Last Updated : 14 Apr, 2021 03:13 AM

 

Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

மாய உலகம்! - தான்சேனின் பாடல்

“தான்சேன், கொஞ்சம் இப்படி வந்து என்னோடு அமருங்கள்” என்றார் அக்பர். ”ரொம்ப நாளாக உங்களிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் நேரம் கிடைத்தது. எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அற்புதமாகப் பாட முடிகிறது? உலகின் சிறந்த பாடல்களை எல்லாம் தேடித் தேடி கேட்டு ரசித்திருக்கிறேன். உலகின் சிறந்த இசைக் கருவிகளை எல்லாம் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், இதுவரை கேட்ட எந்தப் பாடலைப் போலவும் இல்லை உங்கள் பாடல். எந்த இசைக் கருவியும் உங்கள் குரலைப் போல் இவ்வளவு மயக்கத்தில் என்னை ஆழ்த்தியதில்லை.

நீங்கள் பாடத் தொடங்கினால் தோட்டத்திலிருக்கும் வண்டுகள் மலர்களை மறந்துவிட்டு உங்களை வந்து மொய்க்கின்றன. மதம் கொண்ட யானை உங்கள் பாடல் கேட்டு அடங்கி ஒடுங்கியதாகச் சொல்கிறார்கள். நீங்கள் தீபக் ராகம் பாடினால் விளக்குகள் தாமாகவே எரிகின்றன. உங்கள் ராகத்தைக் கேட்டு மேகம் நெகிழ்ந்து மழையாகப் பொழியத் தொடங்கிவிடுகிறது. இது எப்படிச் சாத்தியமாகிறது தான்சேன்?

நீங்கள் ஒவ்வொரு முறை பாடும்போதும் நான் இந்த உலகிலிருந்து மறைந்து இன்னொரு மாய உலகுக்குச் சென்றுவிடுகிறேன். நீங்கள் விடைபெற்றுச் சென்று பல மணி நேரம் கழிந்த பிறகும், என்னால் மயக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை.

இத்தனைக்கும் நீங்கள் ராமரையும் கிருஷ்ணரையும் சரஸ்வதியையும் பாடுகிறீர்கள். நானோ வேறொரு மதத்தைபின்பற்றுபவன். என் இறைவன் வேறு. என் நம்பிக்கைகள் வேறு. இருந்தாலும் உங்கள் பக்தி என்னையும் பற்றிக்கொள்வதை என்னால் உணர முடிகிறது. நீங்கள் பாடப் பாட உங்கள் ராமரிடம், உங்கள் கிருஷ்ணரிடம், உங்கள் சரஸ்வதியிடம் நானும் கரைந்துபோக ஆரம்பித்துவிடுகிறேன். நீங்கள் பாடி முடிக்கும்வரை கிட்டத்தட்ட நானும் உங்களைப் போல் ஒரு வைணவனாகவே மாறிவிட்டது போல் இருக்கிறது. இந்த மாயம் எப்படி நிகழ்கிறது, தான்சேன்?”

இந்த மாயத்துக்குக் காரணம் நான் மட்டுமல்ல, நீங்களும்தான் என்றார் தான்சேன். ”நான் ஒரு பாடகன். பாடுவது தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. என் பாடலை எவ்வளவு பேர் கேட்கிறார்கள், அவர்களுக்கு அது பிடித்திருக்கிறதா, இல்லையா, அவர்கள் செல்வந்தர்களா ஏழைகளா என்றெல்லாம் நான் கவனிப்பதில்லை. என் முன்னால் ஒருவரும் இல்லாவிட்டாலும் குயில்போல், சிட்டுக்குருவிபோல், வண்டுபோல் நான் பாடிக்கொண்டுதான் இருப்பேன். நான் இயற்கையிடமிருந்து கற்றவன். இயற்கையின் மொழியில் பாடுபவன். எனவே, தாவரங்களாலும் விலங்குகளாலும் பறவைகளாலும் என் பாடலை உணர முடியும்.

நீங்கள் குறிப்பிட்டதுபோல் நான் வைணவக் குடும்பத்தில் பிறந்தவன். இதிகாசங்களும் புராணங்களும் கற்றவன். என் பாடலில் இந்துக் கடவுள்கள் நிறைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், என் பாடலுக்கு மதம் கிடையாது. வைணவனாக நான் பாடுகிறேன் என்றாலும் என் பாடல் வைணவப் பாடல் அல்ல. கலைஞர்களுக்கு வேண்டுமானால் மதம் இருக்கலாம். கலைக்கு மதம் இல்லை.

கேட்கும் உங்களுக்கும் இது பொருந்தும். எனக்கான பாடலை மட்டுமே கேட்பேன், எனக்கான இறைவனை மட்டுமே ஏற்பேன் என்று நீங்கள் தீர்மானித்திருந்தால் உங்கள் மனம் இந்த அளவுக்கு விரிந்திருக்காது. குறிப்பிட்ட பாடல்களை மட்டும் நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்திருப்பீர்கள். அவ்வாறு நடக்காமல் போனதற்குக் காரணம் உங்கள் துடிப்பான தேடல். என் மதம், என் பாடல் என்னும் வட்டத்தை வெற்றிகரமாக நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். அதனால்தான் இந்துவான என்னை வரவேற்று உங்கள் அவையில் இணைத்துக்கொண்டீர்கள்.

மேலும், என் சுதந்திரத்தில் ஒருபோதும் நீங்கள் தலையிட்டதில்லை. நான் மன்னன்,என் இறைவனைப் பாடு என்று நீங்கள் என்னிடம் கட்டளையிட்டிருக்க முடியும். ஆனால், நீங்கள் செய்யவில்லை. மாறாக, நீங்கள் விரும்பியதைப் பாடுங்கள், விரும்பும்போது மட்டும் பாடுங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள். எனக்கு மட்டுமல்ல, என் ராமருக்கும் கிருஷ்ணருக்கும்கூட இடம் கொடுக்கும் அளவுக்கு உங்கள் இதயத்தை அகலமாகத் திறந்து வைத்திருக்கிறீர்கள். அதனால்தான் என் பாடல் உங்களைத் தீண்டியிருக்கிறது.

என்னதான் மன்னராக இருந்தாலும் நீங்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர். என்னால் உங்களுக்குப் பாட முடியாது என்று நான் சொல்லியிருந்தால், என் பாடலில் இருந்து இனிமை பிரிந்து சென்றிருக்கும். என் குரலில் இருக்கும் உயிர் காணாமல் போயிருக்கும்.

ஒரு எளிய மனிதனாக நான் என் பாடலைப் பாடுகிறேன். ஒரு எளிய மனிதனாக நீங்கள் என் பாடலைக் கேட்கிறீர்கள். நாம் இருவரும் ஒரே தளத்தில் கரம் tகோத்து நிற்கிறோம். ஒரே புள்ளியில் இணைகிறோம். என் இதயத்திலிருந்து நேராக உங்கள் இதயத்தை வந்து அடைகிறது என் பாடல். அந்தக் கணத்தில் என் பாடல் நம் பாடலாக உருமாறுகிறது. மாயங்களும் நிகழ ஆரம்பிக்கின்றன.”

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x