Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

பாடல் சொல்லும் பாடு 11: பேதமை பெண்ணுக்கு அணிகலனா?

கவிதா நல்லதம்பி

ஸ்திரீகள் எவ்வளவு படித்தாலும் புருஷர்களை வெல்ல மாட்டார்கள்; ஸ்திரீகள் சொற்ப காலத்தில் வளர்ந்து புஷ்பித்து சீக்கிரத்தில் கெட்டுப்போகிற சிறு செடிகளுக்குச் சமானமாய் இருக்கிறார்கள். புருஷர்களோ என்றால், வெகுநாள் தாமதப்பட்டு வளர்ந்து நெடுநாள் வரைக்கும் பலன் கொடுக்கிற விருக் ஷங்களுக்குச் சமானமாய் இருக்கிறார்கள்.

- ஞானாம்பாள், பிரதாப முதலியார் சரித்திரம்.

ஔவை என்றதும் மனக்கண்ணில் தோன்றும் மூதாட்டியின் தோற்றம், சங்கக் கவிதைகளில் காணும் இளமைமிகு பிம்பத்துக்கு மாறானது. ‘நிறைய கள் கிடைத்தால் எமக்குக் கொடுத்துத் தானும் உண்டு மகிழும் அதியன், புலவு நாறுகின்ற என் தலையைச் சந்தனம் நாறும் அவன் கரங்களால் நீவிக் கொடுப்பான்’ என நட்பின் சித்திரம் வரைகிறார் ஔவை. பெண்கள் பேசவே கூடாதென்ற நாணமில்லாப் பெரும்பொருளான காமத்தை, முளைவிட்டுக் கிளைவிட்டுப் பரந்து வளர்ந்திருக்கும் நிழல் தரும் பெருமரமென உருவகிக்கையிலும், ‘என் காதல் நோய் தெரியாமல் உறங்கும் ஊரை என்ன செய்வது? முட்டுவதா, தாக்குவதா?’ என்று கலகம் செய்யும்போதும் ஔவை இளமைத்திறம் கொண்டவராகவே தெரிகிறார்.

‘பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்’ என்று சொன்ன பிற்கால ஔவையின் வரிகளைக் கொண்டு பெண்களின் அறிவை அளந்தால், ‘எந்த நாட்டில் ஆண்கள் நெறி தவறாதவர்களோ அந்த நாடும் அவ்வாறே சிறந்ததாக இருக்கும்’ என்று ஆள்பவர்களுக்கு அறம் சொன்ன சங்க ஔவையின் ஞானத்தை எவ்வாறு நேர்செய்வது?
பௌத்த காப்பியமான மணிமேகலை, முதன்முதலாகப் பெண் துறவை அங்கீகரித்த பெருமைக்குரியது. காதலுடன் துரத்தும் உதயகுமரனிடம், “முதுமை அடைவதும் நோய்வாய்ப்படுதலும் இறத்தலும் இந்த யாக்கையின் இயல்பு.

அது துன்பங்களைச் சுமந்து நிற்கும் பாத்திரமாக இருக்கிறது. எனவே, நிலையாமையை உணர்” என்கிறாள் மணிமேகலை. அதேநேரம், “போரில் பகைவெல்லும் களிறு போன்ற ஆண்மகனுக்குப் பெண்ணாகிய நான் கூறும் அறம் உள்ளதா?” என்று சொல்லி ஆணைக் காட்டிலும் தன் அறிவைச் சுருக்கிக் காண்பவளாகிறாள். பிற சமயச் சான்றோர்களுடன் வாதிட்டு, பௌத்தத்தின் மேன்மையை உணர்த்த காஞ்சி செல்கிறாள் மணிமேகலை. சமயவாதம் புரிகையில் இளம்பெண் வடிவுக்குள்ளிருக்கும் ஞானத்தின் ஆழத்தைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என ஆண் வடிவம் ஏற்கிறாள்.

