Last Updated : 13 Apr, 2021 03:12 AM

 

Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

அந்த ஒரு நிமிடம்: வலது இடது சங்கமம்!

அது 2011ஆம் ஆண்டு. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம், கட்டுக்கடங்காத கூட்டம். 275 ரன் என்று இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை இந்திய அணி விரட்டத் தொடங்கியது. வந்த வேகத்தில் வீரேந்திர சேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் நடையைக் கட்டினார்கள். கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனம் உடைந்து சுக்குநூறானது. 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலகக் கோப்பையை ஏந்துமா அல்லது கனவாகிப் போகுமா என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

அடுத்தது யார்?

ஆனால், கவுதம் கம்பீரும் விராட் கோலியும் இலங்கை பந்துவீச்சைச் சமாளித்து விளையாடி, ரன்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், அன்றைய கேப்டன் தோனி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், சேவாக் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் இறங்கினார். மூத்த வீரர் சச்சின் கொடுத்த யோசனையைப் பற்றியே ஆலோசனை. கோலி, கம்பீரில் யாராவது ஒருவர் அவுட் ஆனால், யாரைக் களமிறக்குவது என்று பரபரத்தார்கள்.

சச்சின் தெரிவித்த அந்தத் திடீர் யோசனை இதுதான். ‘இடதுகை ஆட்டக்காரர் கம்பீரும் வலதுகை ஆட்டக்காரர் கோலியும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே யுவராஜ் சிங், தோனி என இரு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஒருவேளை வலதுகை வீரர் கோலி அவுட்டானால், களத்துக்கு வலதுகை பேட்ஸ்மேனான தோனியே களமிறங்குவது நல்லது. இடதுகை பேட்ஸ்மேன் கம்பீர் அவுட்டானால், இடதுகை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் களமிறங்குவது நல்லது’.

யோசனைக்குச் செயல்வடிவம்

கிரிக்கெட்டில் வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும்போது அது எதிரணி பந்துவீச்சாளர்களுக்குக் கூடுதல் சுமையையும் குழப்பத்தையும் தரும். இருவருக்கும் ஏற்றாற்போல பந்துவீச்சு முறையை மாற்ற வேண்டும். இதைப் பயன்படுத்தி ரன்களைக் குவிக்கலாம். விக்கெட்டையும் காப்பாற்றிக்கொள்ளலாம். இதுதான் அனுபவ வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த யோசனை. இதைப் பற்றிதான் ஆலோசனை நடந்தது. இது கேப்டன் தோனிக்கும் சரியெனப்பட்டது.

அப்போதுதான் இலங்கை அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் முரளிதரன் பந்துவீசத் தொடங்கியிருந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முரளிதரன் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் இருந்ததால், பயிற்சியின்போது அவருடைய பந்துவீச்சில் விளையாடிய அனுபவம் தோனிக்கு இருந்தது. எனவே, விக்கெட் விழாமல் அவருடைய பந்துவீச்சைச் சமாளித்து விளையாட முடியும் என்று தோனியும் தன் கருத்தைப் பகிர்ந்தார். இந்தத் திட்டம் அணிக்கு நல்லது என்கிற முடிவுக்கு எல்லோரும் வந்தனர்.

வெற்றிக்கான பாதை

114 ரன்களை இந்திய அணி எட்டியபோது வலதுகை ஆட்டக்காரர் விராட் கோலி ஆட்டமிழந்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் 4-வது வீரராகக் களமிறங்கிக்கொண்டிருந்த இடதுகை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் அடுத்து களமிறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், வலதுகை ஆட்டக்காரரான கேப்டன் தோனி களமிறங்கினார்.

மீண்டும் களத்தில் இடது (கம்பீர்), வலது (தோனி) ஆட்டக்காரர்களின் ஆட்டமே நீடித்தது. இந்த இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இது இந்திய அணியை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றது. 223 ரன்களில் இடதுகை ஆட்டக்காரர் கம்பீர் ஆட்டமிழந்த பிறகு, இன்னொரு இடது கை ஆட்டக்காரரான யுவராஜ் சிங் களமிறங்கினார்.

யுவராஜ் சிங்கும் (இடது) தோனியும் (வலது) சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின் குலசேகரா பந்துவீசியபோது, தோனி ஓங்கி அடித்த சிக்ஸ் பெவிலியனைத் தாண்டியபோது இலங்கை தோல்வியைத் தழுவியது. 28 ஆண்டுகால கனவு நனவானதில் நாடே குதூகலித்தது.

அனுபவம் பேசும்

அனுபவம் எப்போதுமே கைகொடுக்கும். அன்றைய தேதியில் இந்தியாவுக்காக 22 ஆண்டுகள் விளையாடியிருந்த அனுபவ வீரர் சச்சின், அந்த சில நிமிடங்களில் கொடுத்த யோசனை மிகப் பெரிய பலனைத் தந்தது. வெற்றி பெற சூழ்நிலைக்கேற்ப திட்டங்கள் தேவை. அதைத் துணிந்து செயல்படுத்த திறமையும் தேவை. அதைவிட முக்கியம், அணி விளையாட்டில் ஒருங்கிணைப்பு அவசியம். விளையாடும் எல்லோருமே ஒருங்கிணைப்புடன் இயங்கும்போதுதான் வெற்றி நம்மைத் தேடி வரும்.

(2011 உலகக் கோப்பையை இந்தியா வென்று ஏப்ரல் 2ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவு)

(நிமிடங்கள் வரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு:

karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x