைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றி ருந்தாள். உடைமையற்ற சமூகமாக இருந்த இனக்குழுக்கள் மற்ற குழுக்களுடனான தம் உறவைப் பெருக்கிக்கொள்ள, உயரிய உடைமையான தம் உடல்களைப் பகிர்ந்துகொண்டன’ என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

உரிமையைப் பறிக்கும் அமைப்பு

தலைமகளைக் கொள்ளும் மரபுக் குரிய தலைமகனுக்கு மணம் செய்து கொடுத்தனர். சுதந்திரமான காதலும் துணையைத் தேர்ந்துகொள்ளும் உரிமையும் உடைமைச் சமூக வலுப்பெறலில் குடும்ப அமைப்பின் ஆளுகைக்குள்ளாயின. பெண் மீதான உரிமையைக் குடும்பத்துக்கானதென வகைசெய்து, காதலை ஏற்பதும் மறுப்பதும் பெண்ணைத் தம் அரிய சொத்தெனக் காண்பதன் விளைவாக நிகழ்ந்தன.

காதலை மறுத்தபோது பெண்ணின் புழங்குவெளி, இல்லத்துக்குள் குறுகியது. ‘இச்செறிப்பு’ என்னும் சொல் அவளது மறுக்கப்பட்ட வெளியைக் காட்டுகிறது. அவளுக்கு ஏற்படும் உள நெருக்கடிகள் வேலனின் வெறியாட்டுக்கு (காதலனைப் பாராத ஏக்கத்தில் சாப்பிடாமல், தூங்காமல் தவித்துக் கிடக்கும் மகளைப் பார்க்கும் குறிஞ்சி நிலத் தாய், தன் மகளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கிறார். அதனால், அந்தத் தீவினையை அகற்ற மகளை முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்று பூசாரியிடம் சொல்லி சில சடங்குகளைச் செய்யச் சொல்கிறார். இந்தக் காலத்து வேப்பிலையால் அடித்தல் போன்றது) உரியவளாக்குகின்றன. வெறியாட்டிலும் தீர்ந்திடாத அவள் துயர், தோழியை அறத்தொடு நிற்கச் செய்ய, செவிலியும் நற்றாயும் பின் தந்தையும் தமரும் அவள் காதலை அறிகிறார்கள். நிலமும் தொழிலும் மட்டுமே பிரிவுக்கான களன்களாக இருந்த சமூகத்திலும் உழைப்போரும் உழைப்பின் பலனைப் பெறுவோருமாகப் பிரிவினைகள் இருந்திருப்பதையே இந்த மண மறுப்புகள் காட்டுகின்றன. இம்மறுப்பு,பெண்ணை உடன்போக்கெனும் முடிவைத் தெரிவு செய்யச் சொல்கிறது.

காதலுக்கு நெருக்கடி

செவிலித்தாயை அணைத்து உறங்கும் அண்மையை விரும்பு பவள் தலைமகள். அனிச்சத்தைப் போன்ற மென்மனம் கொண்டவள். அத்தகு அன்புக்குரியாளைச் செவிலித்தாய் அணைக்க, தலைமகளோ வியர்க்கிறது என்று சொல்லி விலகினாள். இதைச் செவிலித்தாய் நினைவுகூர்கிறாள். ‘காதலனை அணைந்த மார்பில் தாயை அணைக்க இயலா அவள் மெல்லுணர்வையா, நம்மைப் பிரியப் போகிறோம் என்கிற வருத்தத்தையா? அப்போதே அவளை உணர்ந்திருந்தால் உடன்போக்கு சென்று அவள் துயருறாமல் காத்திருக்கலாம்’ என்ற செவிலியின் கூற்று, பெண்ணுக்குத் தன் காதலைக் காத்துக்கொள்ள இருந்த நெருக்கடியைக் காட்டுகிறது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட காதல், மணத்தில் முடிந்தது. புதல்வர்களைப் பெற்ற, தேமலும் வரிகளும் கூடிய அழகிய வயிற்றை உடைய, சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்கள் மணமகளை வாழ்த்தினர். ‘நற்பேறுகளைத் தந்து, உன் கணவன் விரும்பத்தக்க பெண்ணாக, பெற்றோர் பெருமை கொள்ளும் அருமை உடையவளாகத் திகழ வேண்டும்’ என்று மலர்களை, நெல்லுடன் சேர்த்து அவளது கரிய கூந்தலில் தூவினர். உறவினர்கள், ‘பெரிய மனைக்கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்தி, தன்னிடம் அவளைத் தந்தனர் என்கிறான் தலைவன் ஒருவன் (அகநானூறு-86).

