Last Updated : 22 Dec, 2015 12:25 PM

 

Published : 22 Dec 2015 12:25 PM
Last Updated : 22 Dec 2015 12:25 PM

பருவநிலை உச்சி மாநாடு இலக்கை எட்டுமா?

டிச. 11-ந் தேதி பாரீசில் முடிவுக்கு வந்த ஐ.நா.-வின் 21-வது பருவநிலை மாநாட்டை வரலாற்றுச் சாதனை என்று பலரும் கொண்டாடுகின்றனர். 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மாநாடுகளில் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட எந்த இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. அடுத்ததாக புவி வெப்பமாதல், இயற்கை சீற்றங்களுக்கு காரணம் என்பதை முதன்முறையாக இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

பலமான அழுத்தங்கள்

இத்துடன் ‘பொதுவான மற்றும் மாறுபட்ட பொறுப்பு’ என்று கியோட்டோவில் நடைபெற்ற முதல் பருவநிலை உச்சி மாநாட்டின் கோட்பாடு, தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது தொழில்புரட்சி காலத்திலிருந்து புவி வெப்பத்தை அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுக்களை அதிகம் வெளியிட்டவர்கள் என்ற வகையில் வளர்ந்த நாடுகள் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில், மற்ற நாடுகளைவிட கூடுதல் பொறுப்பேற்கவேண்டும் என்பதே இந்தக் கோட்பாடு.

கிட்டத்தட்ட 20 அண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்பாட்டை உலகின் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட நிலையில், அமெரிக்கா மட்டும் அடாவடியாக அதனை நிராகரித்தது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு ஆபத்தான பிரச்சனையில் உலகின் நலனைவிட தனது வர்த்தக நலனை அமெரிக்கா முன் வைத்ததற்கு, காலநிலை அரசியலுக்குள் பன்னாட்டு நிறுவனங்களின் பலமான அழுத்தங்கள் ஊடுருவியதே காரணம்.

யாருக்கு பொறுப்பு?

கியோட்டோ ஒப்பந்தத்தின் கறார்நிலை இப்போதைய ஒப்பந்தத்தில் இல்லை. இது சட்டப்படியாக நாடுகளை கட்டுப்படுத்தாது. நாடுகள் தாங்களாகவே முன் வைக்கும் கார்பன் குறைப்பின் அடிப்படையில் தான் இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது. வலுவல்லாத, தெளிவற்ற பகுதிகள் இதில் ஏராளமாய் உள்ளன.

‘‘கியோட்டோ கோட்பாட்டை இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொண்டாலும் மீதம் விட்டுவைக்கப்பட்டுள்ள கார்பன் வெளியை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் கார்பன் பட்ஜெட் இதில் வரையறுக்கப்படாதது வளரும் நாடுகளைப் பெரிதும் பாதிக்கும். புவி வெப்பத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடுகளுக்கு நட்டஈடு தருவதும் இதில் உறுதிசெய்யப்படவில்லை. வளரும் நாடுகள் கார்பன் குறைப்புக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றவும், மாற்று எரிசக்திக்கு மாறுவதற்கு 100 பில்லியன் டாலரை வளர்ந்த நாடுகள் ஒதுக்க வேண்டும் என்பதும், கார்பனை செயற்கையாக பிடித்து வைப்பதற்கான தொழில்நுட்பத்தை வளர்ந்த நாடுகள் இலவசமாக பிற நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்பதும் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்படவில்லை.

அதனால், ‘மாசுபடுத்தியவன்தான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற சர்வதேச கோட்பாட்டையும் வளர்ந்த நாடுகள் அப்பட்டமாக மீறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது’’ என்று புதுடெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் தலைமை இயக்குநர் சுனிதா நாராயண் கூறியதில் அர்த்தம் உள்ளது.