பேதங்களைக் கடந்த பாடல்கள்

கணவன் இறந்த பிறகும் கிருஷ்ண பக்தியில் மாறாப் பிடிப்புகொண்ட மீரா, கண்ணனையே கணவனாகக் கொண்டு கைம்பெண் கோலம் தரியாதிருக்கிறார். குடும்பத்தாராலேயே நஞ்சூட்டப்படுகிறார். கீதத்தால் தன்னைக் காத்து பின்னொரு நாள் கிருஷ்ண பிரேமையில் ஐக்கியமாகிறார். கன்னட ஞான மரபின் பெண் கவியான அக்கமாதேவியும் மண வாழ்க்கையைத் துறந்தே பொதுவெளி அடைகிறார். கௌசிகன் என்னும் சிற்றரசன் அக்கமாதேவி மீது கொண்ட காதலால் வலிந்து மணக்கிறான்.

தன் பக்திக்கும் வழிபாட்டுக்கும் இடையூறு நேரக் கூடாது, காண வரும் அடியவர்களுக்குப் பணிசெய்வதைத் தடுக்கக் கூடாது என்ற தேவியின் நிபந்தனைகளை ஏற்கிறான். நாளுக்கு நாள் தேவியின் பக்தியும் அடியார் கூட்டமும் பெருகி நிற்க, “ஏன் எப்போதும் இவ்வாறு?” என்று மன்னன் கேட்க, வாக்குறுதியை மீறியதாக அரண்மனை விட்டு வெளியேறுகிறார் தேவி. மன்னன் கொடுத்த ஆடை, அணிகலன் என யாவற்றையும் துறந்து, தன் நீண்ட கூந்தலைக் கொண்டே உடலை மறைத்து பசவண்ணர் உள்ளிட்டோர் சமயவாதம் புரியும் இடத்தை அடைந்து வாதிடுகிறார். கவி இயற்றுகிறார். காடு மேடுகளெல்லாம் நடந்து திரிந்த அவரது கால்கள் எங்கோ தடமறியாது மறைந்தன.

செங்கோட்டை ஆவுடையக்காள் பால்யத்தில் கைம்பெண் கோலம்பூண்டவர். ஊரை, ஆச்சாரங்களை எதிர்த்துக் கல்வி கற்றவர். கைம்மை நோன்பேற்ற அவர் பேதங்களைக் கடந்த அன்பின் பாடல்களைப் புனைந்தார். அவரது ஞானம் சாதிப் பிரதிஷ்டம் செய்யக் காரணமாயிற்று. உன்மத்தம் கொண்ட அந்த இளம்பெண் நெடுவழிகளில் பயணம் செய்து, அத்வைதப் பாடல்களை இயற்றினார். காலம் செல்லச் செல்ல அவர் அருமை உணர்ந்தனர் செங்கோட்டை மக்கள். தன் ஊரிலேயே தங்கியிருந்த ஆவுடையக்காள் ஆடி அமாவாசையன்று குற்றால அருவியில் நீராடச் சென்றவர், சென்றவர்தான். அதன்பின் அவரைப் பற்றி அந்த ஊர் எதையும் அறிந்திருக்கவில்லை.

‘மனமும் பொய்யடியோ, குயிலே / மனக் கூடும் பொய்யடியோ / இனமும் பொய்யடியோ, குயிலே / தனமும் பொய்யடியோ!’
- எனக் குயில் கண்ணி பாடிய ஆவுடையக்காளை, சாதி, சமய, சாத்திரச் சாடலுக்கான வித்தையை பாரதிக்குக் கொடுத்தவராகக் காண்கிறார்கள் அறிஞர்கள்.

