Published : 22 Dec 2015 12:11 PM
Last Updated : 22 Dec 2015 12:11 PM

இப்படியும் பார்க்கலாம்: எப்போது சஞ்சீவி மூலிகை, எப்போது கறிவேப்பிலை?

தங்களின் ஒரே பெண்ணுக்கான மணமகனைத் தேடி ராஜலட்சுமி தம்பதியர். ஒரு நாள் ராஜலட்சுமி மின்ஏணியின் ஸ்விட்ச்சை அழுத்தும்போது அழகான, அட்ஜஸ்ட் பண்ணிப்போகிற, எதையும் புரிஞ்சுக்கிற மாதிரியாக தோற்றமளிக்கிற ஒரு வசதியான பையன் ஓடிவந்து ‘‘நாலாவது மாடி’’ என்றான். அவன் ஆறாவது மாடியில் உள்ள மாலினியின் சித்தப்பா பையன்.

மாலினி தூரத்துச் சொந்தம் என்பதால், ராஜலட்சுமி கத்தரிக்காய், தக்காளிகளுடன் அழைப்புமணியை அழுத்தினாள். ‘‘நம்ம தோட்டத்துல விளைஞ்சது’’ அடுத்த நாட்களில் மாலினியின் நல்ல குணங்கள் புகழப்பட்டன. ‘‘உன் கஸின் ப்ரதரை எப்படியாவது பேசி முடிச்சுக்கொடு’’ என்று கடைசியில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

மாலினியின் கடும் முயற்சியால் பையன் மணமகனாக மாறினான். நிச்சயதார்த்தத்துக்கு மாலினி சென்றாள். அங்கே அவள் பார்த்தது இதுவரை பார்க்காத ராஜலட்சுமி. யாரிடமோ மாலினியை அறிமுகம் செய்தாள். “இவ எங்க அப்பார்ட்மெண்ட்தான். மாலினி, நீ இருக்கறது மூணாவது மாடியா, நாலாவதா?” என்றாள். குடும்பத்தில் எல்லோரும் மணமகனை என்னவோ அவன் எல்.கே.ஜி படிக்கிற காலத்திலிருந்தே தெரியும் என்பதுபோல நடந்துகொண்டார்கள். மாலினி கணவனிடம் குமுறினாள். “இந்தக் கல்யாணத்துக்கு இவளும் ஒரு காரணம்னு சொல்ல மனசு வரலியே, இவளுக்கு! எப்படியெல்லாம் கெஞ்சினா. கால்ல விழுன்னாகூட விழுந்திருப்பாளே...!”

அரசு வெளியிட்டுள்ள ஒரு ஆணையை வாங்க; டிவியில் நடுவராகவோ, பார்வையாளராகவோ, சமூக ஆர்வலராகவோ கருத்து சொல்ல சென்னைக்குத்தான் வர வேண்டியுள்ளது.அவசரத்துக்கு சென்னை உறவுகளின், நண்பர்களின் இருப்பிடத்தில் தங்கித்தான் சுவாசம் கொள்ள வேண்டியிருக்கிறது.

அம்பத்தூரில் வாழ்கிறார்கள் நீலகண்டனின் 100 சதவீத நாகர்கோவில் உறவினர்கள். அவர்களது தங்களின் வாழ்க்கையில் ‘நன்றி’ கார்டு போட வேண்டும் என்றால், 80 -களின் பாணியில் “நாங்கள் சென்னையில் வழி தெரியாமல் திகைத்து நின்றபோது, எங்களுக்கு வழிகாட்டிய, நீலகண்டன் குடும்பத்தாருக்கு நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்...”என்று சொல்லலாம். குறிப்பாக பாலையாவும், அவரது மகனும். மகனது கவுன்சிலிங், இண்டர்வியூ, அமெரிக்கா, பாலையாவின் பென்ஷன் விவகாரங்கள். எல்லாமே நீலகண்டனின் வீட்டுச் சுவர்கள் அறியும். கடைசியில் பாலையாவின் மகனுக்குத் திருமணம் சென்னையில் தான் நடந்தது. இதில் கொடுமை என்னவென்றால் நீலகண்டனுக்கு அழைப்பிதழ் தபாலில் வந்தது.

நீலகண்டன் கல்யாணத்துக்குப் போகவே இல்லை.

மாலினிக்கும் நீலகண்டனுக்கும் நேர்ந்தது நம் எல்லோருக்குமானது.

எப்போது இலையை சஞ்சீவியாக்க வேண்டும், கறிவேப்பிலையாக்க வேண்டும் என்பவர்களால் நிறைந்திருக்கிறது நன்றி மறந்த உலகம்! நெகிழ்வான நேரங்களில் கடலும் வானமும் உள்ளவரை நினைவு வைத்திருப்பதாக அறிக்கை விடுவார்கள். வீரியம் குறைந்த பின் அவை ‘கடல்’ னா மணிரத்னம் படமாகவும், ‘வானம்’ னா அனுஷ்கா ஆடுவாங்களே, அந்தப் படம்தானே என்பதாகவும் அநேக இடங்களில் மாறி விடுகின்றன.

இப்படிப்பட்டவர்களுக்குப் பலவாறாக ஆறுதல்கள் சொல்ல ஆசைதான். ஆனால்..