பாலுக்கும் பூனைக்கும்

சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பம் குறித்த ஆய்வுகளையும் களப்பணிகளையும் ஆற்றிவரும் உலகின் பல்வேறு அமைப்புக்களும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டியுள்ளன. நாடுகள் தாங்களே முன்வந்து 2030-க்குள் கார்பன் குறைப்புக்காக வாக்களித்துள்ள கார்பனின் மொத்த அளவு 15 கிகா டன்னாகும். இது, 2100-ல் புவி வெப்பத்தை ஆபத்தின் எல்லையான 2 டிகிரி செல்சியஸை எட்டாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்கு உதவாது.

அத்துடன் சீனா தவிர மற்ற எந்த நாடும் எந்த ஆண்டிலிருந்து கார்பன் வெளியேற்றத்தை முழுமையாக தவிர்ப்போம் என்று உறுதியளிக்கவில்லை. இதன் விளைவாக 2030-க்குப் பின் பேரழிவை இந்த பூவுலகம் சந்திக்க உள்ளது.

2030-க்குள் கார்பனைக் குறைக்க இந்தியா அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்ற இந்தியாவுக்கு மட்டும் 2.5 பில்லியன் டாலர் நிதி தேவைப்படும். வளர்ந்த நாடுகள் தங்கள் நிதிப்பொறுப்பை மீறும்போது, வளரும் நாடுகள் தங்கள் உறுதிமொழிகளின்படி நடந்துகொள்ள முடியாது போகும்போது, நிலைமை மேலும் மோசமாகும்.

இந்தப் பின்னணியில் ‘‘சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க முடியும்’’ என்று மாநாட்டில் நமது பிரதமர் பேசியுள்ளது, ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்பதற்கு ஒப்பானது. புவிவெப்ப ஒப்பந்தங்கள் அனைத்தையும் சீர்குலைத்து, தனது கோட்பாட்டை மற்றவர்கள் மீது திணித்துள்ள அமெரிக்காவுடன் கைகோத்துக்கொண்டு, இந்த உலகை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.

அழிவின் விளிம்பில்

இன்றைக்கும் சீனாவுக்கு அடுத்து அதிக கார்பனை வெளியேற்றிவரும் அமெரிக்கா, நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை (Fossil fuels) தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தி இந்த மாநாட்டுக்குச் சவாலாக இருப்பதுடன், நம் மீது குற்றமும் சுமத்துகிறது. இப்போதும் தனிநபர் கார்பன் நுகர்வு விகிதம் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், நம் நாட்டில் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. நம் நாட்டில் 400 மில்லியன் மக்களுக்கு மின்சாரப் பயன்பாடு இன்றைக்கும் எட்டாக் கனியாகவே உள்ளது.

சமீபத்திய பிரிட்டனின் ஆய்வு நம்மை மேலும் அச்சுறுத்துகிறது. இதே நிலை தொடருமானால் 2100-ல் புவி வெப்பம் 6 டிகிரி செல்சியஸ் கூடிவிடலாம். நமது தேவைக்கான மொத்த ஆக்சிஜனில் மூன்றில் இரண்டு பங்கு கடலால்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த உற்பத்தியின் அளவு வெகுவாகக் குறையும். அண்டார்டிகா பனி பெரும்பாலும் உருகி உலகின் பல நாடுகளை மூழ்கடித்துவிடும். அந்தச் சூழலில், மனிதர்களும் விலங்குகளும் கொத்து கொத்தாக கொல்லப்படுவர்.

புவி வெப்பத்தின் தாக்கத்தை இந்தியா தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஜார்கண்ட் தொடங்கி, ஒடிசா வழியாக, சமீபத்தில் தமிழகத்திலும் இயற்கையின் கோர தாண்டவத்தை நாடு எதிர்கொண்டு வருகிறது. அழிவின் விளிம்பில் இந்தப் புவி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், நாடுகள் தங்கள் வர்த்தக நலன்களை முன்னிறுத்தி நான் முந்தி, நீ பிந்தி என கொடூரமான போட்டியில் இருந்து மீள மறுக்கின்றன. இதைத்தான் திருவள்ளுவர் கீழ்க்காணும் குறள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘‘வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்’’

தொடர்புக்கு: veeveekalai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x