ஞானத்தின் கூர்மை

புரட்சியாளரான அலெக்ஸாண்டிரா கொலந்தாய், ‘தாய்மையும் குடும்பமும் பெண்ணுக்குக் கூடுதலான சுமையாக மாறி, அவள் சுயத்தை இழக்கச் செய்து அவளது சமூகப் பணிகளுக்கு இடையூறாகின்றன’ என்றார். காதலித்து மணந்த கணவரை விட்டுப் பிரிந்தார். வாழ்நாள் இறுதிவரைக்குமான அவரது போராட்டங்கள், வர்க்கப் பிரிவினையோடு பாலினரீதியாக ஒடுக்கப்படும் பெண் தொழிலாளர்களின் நலன்மீது அக்கறை கொண்டிருந்தன.

ஆண்டாளும் மீராவும் அக்கமாதேவியும் தமக்குள்ளிருந்த அன்பின் பெருக்கைப் பக்தியின் வடிவாகக் கண்டடைந்தார்கள். அவர்கள் வேண்டிய காதல், மனித சமூகத்தின் ஆண் வடிவிடம் அடைந்துவிடக் கூடியதல்ல. மாறாக, அவர்கள் பெற்ற ஞானம், மற்றவர் கண்களுக்குப் பேதமையாய்த் தெரிந்தது. சமூக வரையறைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் உட்பட்ட பெண்ணுருக்களாக அவர்கள் இல்லை. அவர்கள் ஞானத்தின் கூர்மையைத் தம் அணிகலனாகச் சூடிக்கொண்டவர்கள். அதுவே சாத்திரங்களையும் வேதங்களையும் கேள்வி கேட்கும் துணிவைத் தந்தது. இந்த ஒப்பற்ற ஞானத்தைக் குடும்பத்தின் எல்லைக்குள் அவர்களால் கண்டடைய முடியவில்லை. அவர்களின் இறப்பும் பெருமர்மம் கொண்டதாகப் பக்தியில் ஒளிந்துகிடக்கிறது.

ஆணுக்கு நிகரில்லையா?

கே.பி.சுந்தராம்பாளை இந்த மரபின் தொடர் கண்ணியாகக் கொள்ளலாம். கிட்டப்பாவுடன் அவரை இணைத்தது இசையே. இருவரும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, சுந்தராம்பாளின் கானம் இன்னும் ஒரு படி மேலே சென்று நாடக மேடைகளையும் தமிழிசை அரங்குகளையும் நிறைத்தபோது, அவர்களின் வாழ்வு ஆண் - பெண் என்னும் தன்முனைப்பு முரண்களுக்குள் சிக்கிக்கொண்டது. எட்டே ஆண்டுகளில் முடிந்துபோனது மணவாழ்க்கை. விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, திரைக் காவியங்களில் தோன்றிப் பாடினாலும் ஒரு துறவியைப் போலவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டார் அவர்.

பெண் அறிவு தனக்கு நிகரெனக் கொள்வதையே ஏற்காத ஆண் மனம், தன்னிலும் உயர்ந்ததென்று பெண்ணறிவை ஏற்குமா? பெண்ணின் ஞானத்தை யாவருக்குமான ஒளியென ஆண் அறிவு காண்கிறபோது, குடும்பம் பெண்ணுக்குச் சிறையாக இருக்காது. சில பெண்பிள்ளைகள் நெருப்பின் விதியிலிருந்து தப்புவதற்காக காதலுக்கு பக்தியின் முகத்திரையை அணிவிக்கிறார்கள் அப்போது ஒரு மீரா பிறக்கிறாள் ஓர் ஆண்டாளும் ஒரு மகாதேவி அக்காவும் பிறக்கிறார்கள். ஒவ்வொரு கன்னியாஸ்திரீயும் / நித்திய இளைஞரான யேசுவுக்கான / கருகிய காதல் கவிதையே / அபூர்வமாக, அதி அபூர்வமாக / ஒரு பெண்பிள்ளை / உலகைப் பார்த்துச் சிரிக்கும் வலிமை பெறுகிறாள்...

- ‘கருகிய கவிதை’,
கே. சச்சிதானந்தன், தமிழில்: சுகுமாரன்.
(பெண் வரலாறு அறிவோம்)
கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x