Last Updated : 16 Apr, 2021 03:11 AM

 

Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

C/O கோடம்பாக்கம்: ஒரு கதை சொல்லட்டுமா சார்!

‘தர்மதுரை’ படத்தின் 100-வது நாள் கேடயம் பெறும் ரவிச்சந்திரன்

‘‘நான் 5-வது படிக்கும்போது திருவண்ணாமலைக்குப் பக்கத்துல இருக்குற எங்க பூர்விக கிராமத்துக்குத் திருவிழாவுக்காகப் போனோம். அப்போ பர்வதமலை அடிவாரத்துல நடந்த கூத்து என்னைப் பிரம்மிக்க வைச்சது. எப்பவுமே காமெடியா பேசிக்கிட்டு, சிரிச்சு விளையாட்டு காட்டிக்கிட்டு இருந்த என் தாத்தா கூத்துல அசுரனா மாறி பயமுறுத்தினாரு. என் அப்பா பெண் வேஷம் போட்டா அவரை அடிச்சிக்க ஆளே இல்லை. அன்னைக்கு கலர் கலர் துணி, விதவிதமான லைட்ஸ்னு கூத்துல நடிச்சவங்களோட கம்பீரம்னு எல்லாத்தையும் பார்த்ததும் எனக்கு அவ்ளோ மகிழ்ச்சியா இருந்தது. ஒரு நாள் நானும் மக்களோட கைதட்டலைப் பெறணும்னு நினைச்சேன். அந்த எண்ணம்தான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கு...’’

பால்யத்தில் தனக்குள் துளிர்த்த கனவின் கதையைப் பகிர்கிறார் ரவிச்சந்திரன். இயக்குநர் சீனு ராமசாமியிடம் 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே', 'மாமனிதன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, தற்போது துணை இயக்குநராக உயர்ந்துள்ளார்.

நாடகம் பார்த்து ஐந்தாம் வகுப்பில் விழுந்த விதை, பின்னர் பள்ளி நாட்களில் மேடைப் பேச்சு, கவிதை எனச் செடியாகி, கல்லூரி நாட்களில் வீதி நாடகம், மேடை நாடகம் எனத் தமிழகம் முழுவதும் படர, நூற்றுக்கும் அதிகமான கலைப் போட்டிகளில் கலந்துகொண்டதன் வழியாகப் பல நண்பர்களை வென்றெடுத்திருக்கிறார் ரவிச்சந்திரன். அவர்களில் ஒருவர், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குநர் கணேஷ். பின்னர் ரவி, லயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் படித்து முடித்திருக்கிறார்.

‘‘சாலிகிராமத்துல முதல் படம் பண்ற இயக்குநர் முன்னாடி வாய்ப்புக் கேட்டு நின்னேன். ‘என்ன காரணத்துக்காகப் படப்பிடிப்புல கிளாப் போர்டு அடிக்கிறோம்?’ன்னு கேட்டார். நான் படிச்சு, கேட்டு, தெரிஞ்சுகிட்ட விஷயங்கள் அப்போ உதவுச்சு. ‘கிளாப் போர்டுல காட்சி எண், ஷாட் எண், டேக் எண், உட்புற, வெளிப்புறப் படப்பிடிப்புன்னு குறிப்பிடப்பட்டிருக்கும். கேமராவுல விஷுவல் எடுக்கிறோம். வசனத்தை ஒலிப்பதிவு நாடாவுல பதிவுபண்றோம். இந்த ரெண்டையும் இணைக்குற புள்ளிதான் கிளாப் போர்டு. வீடியோ, ஆடியோ சிங்க் தெரிஞ்சு எடிட்டிர் விஷூவலைப் பிரிக்கத்தான் கிளாப் போர்டு அடிக்கிறோம்’ என்று தயக்கம் இல்லாமல் பதில் சொன்னேன். சவுண்ட் கிளாப், சைலன்ட் கிளாப், எண்ட் கிளாப்னு அதுல இருக்குற மூன்று வகையையும் சொன்னேன்.

அந்த இயக்குநருக்கு முழு திருப்தி. ‘தினமும் ஐம்பது ரூபாய் பேட்டா மட்டும் கொடுப்பேன்’னு சொல்லி வேலைக்கு எடுத்துக்கிட்டார். டைப்பிங்கும் அங்கதான் கத்துக்கிட்டேன். சோகம் என்னான்னா அந்தப் படம் ஷூட்டிங்கூடப் போகல. அடுத்தடுத்து 5 படங்களுக்கும் இதே நிலைமைதான்’’ என்று சொன்ன ரவியின் வார்த்தைகளில் வருத்தத்தின் வடுக்கள் தெரிகின்றன.