முதலாவதாக, தப்பு உங்கள் மேல்தான். கடனை நினைவுபடுத்துவது யாருக்குத்தான் பிடிக்கும்? வாங்கும்போது உள்ள உற்சாகம் திருப்பித் தரும்போது பெரும்பாலானவர்களிடம் இருப்பதில்லை. “தரலைனா விடவா போறாங்க” என்ற சலிப்போடுதான் திரும்புகிறது கடன். நன்றிக்கடனும் விதிவிலக்கல்ல.

நன்றிக்கடனை நம்மைவிடச் சிறியவர்களிடமும், சமமானவர்களிடமும் மட்டுமே எதிர்பார்ப்போம். பெரியவர்களிடம் “அவங்களுக்கு எவ்வளவோ வேலை, இதெல்லாம் நினைவு வச்சிருப்பாரா?” என்போம். அதை நினைவுபடுத்துவதே பாவம் போல நடந்து கொள்வோம்.

சக்திக்கு மீறி யாரும் உதவவே போவதில்லை. 99 சதவீத நிகழ்வுகளில் அவர்களின் கடிகாரத்தைப் பார்த்து அவர்களுக்கே டைம் சொல்லும் வேலையைச் செய்கிறோம். வருத்திக்கொண்டு மகாபாரத கர்ணன் ரேஞ்சில் நாம் தானம் செய்கிறோம் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் அந்த அளவுக்கு நமக்கு நெருக்கமானவர்களாகவே இருப்பார்கள். அதனால், அவர்களிடம் எதிர்பார்க்கவே மாட்டோம்!

நாம் பெரிய ஆள் என்பதை உதவிகளின் மூலம் நிரூபிக்கத்தான் விரும்புகிறோமே தவிர, அவரைப் பெரிய ஆள் ஆக்குவதற்காக அல்ல என்பது அதிர்ச்சி கலந்த உண்மை. இந்த உதவியினால் இவர் பெரிய அளவுக்கு வருவார் என்பதைத் தூரப்பார்வையில் பார்க்க முடியும் என்றால், அந்த உதவியை எத்தனை பேர் செய்ய முன்வருவார்கள்?

எனவே நம்மைத் தாண்டி, உயரத்துக்கு அவர் செல்லும்போது, நாம் நம் சின்னப் பொறாமையை மறைத்து, அந்த உதவிக்கு செஞ்சோற்றுக்கடன் + அபராத வட்டி என விதித்து, அவரை நம் கட்டுப்பாட்டில் வைத்து, அவரது முக்கியத்துவத்தைக் குறைக்கிறோம்.

இதை இன்னொரு விதத்தில் நிரூபிக்கலாம். ஒருவேளை இதில் தப்பு ஏதாவது நடந்திருந்தால், எத்தனை பேர் பொறுப்பேற்போம்? “நான் சொன்னேன்ங்கறது சரிதான். ஆனா, நீ நல்லா விசாரிச்சிருக்கணும்” என்போம். உதவியில் நம் பங்கைக் குறைத்துவிடுவோம்; முடிந்தால் மறுத்துவிடுவோம்!

உதவி செய்ததால் கிடைத்த சந்தோஷத்துக்காக உதவினீர்கள். அவ்வளவே.

உங்களது உதவி நான்கு பேர் மத்தியில் பேசப்பட வேண்டும் என்ற ஆசை. எனவே, அவரது நன்றி மறந்த செயலினால் அல்ல. உங்களது நிறைவேறாத எதிர்பார்ப்பினால்தான் துன்பம் அடைகிறீர்கள்!

பொதுவாக மனிதர்கள் நன்றிக் கடன் செலுத்தவே விரும்புகிறார்கள்.ஆனால், அது நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியோ, நீங்கள் நினைக்கிற காலம் வரையிலோ அல்ல!

உதவி பெற்ற கணத்தில் ஒரு கண்ணீர்ப் பார்வை, பாதி வார்த்தைகளால் ஒரு “ தேங்...” சின்னதாய் ஒரு ஸ்பரிசம். அந்தக் கணம்தான் அங்கீகாரம். அதைத் தாண்டி எதிர்பார்த்தால் ,மெல்ல மனிதர்கள் மீது நம்பிக்கை இழப்பீர்கள்; உங்களின் நல்ல இதயத்தையும் தொலைப்பீர்கள்.

நன்றி மறப்பது சரியானதே என்பதல்ல வாதம். ஒரு உதவி செய்யப்பட்ட பிறகு, அது உதவி பெற்றவரின் வாழ்வோடும், மனதோடும் சென்று விடுகிறது. அதை ஏழு ஜென்மங்களுக்கு லாக்கரில் வைத்துப் பாதுகாப்பதும், ஏழு நொடிகளில் தொலைப்பதும் அவரவரது வேலை. எப்படி நீ இதை மறக்கலாம் என்ற கேள்வியினால் நம்மைக் காயப்படுத்திக் கொள்வது நம் வேலையே அல்ல. உதவியும் செய்துவிட்டு ஏன் வருந்த வேண்டும்?

நன்றி மறத்தல் இழிவு. அதை எதிர்பார்த்தல் அதனினும் இழிவு. இந்த வேகமான உலகில் நன்றியை எதிர்பார்த்து நல்ல இயல்பைத் தொலைப்பதைவிட, உருப்படியான வேலைகள் நிறையவே இருக்கின்றன.

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x