சேதி தெரியுமா? - குறையுமா வெப்பநிலை?

சேதி தெரியுமா? - குறையுமா வெப்பநிலை?
Updated on
2 min read

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டில் புவி வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும் என்று டிசம்பர் 13-ம் தேதி வரைவு ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் வரைவு ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.

வரைவு ஒப்பந்தத்தை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரன்ட் பேபியஸ் வெளியிட்டார். அதில், புவி வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த பட்சம் 1.5 டிகிரி செல்சியஸ் வரையாவது வெப்ப நிலையைக் குறைக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வரும் 2020-ம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்காக ஆண்டுதோறும் ரூ.6,70,000 கோடி நிதியுதவி வழங்கவும் வரைவு ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சவூதியில் பெண்களுக்கு அங்கீகாரம்

சவூதி அரேபியாவில் டிசம்பர் 13-ம் தேதி அன்று நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் அந்த நாட்டு வரலாற்றிலேயே முதன் முறையாகப் பெண்கள் வாக்களித்தார்கள். மன்னர் ஆட்சி நடைபெறும் சவூதி அரேபியாவில் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ உரிமை இல்லை. பெண்களுக்கு எதிரான இத்தகைய கட்டுப்பாடுகளைத் தளர்த்திய அந்த நாட்டு அரசு பெண்கள் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி வழங்கியது. இதன்படி நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் சவூதி அரேபியப் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். இந்தத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட பெண்களில் 20 பேர் வெற்றி பெற்றனர். சவுதியில் மொத்தம் உள்ள சுமார் 2,100 இடங்களில் இது ஒரு சதவீதம் மட்டுமே ஆகும். உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத ஒரே நாடாக இருந்த சவூதியில் இந்தத் தேர்தல் மூலம் அந்த நிலை மாறியுள்ளது.

வெற்றிகரமான 50-வது ராக்கெட்

இஸ்ரோவின் 50-வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி 29 டிசம்பர் 18 அன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சிங்கப்பூருக்குச் சொந்தமான 6 செயற்கைக்கோள்களை ஏந்தி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட அடுத்த 18 நிமிடம் 12 வினாடியில் செயற்கைக் கோள்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பூமியில் இருந்து 550 கி.மீ. தொலைவில் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்த செயற்கைக் கோள்கள் பூமி ஆராய்ச்சி, சுற்றுச்சூழல், பேரிடர் கண்காணிப்பு, கடலோரக் கண்காணிப்பு, நகரத் திட்டமிடல், உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய பணிகளுக்குப் பயன்பட உள்ளன. சிங்கப்பூர் தனது 50-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவின் 50-வது ராக்கெட் மூலமாக அந்நாட்டின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அர்ச்சகர் நியமனம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

தகுதியுடைய அனைத்துச் சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்று தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டிசம்பர் 16 அன்று உத்தரவிட்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006-ம் ஆண்டு திமுக அரசு அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாக சபை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் ஏற்கெனவே தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த உச்ச நீதிமன்றம், ஆகம விதிகளைப் பின்பற்றியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் சாசனம் பிரிவு 14-ல் உள்ள சமத்துவத்துக்கான உரிமையை ஆகம சாஸ்திர விதிகள் மீறவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

100-வது டெஸ்ட் சிக்ஸர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கலம் டிசம்பர் 13-ம் தேதி புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பி 100-வது டெஸ்ட் சிக்சர் அடித்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் மெக்கல்லம். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் விளாசியிருந்த ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை மெக்கல்லம் சமன் செய்தார்.

கில்கிறிஸ்ட் 96 டெஸ்ட் போட்டிகளில் 137 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை அடித்திருந்தார். பிரெண்டன் மெக்கல்லம் தனது 98-வது டெஸ்ட் போட்டியில், 170-வது இன்னிங்ஸில் 100-வது சிக்சரை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர் சேவாக் 91 சிக்ஸர்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in