இல்லாளின் கடமைகள்

மானுண்டு எஞ்சிய கலங்கல் நீரைத் தேன் கலந்த பாலினும் இனிதென்று தன் புகுந்த வீட்டின் பெருமை பேசப் பழகிக்கொள்கிறாள் பெண். உண்பதற்குக்கூட அடம்பிடித்து ஓடிய 'சிறுவிளையாட்டி' இன்று குடும்பத்தின் அருமை தெரிந்து வறுமையை மகிழ்வுடன் எதிர்கொண்டு தாய்க்கே அறிவுரை சொல்கிறாள். சிலப்பதிகாரத்துக்குப் பின்பே திருமணத்தில் பார்ப்பனரால் செய்யப்படும் சடங்குகளும் மங்கல அணியும் இடம்பெற்றன. நாச்சியாரும் மதுசூதனன் கைத்தலம் பற்றத்தான் கனாக் காண்கிறாள். அற இலக்கியங்கள் யாவும் இல்லாளின் மாண்பையே இல்லறத்தின் அறமாகக் கண்டன. தன்னைக் காத்து, தன்னை மணந்தவனையும் காத்துத் தொழுதெழும் பெண்ணின் பண்பை அவளின் கடமையாகக் கருதின. அறவோர்க்களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோரை வரவேற்றல், விருந்து எதிர்கோடல் போன்றவை இல்லறத்தின் கடமைகளாயின. அதைப் பெண்ணே சிரமேற்றுச் செய்தாள்.

பெண் தனித்து இந்த இல்லறக் கடமைகளைச் செய்ய இயலாது. கோவலனைப் பிரிந்த கண்ணகி இத்தகு அறங்களைச் செய்ய இயலாதவளாகினேன் என்று வருந்தியதைச் சொல்கிறது சிலம்பு. இந்த அறங்களுக்காகக் கணவனின் அறமற்ற செயல்களையும் தாங்கினார்கள். நளாயினி, சாவித்ரி, கண்ணகி போன்ற கற்புக்கரசிகள் இவ்வறங்களுக்காகத் தம்மைத் தொலைத்தே பெண்மையின் அடையாளங்களாயினர்.

தாய்மையும் பெண்மையும் குடும்ப அலகுக்குள் பெண்ணைச் சுதந்திரம் மறந்தவளாக்கின. பாலியல்ரீதியான சுய விருப்பு வெறுப்புகளும் குழந்தைப் பேறும் சமூக அக்கறையும் அவளுக்குக் குடும்பத்தால் தீர்மானிக்கப்படு வதாயின. தாங்கள் பொருளைப் போல் மதிக்கப்படுகிறோம் என்கிற விழிப்புப் பெறுகையில், அவள் குடும்பத்துக்குச் சரிப்படாதவளாகிறாள்.

ஏற்றப்பட்ட சுமை

ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, பிடிக்காத மணத்தைவிட்டு விலகும் தைரியத்தைப் பெண் கொள்ள வேண்டும் என்றுரைத்த பாரதியும் பிள்ளைகளின் எதிர்காலத்துக் காகவாவது பெற்றோர் இணைந்து வாழ வேண்டும் என்றார். பாரதிதாசனோ குடும்ப விளக்கின் வெளிச்சத்தில் பெண்ணுக்குக் கடமை என்னும் சுமையேற்றினார். இன்முகத்தோடு எழுந்ததிலிருந்து அவள் யாவருக்கும் ஆற்றும் தொண்டைப் பட்டியலிட்ட அவர், சமூகப் பணியிலும் அவள் அக்கறை கொண்டவள் எனப் பெருந்தன்மையுடன் சித்தரித்தார்.

செம்மண் நிலத்தில் பெய்த மழை போலத் தனித்துவம் தொலைத்திடலும், பண்புகளால் கரைதலும் கவித்துவத்துக்கு அழகூட்டலாம். சுயமுள்ள பெண்ணுக்கும் ஆணுக்கும் பொதுமையில் தொலைதல் அசாத்தியமானதே. திருமணம் பெண்ணுக்குச் சார்புநிலையையே கொடுக்கிறது. காதலியாக, மனைவியாக, தாயாக, மகளாகக் கொண்டாடுகிற இலக்கியங்கள் யாவும் அன்றாட வாழ்வின் சலிப்பை அவள் காட்டவே முடியாத லட்சியவாதப் பெண்மையை உடையவள் என்கின்றன. அவளது தனித்துவமும் அடையாளமும் தொலைந்த திசையை நல்ல மனைவி எனும் ஒற்றைச் சொல்லில் மறைப்பது பெண்ணின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதே.

வாழ்க்கை இணை ஒப்பந்தங்கள் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளற்ற சமத்துவவெளியைக் கட்டமைக்கும் முயற்சியைத் தொடங்கின. பகட்டு களும் சடங்குகளும் நிறைந்த நவீனத் தீண்டாமைகள் பெண்ணின் சுயமரியாதையை இன்று அடகுவைத்துக்கொண்டிருக்கின்றன.

(பெண் வரலாறு அறிவோம்)

கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: janagapriya84@gmail.comதிருமணத்துக்குள் புதைக்கப்படும் கனவுகள்Marriages

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x