Published : 15 Dec 2015 09:50 AM
Last Updated : 15 Dec 2015 09:50 AM

கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி... 4 - கோலாரம்மா கோயிலில் கல்வெட்டுக் குவியல்

கிராமமா, நகரமா என உறுதியாகச் சொல்ல முடியாத ஊர் அதக்கூர். அதன் முக்கியத்துவத்தை நமக்குச் சொன்னார் வரலாற்றுப் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன். “தற்போதைய அரக்கோணம் அருகே தக்கோலம் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழர்களின் ஆளுகைக்குள் இருந்தது தக்கோலம். அதைக் கைப்பற்ற ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணன் படையெடுத்து வருகிறார். (வட கர்நாடகத்தையும் தென் மகாராஷ்டிரத்தையும் ஆட்சி செய்தவர்கள் ராஷ்டிரகூடர்கள்) அப்போது பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தியன் சோழ சாம்ராஜ்யத்தின் அரசர். தக்கோலத்தில் சோழப் படைகளுக்கும் ராஷ்டிரகூடப் படைகளுக்கும் போர் நடக்கிறது.

போரின் முடிவில், ராஷ்டிரகூடப் படைத் தளபதி பூதகன் என்பவரால் ராஜாதித்தியன் கொல்லப்படுகிறார். இதற்கு வெகுமதியாகத் தளபதி பூதகனுக்கு அதக்கூரைப் பரிசாகக் கொடுக்கிறார் மூன்றாம் கிருஷ்ணன். இந்தத் தகவலைச் சொல்லும் முக்கியக் கல்வெட்டு பெங்களூரு அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்த அதக்கூரைத்தான் இப்போது நாம் கடந்துகொண்டிருக்கிறோம்” என்றார் சிவராமகிருஷ்ணன். காரைச் சுவர் வீடுகளும், சீமை ஓட்டுக் கூரைகளுமாய்ப் பழமையோடிக் கிடக்கிறது அதக்கூர்.

ஹேமாவதியிலும் சோழர் கோயில்

நீண்ட பயணத்துக்குப் பிறகு, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதியில் கால்பதிக்கிறோம். ஹேமாவதி நுளம்பர்களின் தலைநகரமாக இருந்தது. தற்போது ராஜபாட்டைக்கான அங்க அடையாளங்களைத் தொலைத்துவிட்டுக் குக்கிராமமாய்க் காட்சியளிக்கிறது. ஊர்க்கோடியில் இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகமும் சிவன் கோயிலும் ஒரே வளாகத்துக்குள் உள்ளன. அருங்காட்சியகத்துக்கு வெளியே உள்ள பூங்காவில் கல்வெட்டுகளும் சிதைந்துபோன சிலைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

ஹேமாவதி அருங்காட்சியக கல்வெட்டு

அருங்காட்சியகத்துக்கு உள்ளேயும் கலை நுணுக்கம் கொண்ட சிலைகளைப் பார்க்க முடிகிறது. இவற்றில் பெரும்பகுதி சோழர் காலச் சிற்பங்கள். ஹேமாவதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிற்பங்களை இங்கு கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றிலும் பெரும்பகுதிச் சிற்பங்கள் சிதைக்கப்பட்டுக் கிடக்கின்றன.

ஹேமாவதியை தலைமையிடமாகக் கொண்டு இப்போதைய தருமபுரி, சேலம் பகுதிகளை உள்ளடக்கிய நுளம்பப்பாடியை நுளம்பர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுக்குப் பல்லவர்களின் ஆதரவும் இருந்தது. சோழர்கள் கீழைச் சாளுக்கியர்களை வீழ்த்த வேண்டுமானால் முதலில் ஹேமாவதியைப் பிடித்தாக வேண்டும். இந்தத் திட்டத்துடனேயே ராஜேந்திர சோழன் ஹேமாவதியை விட்டு நுளம்பர்களைத் துரத்தினார். இருப்பினும், ஹேமாவதியில் நிரந்தரமான நிர்வாக மையம் எதையும் ராஜேந்திரன் வைக்க விரும்பவில்லை. காரணம் சாளுக்கியர்கள் மீது லேசான அச்சம் இருந்திருக்கலாம்.

