Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

கரோனாவை வெல்வோம்: என்ன செய்யும் இரண்டாம் அலை?

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. சில ஆயிரங்களாகக் குறைந்திருந்த தினசரி பாதிப்பு தற்போது இரண்டு லட்சத்தைக் கடந்துவிட்டது. தமிழகத்திலும் தினசரி கரோனா பாதிப்பு எட்டாயிரத்தைக் கடந்துவிட்டது.

இப்படி அசுர வேகத்தில் பரவும் கரோனாவைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்திலும் தொற்று குறையாவிட்டால் இரவு ஊரடங்கு அமல்படுத்த நேரிடலாம் எனக் கூறப்படுகிறது.

இரண்டாம் அலையில் கரோனா வைரஸ்கள் வேகமாகப் பரவும் தன்மை கொண்டவையாக உள்ளன. கரோனா வைரஸின் மரபணு அமைப்பிலும் அறிகுறிகளிலும் பலவித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், மக்களும் மருத்துவர்களும் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியுள்ளது. கரோனா தொற்றுத் தடுப்பில் அரசும் பல புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இளம் வயதினருக்கும் பாதிப்பு

கரோனா முதல் அலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களிடம்தாம் அதிகப் பாதிப்பு காணப்பட்டது. ஆனால், இரண்டாம் அலையில் பெண்கள் உட்பட இளம் வயதினர், இணை நோய்கள் இல்லாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், குழந்தைகள் குறிப்பாக எட்டு வயதுவரையுள்ள குழந்தைகளை இது அதிகம் பாதிக்கிறது. சில நேரம் மரணத்தைக்கூட ஏற்படுத்துகிறது.

புதிய அறிகுறிகள்

முதல் அலையில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவை, வாசனையை உணர முடியாதிருத்தல், சுவாசப் பிரச்சினை ஆகிய அறிகுறிகள் முதன்மையாக இருந்தன. இப்போது இந்த அறிகுறிகளைவிடக் கடுமையான உடல் வலி, தலை வலி, உடல் அசதி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை முதன்மை அறிகுறிகளாக உள்ளன. மூட்டு வலி, வாய்ப்புண், தோலில் அரிப்பு, தோல் தடிப்பு, கண் சிவத்தல் போன்றவையும் கரோனாவின் புதிய அறிகுறிகளே. எனவே, மக்கள் குறிப்பாகக் கர்ப்பிணிகள் இவற்றில் எந்தவொரு அறிகுறி இருந்தாலும், ஓரிரு நாட்களாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். பெண்கள் பலர் கருவுற்ற பின்னும் கரோனா அச்சத்தால் மருத்துவமனைக்கே வராத போக்கும் உள்ளது. இது தவறானது.

கர்ப்பிணிகள் கவனத்துக்கு

கர்ப்பிணிகளுக்குப் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால், எந்த நோயும் எளிதில் தொற்றிக்கொள்வதுடன் தீவிரமடையும் சாத்தியமுண்டு. ஆனால், நல்வாய்ப்பாகக் கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று ஏற்படும் சாத்தியம் மற்றவர்களுக்கு உள்ளது போலவே உள்ளது. தொற்று ஏற்பட்டாலும் பெரும்பாலான கர்ப்பிணிகள் அறிகுறிகள் இல்லாமலே உள்ளனர். சிலருக்கு லேசான அறிகுறிகளுடன், சில நாட்கள் சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறது.

மருத்துவரீதியாகப் பிரச்சினை இல்லாத கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் அது பலருக்கு மிகத் தீவிர கரோனா நோயாக மாறவில்லை. எனினும் மற்ற பெண்களைவிடக் கர்ப்பிணிகளுக்குத் தீவிர கரோனா தொற்று ஏற்படும் சாத்தியம் சற்று அதிகம். அதிலும் 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள், சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், இதர இணை நோயுள்ளவர்கள் ஆகியோர் கர்ப்பமானால் அவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டால் அது தீவிரமடையும் சாத்தியம் அதிகம். ஆகவே, அவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

கரோனா தொற்றுள்ள தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தையின் உயிருக்கும் உறுப்புகளுக்கும் பெரிய பாதிப்பில்லை எனச் சில ஆய்வுகள் கூறினாலும், இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டும். தற்போது கரோனா தொற்று ஏற்பட்ட பெரும்பாலான பெண்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் குழந்தை பெற்றுள்ளனர்.

