Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

அகத்தைத் தேடி 50: மரமாகி நின்ற மகான்

பாரதியார் புதுவையில் வசித்தபோது அடிக்கடி அரவிந்தரைக் கண்டு அவரோடு வேதாந்த விஷயங்களை அளவளாவுவது வழக்கம்.

புதுவையில் அக்காலத்தில் சித்தர்கள் பலர் நடமாடியிருக்கி றார்கள். அவர்களோடு பாரதிக்குப் பழக்கம் உண்டாயிற்று. பித்தர்கள் போலத் திரிந்த அவர்களின் பேச்சு சாதாரண மனிதர்களுக்குப் பிதற்றலாகவே தோன்றியது.

ஆனால், பாரதி அவற்றின் உள்ளே ஆழ்ந்திருந்த வேதாந்தப் பொருளைக் கண்டுகொண்டார். தாம் எழுதிய சுயசரிதைப் பாக்களில் குள்ளச்சாமி புகழ், கோவிந்தசாமி புகழ், யாழ்ப்பாணத்துச் சாமி புகழ் என்று அவர்களைப் பற்றிய அதிசயமான சித்திரங்களை தீட்டியிருப்பார். இவர்களில் குள்ளச்சாமி என்பவரை தமது குருவாகவே பாரதியார் கொண்டாடுகிறார். ‘தப்பாத சாந்த நிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமி தேவன்-தேசத்தார் இவன் பெயரைக் குள்ளச்சாமி தேவர் பிரான் என்றுரைப்பார். தெளிந்த ஞானி பாசத்தை அறுத்துவிட்டான். பயத்தைச் சுட்டான். நாசத்தை அழித்துவிட்டான். யமனைக் கொன்றான்’ என்று பாடிய பாரதி குள்ளச்சாமியை குருவாகவே ஏற்றுக்கொண்ட போதிலும், வேண்டுமென்றே அவரைச் சீண்டுகின்றார். “தம்பிரானே! நீர் இப்படி பழங்கந்தலுடன் அழுக்கு மூட்டையைச் சுமந்து திரிகிறீரே! நீர் என்ன பித்தனா?” என்று கேட்கிறார்.

அதற்கு குள்ளச்சாமி “புறத்தே நான் சுமக்கிறேன். அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கின்றாய் நீ” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு ஓடிப்போவார்.

மகான்களும் சித்தர்களும் தமது புறத்தூய்மை பற்றி எவ்வித கவனமும் இன்றி குப்பைமேட்டிலும், சாக்கடைகள் ஓரமும், தெருப் புழுதியிலும் சிக்குப் பிடித்து சடைகளாகத் தொங்கும் முடியுடன், ஆடையின்றியும் அழுக்குடம்புடனும் நடமாடியிருக்கிறார்கள். வெள்ளையும் சள்ளையுமாக வீதிகளில் நடந்து செல்லும் ‘சுத்தமான’ மனிதர்களைப் பார்த்து எள்ளி நகையாடியிருக்கிறார்கள்.

அழுக்குச்சாமி

மனிதர்களின் மன அழுக்கைப் போக்கி அவர்களைப் பரிசுத்தப்படுத்த வந்த ஞானி ஒருவரை ‘அழுக்குச்சாமி’ என்றுதான் காலம்காலமாக அழைத்திருக்கிறார்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சிக்குத் தெற்கில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த வேட்டைக்காரன் புதூர் எனும் கிராமத்தில் காணப்பட்டார் என்பதே அழுக்குச்சாமி பற்றி அறியக் கிடைக்கும் ஒரே ஒரு வரி வரலாறு.

இவரது பெயர் என்ன? பூர்விகம் எது என்று யாராலும் அறியமுடியவில்லை.

உடம்பெல்லாம் அழுக்கு, தெருமண், குளிப்பதில்லை, பரட்டைத்தலை, கோவணமே ஆடை, நெறிபடும் புருவங்களின் கீழ் நெருப்புக் கங்குபோல் கண்கள், பார்த்தவரைப் பயத்துடன் பின் வாங்க வைக்கும் ஊடுருவும் பார்வை.

ஊரார் அவருக்குச் சூட்டிய பெயர் அழுக்குச்சாமி இவர் தன்னையே ‘அழுக்கன்’ என்று சுட்டி அழைத்து வாய்விட்டுச் சிரிப்பது வழக்கம்.

இரவு வேளைகளில் தெருவில் சுகந்த மணம் வீசும். வீட்டுக்குள் இருக்கும் மக்கள் “அழுக்குச்சாமி போவுது” என்று பயபக்தியுடன் முணுமுணுப்பார்கள்.

உழைத்துக் களைத்து வீடுதிரும்பும் உழவனின் உடம்பில் வீசும் வியர்வையும் சேறும் கலந்த வாசனையை நுகர முடிவதுபோல இறைவனை அழைத்து அலைந்து திரிந்து எங்கெல்லாமோ புரண்டு எழுந்துவரும் அவரிடம் தெய்விக மணம் கமழ்வதில் என்ன ஆச்சர்யம்?