தகட்டுச் சிற்பம்



ஹேமாவதியைப் பிடித்த பிறகு அங்கே சித்தேஸ்வர சுவாமி கோயிலைக் கட்டியிருக்கிறார் ராஜேந்திர சோழன். இந்தக் கோயிலில் லிங்க வடிவமாய் இல்லாமல் மனித உருவமாய் இருக்கிறார் சிவன். பெரும்பாலும் சோழர் கட்டிடக் கலை அம்சங்களே இங்கும் தெரிந்தாலும் ஆங்காங்கே நுளம்பர்களின் நுட்பமான வேலைப்பாடுகளும் தெரிகின்றன. இதுகுறித்து விளக்கிய பொறியாளர் கோமகன், “நுளம்பர்களைத் துரத்தி விட்டாலும் நுளம்பர் குடிமக்கள் இங்கு இருந்திருப்பார்கள். அவர்களும் இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்திருப்பார்கள். அப்படிப் பணி செய்தவர்கள் ஆங்காங்கே தங்களது கலை நுட்பத்தையும் கலந்திருக்கலாம்’’ என்கிறார்.

அருங்காட்சியக கல்வெட்டு

கோலாரம்மா கோயிலும் சோழர் படை முகாமும்

ராஜேந்திர சோழன் கங்கை படையெழுச்சியின் தடம் காணும் முதல் கட்டப் பயணத்தின் இறுதி இலக்கு கோலார். ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் தங்க நகரம். பெங்களூருவிலிருந்து கோலார் நோக்கி எங்களது பயணம் தொடர்கிறது. கோலாருக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கொண்டராஜஹள்ளி என்ற இடம். அங்கே சாலையின் இடது ஓரம் உயரமான ஒரு வீரக் கல். அதன் அமைப்பும் அதிலிருந்த சிற்பங்களின் தன்மையும் விஜயநகரப் பேரரசின் பாணியைச் சொல்கின்றன. அதிலுள்ள விவரங்களைக் குறித்துக்கொண்டு கோலாரில் உள்ள கோலாரம்மா கோயிலை நோக்கிப் புறப்படுகிறோம்.

குவலாலபுரம் என்பது தான் கோலாரின் முந்தைய பெயர். முதலாம் சமுத்திரக்குப்தன் காலத்து அலகாபாத் தூண் கல்வெட்டில் கவுஸ்தலபுரம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதும் கோலார்தான் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். கடல் மட்டத்திலிருந்து 2,777 அடி உயரத்தில் உள்ள கோலாரின் சப்தக் மாதா (சப்த கன்னிகள்) கோயிலை கோலாரம்மா கோயில் என்கிறார்கள். இதுவும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் சோழர்களின் வரலாற்றுத் தடம் காட்டும் 78 கல்வெட்டுகள் உள்ளன.

ஹேமாவதி அருங்காட்சியகச் சிற்பம்



கோலாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கங்கர்கள் அங்கே அடிக்கடி படையெடுப்புகள் நடந்ததால் ஒரு கட்டத்தில் தலைநகரைத் தழைக்காட்டுக்கு மாற்றிக்கொண்டார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தலைநகர்களை வைத்திருந்த கங்கர்களுக்கு குடகு நாட்டில் நந்தகிரியிலும் கோட்டை இருந்தது. கி.பி.1004-ல் கங்கர்களின் இறுதி அரசன் ராக்கச கங்கனை வீழ்த்தித்தான் தழைக்காட்டைப் பிடித்தார் ராஜேந்திரன்.

ராஜேந்திரன் இறப்புக்குப் பின்னும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வரை (கி.பி.1143) தழைக்காடு சோழர்கள் கையில் இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு கர்நாடகத்தில் ஹொய்சாளர்களின் ஆதிக்கம் தலைதூக்கியதால் அவர்களிடம் கங்கபாடியை இழந்தது சோழ சாம்ராஜ்யம்.

(பயணம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x