விஜய்சேதுபதியுடன் ரவிச்சந்திரன்

அப்போதுதான் ரவியின் வாழ்க்கையை மாற்றும் திருப்புமுனைச் சம்பவம் நடந்தது. ‘‘டிவி, பத்திரிகைன்னு வேலை செஞ்சு பிழைச்சுக்கலாம்னு முடிவெடுத்தேன். வீட்ல கல்யாணம் பண்ணிக்கோன்னு தொடர்ந்து தொந்தரவு பண்ணாங்க. சினிமா எனக்கு எதுவும் கொடுக்கலை, கைவிட்டுடுச்சுன்னு நம்பிக்கையிழந்துட்டேன். அப்போ, என் நண்பனின் உதவியால் இயக்குநர் சீனு ராமசாமி சார்தான் என்னை வேலைக்குக் கூப்பிட்டார். நான் கல்யாணப் பத்திரிகையோட போய் நின்னேன். ‘கல்யாணப் பத்திரிகை கொடுத்து வேலைக்குச் சேர்ந்த முதல் ஆள் நீதான் தம்பி’ன்னு சிரிச்சார்.

‘தர்மதுரை' படத்துல உடை அலங்காரம் என் பொறுப்பு. காஸ்டியூம் கன்டினியூட்டி மிஸ் ஆச்சுன்னு விஜய் சேதுபதி அண்ணன் என்னைத் திட்டிட்டார். என் வேலையை நான் சரியா பண்ணலைன்னா என் வருங்காலத்தை நானே சிதைச்சுக்குறேன்னு எனக்கு நானே புத்தி சொல்லிக்கிட்டேன். அப்புறம் வேலையில என்னோட ஈடுபாட்டைப் பார்த்துட்டு விஜய் சேதுபதி அண்ணன், ‘ஒரு போட்டோ எடுத்துக்கலம் வா தம்பி’ன்னு கூப்பிட்டார்.” எனச் சொல்லும் ரவி, உதவி இயக்குநர்களின் வாழ்வாதாரம் பற்றி நறுக்கென்று கூறுகிறார்.

“ஷூட்டிங் நடக்குற மூணு மாசம் மட்டும் எங்களுக்கு வசந்த காலம். மற்ற 270 நாட்களும் வறட்சிக் காலம்தான். ஒரு படத்தின் ஆன்மாவா எல்லா வகையிலும் உதவி இயக்குநர்கள் செயல்படுறாங்க. அதுல கிடைக்குற எல்லாத்தையும் நான் அனுபவமாதான் எடுத்துக்குறேன். என்னைப் போன்ற எல்லா உதவி இயக்குநர்களுக்குமான மருந்து வெற்றி மட்டும்தான். காலம் எல்லாத்தையும் கொடுக்கும். பர்வதமலையில நான் ரசிச்ச கூத்து மாதிரி மக்கள் என் படத்தைப் பார்த்து ரசிக்கிற நாள் நிச்சயம் வரும்” ரவியின் வார்த்தைகளில் நம்பிக்கை மிளிர்கிறது.

உதவி இயக்குநர்களுக்கான 4 வழிகாட்டல்கள்

1.திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருங்கள். உங்களைப் பற்றி யாரும் கண்டுகொள்ளாவிட்டாலும் உங்கள் திறமை, படக்குழுவில் உங்களைத் தனித்துக் காட்டும்.
2.உங்களைச் சுற்றிலும் நல்ல ஒரு குழுவை உருவாக்குங்கள். அவர்களிடம் உங்கள் யோசனைகள் குறித்துப் பேசுங்கள்; விவாதியுங்கள். கதை- திரைக்கதையை வளர்த்தெடுங்கள்.
3.திறமையும் உழைப்பின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள் நட்பு வட்டத்துடன் இருப்பது நல்லது. அப்படிப்பட்டவர்களின் ஒத்துழைப்பும் உதவியும் உங்கள் முன்னேற்றத்துக்கு உதவும்.
4.மோசமான மனிதர்களைக் கண்டறியக் கற்றுக்கொள்ளுங்கள். சுயமரியாதையை விட்டுவிடாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள், வதந்தி, புறம்பேசுதல் போன்றவற்றுக்கு இடம்கொடுக்காதீர்கள்.

- இயக்குநர் ஸ்ரீகணேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x