அவர் உடம்பில் என்னதான் நறுமணம் வீசினாலும் ஊர்மக்கள் அவரை அழைப்பது என்னவோ ‘அழுக்குச்சாமி’ என்றுதான்.

கண்டால் அகப்படுவேனோ?

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் நிர்வாணமாய் அலைந்து திரிந்த இவர் ஒரு சித்த புருஷர் என்று கண்டுகொண்ட ஒரு ஆன்மிகப் பெரியவர் இவரை மறித்து கைப் பிடித்து “கண்டுகொண்டேன் சாமி, நீங்கள் யாரோ? என்று கேட்க, “நீர் கண்டுகொண்டதால் நான் உமக்கு அகப்பட்டு விடுவேனா என்ன?” என்று சொல்லிச் சிரித்தபடி காற்றோடு புகைப்படலமாய் எழுந்து கரைந்து காணாமல் போனார் அழுக்குச்சாமி.

அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் பிளேக் எனும் பெருந்தொற்று நோய் பரவத் தொடங்கியிருந்தது. ஆயிரக்கணக் கில் மக்கள் பலியாகினர். அதற்கான ஆங்கில மருந்து கண்டுபிடிக்கப் படாத காலம். மக்கள் பல காலம் வசித்த ஊர்களைக் காலிசெய்து விட்டு காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

வேட்டைக்காரன் புதூரிலும் மக்கள் பரிதாபமாக மாண்டனர். அழுக்குச்சாமி அங்கு காலடி எடுத்து வைத்த வேளை பிளேக் பின்வாங்கியது. எங்கிருந்தோ அலைந்து திரிந்து அவர் தந்த பச்சிலைகளை உண்ட மக்கள் நோயிலிருந்து தப்பிய அதிசயம் நடந்தது.

அதன்பின்னர் அவரைத் தங்கள் ஊரிலேயே தங்கிவிடுமாறு மக்கள் மன்றாடினர். ஏழைகளுக்கும், ஏதிலிகளுக்கும் இரங்கும் இயல்பு கொண்ட அந்த அருளாளர் மக்களோடு வாழ முற்பட்டார்.

பரப்பிரம்மம் ஓடுது பார்

ஒருநாள் கம்பாலப்பட்டி என்ற ஊரின் வழியாக சுவாமிகள் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்த போலி பக்தர்கள் “அனைத்தும் பிரம்ம மயம்” என்று சொல்லி உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். சுவாமிகள் சற்றே நின்று அவர்களை உற்றுப் பார்த்தார். அவர்களின் மத்தியில் பொத்தென்று ஒரு நாகப் பாம்பு விழுந்தது. இப்போது “ஐயோ பாம்பு” என்று அலறியடித்து ஓடினர். அப்போது சுவாமிகள் “அடே! பிரம்மம் எல்லாம் ஓடுது பார்!” என்று கைதட்டிச் சிரித்தார். பாம்பு மறைந்தது. இவ்வாறு பொய் வேதாந்தம் பேசினோருக்கு நல்லறிவு புகட்டிய சம்பவங்களும் பல உண்டு.

உப்பாற்றங்கரைதனிலே…

ஒருமுறை தமது சீடர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றவர், அலமேலு என்ற அம்மையாரிடம் அருகில் உள்ள உப்பாற்றங்கரையில் ஒரு வில்வமரமும் வன்னிமரமும் நட்டு தண்ணீர் ஊற்றி வரச் சொன்னார். காரணம் புரியாவிட்டாலும் கள்ளியும் முட்செடிகளும் நிரம்பிய பாதை வழியே சென்று சுவாமிகளின் விருப்பப்படியே உப்பாற்றங்கரையில் அவ்விரு மரங்களையும் வளர்த்தார் அலமேலு.

சிறிது காலம் கழித்து வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் சமாதியில் ஆழ்ந்தார். 12 நாட்கள் அப்படியே இருந்தார். அசைவே இல்லை. கூடிநின்று பக்தர்கள் இவர் சமாதியடைந்தால் எங்கே புதைப்பது என்று பேசிக்கொண்டனர்.

சுவாமிகளின் கண்கள் திறந்தன. “இந்த அழுக்கனை உப்பாற்றங்கரையில் அலமேலு வளர்த்த மரங்களின் கீழே புதைத்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டு அடங்கிப் போனார்.

இன்றும் வேட்டைக்காரன் புதூரில் உப்பாற்றங்கரையில் வில்வமரமும், வன்னி மரமும் கால்கள்போல தோன்ற இலைகள் சடாமுடியாய் அலைபாய மரமாகி நிற்கிறார் அந்த மகான்!

(தேடல் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x