தொற்று ஏற்படாமல் தடுக்க...

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். வேறுவழியின்றி வேலை நிமித்தம் வெளியே செல்பவர்கள் கட்டாயம் முகக் கவசம், தனி மனித இடைவெளி போன்ற கரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதபட்சத்தில் சானிட்டைசரைப் பயன்படுத்த வேண்டும். முகக் கவசத்தை முடிந்தால் இரட்டை முகக் கவசமாக அணிய வேண்டும்.

பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதை யும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். கூட்டம் நிறைந்த, குளிரூட்டப்பட்ட, மூடிய அரங்கத்துக்குள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தொற்று ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

அச்சம் தேவையில்லை

கர்ப்பிணிகள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள தயக்கம் காட்டக் கூடாது. கரோனா பரிசோதனை நிலையங்களில் கர்ப்பிணிகளை அதிக நேரம் காக்க வைக்கக் கூடாது. வசதி இருப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே கரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம். ஒருவேளை தொற்று உறுதியானால் கர்ப்பிணிகள் அச்சப்பட வேண்டாம். ஆனால், மருத்துவரின் ஆலோசனையும் கண்காணிப்பும் மிக மிக அவசியம். கர்ப்ப காலத்தில் தொற்று ஏற்பட்டாலும்கூட, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால், தொற்று கண்டறியப்பட்ட இரண்டு வாரங்களில் தொற்று குறைந்துவிடும். சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. சத்தான சரிவிகித உணவு, வைட்டமின் டி, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எளிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அறிகுறிகள் இல்லாமலும் தொற்று ஏற்படுவதால் பிரசவத்திற்குச் செல்லும்போது தொற்று அறிகுறி இருப்பவர்களும், இல்லாதவர்களும் கரோனா பரிசோதனை செய்துகொள்வது நலம்.

தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்குத் தரமான கர்ப்ப கால சிகிச்சைபெறும் உரிமை உள்ளது. பிரசவ காலத்தில் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படுதல், அலைகழிக்கப்படுதல் கூடாது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்காமல் தலைமை மருத்துவமனைகளில் சிறப்புக் கவனத்துடன் பிரசவிக்க வேண்டும். ஒருவேளை பிரசவ காலத்தில் கோவிட்-19 ஏற்பட்டால்கூட அறுவைச் சிகிச்சைமூலம்தான் பிரசவிக்க வேண்டும் என்பதில்லை. மருத்துவரீதியாகத் தேவைப்படாதபட்சத்தில், அதற்கான அவசியம் இல்லை. குழந்தைக்கு மருத்துவரின் அறிவுரைப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்களாக, அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ள ஏழைப் பெண்கள் கரோனா காலத்தில் சரியான மருத்துவ உதவியின்றி அவதிப்பட்டனர். இரண்டரைக் கோடி தம்பதியர் கருத்தடை சாதனம் பெறும் வாய்ப்புகளை இழந்ததால் தேவையற்ற, திட்டமிடாத கர்ப்பங்களும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பும் நிகழ்ந்தன. கர்ப்ப காலப் பராமரிப்பு, சரியான மருத்துவ உதவியின்றி பலர் அல்லல்படுகின்றனர். வறுமை, வேலையின்மை, பட்டினி, குடும்ப வன்முறை கொடுமைகளால் பெண்களின் சுகாதார நிலைமை மோசமடைந்துவருகிறது.

தடுப்பூசி ஒரு வரம்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு என மத்தியச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் கர்ப்ப காலத்திலும் தாய்ப்பாலூட்டும் காலத்திலும் பாதுகாப்பானது என அமெரிக்க மகப்பேறு மருத்துவ இதழ் கூறுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மார்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆன்ட்டிபாடி எனும் எதிர்பொருள் செல்கிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் வயதினரைத் தாக்கும் இரண்டாம் அலை தொற்றிலிருந்து கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் காக்க வேண்டும்.

எனவே, உலக சுகாதார நிறுவனம் கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கான தடுப்பூசி பயன்பாடு பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். கரோனா தடுப்பு முறைகளையும் தடுப்பூசியையும் பயன்படுத்தி இரண்டாம் அலையை வெல்வோம்.

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர்.

தொடர்புக்கு: drshanthi.ar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x