Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

ஆடும் களம்: வாள் தூக்கி நிற்கும் வீராங்கனை பவானி!

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு என்பது இந்தியர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் அந்நியமான விளையாட்டு. ஒலிம்பிக்கில் அந்த விளையாட்டைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால், பல வீடுகளிலும் அலைவரிசையை மாற்றிவிடுவார்கள். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சுக்கு அதுபோல் பாராமுகம் இருக்காது என்று நம்பலாம். ஏனெனில், முதன்முறையாக ஒலிம்பிக்கில் இந்தியர் ஒருவர் வாள்வீச்சு போட்டியில் கலந்துகொள்வதை உலகமே காணப்போகிறது. அந்தப் பெருமைமிகு தருணத்தை நமக்குத் தரவிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பவானி தேவி.

விளையாட்டுக்கெனப் புகழ்பெற்ற ஊர்கள் தமிழகத்தில் நிறைய உண்டு. தலைநகரில் விளையாட்டுக்குப் பெயர்போன பகுதி வட சென்னை. அந்தப் பகுதியில் பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் பவானி தேவி. தண்டையார்பேட்டையில் முருகா தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பவானி தேவிக்கு அப்போது 11 வயது.

வாள்வீச்சு ஆசை

விளையாட்டு வகுப்பில் விருப்ப விளையாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அதனால், வாள்வீச்சு, ஸ்குவாஷ் ஆகிய இரண்டையும் அப்போது தேர்ந்தெடுத்தார். ஆனால், இரண்டு போட்டியும் ஒரே நாளில் நடைபெற்ற சூழலில் ஏதாவது ஒன்றை மட்டுமே தொடர வேண்டிய சூழல். உடனே, எதைப் பற்றியும் யோசிக்காமல் வாள்வீச்சைத் தேர்ந்தெடுத்தார் பவானி.

வாள்வீச்சில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எல்லாம் விலை உயர்ந்தவை. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பவானி, அந்த விளையாட்டைத் தேர்ந்தெடுத்தபோது பள்ளியில் பலரும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஆனால், ஒருமாதிரி சமாளித்துவிட்டுப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார் பவானி. தொடக்கக் காலத்தில் மூங்கில் கழியைக் கொண்டே வாள்வீச்சுப் பயிற்சியை மேற்கொண்டார். வாள்வீச்சை முறை யாகக் கற்றுக்கொள்ள சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள வாள்வீச்சு மையம் அவருக்கு உதவியது. 11 வயது சிறுமியாக கூச்ச சுபாவத்தோடு அம்மா ரமணியின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்த மையத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் பவானி.

வழக்கமான வசவுகள்

அன்று அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு வாள்வீச்சு மையத்துக்கு வந்த பவானி தேவி, 16 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்காக வாளைப் பிடித்து உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் விளையாடுவார் என்று யாரும் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், வாள்வீச்சு விளையாட்டை ஆசை ஆசையாகக் காதலித்த பவானி தேவி, இந்தச் சாதனையை நிகழ்த்திக்காட்ட வேண்டுமென்று தவம் கிடந்தார் இப்போது அந்தச் சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். இந்த உயரத்தை அடைவதற்குள் பவானி தேவி சந்தித்த மேடு, பள்ளங்கள் மிக அதிகம்.

2004-ம் ஆண்டில் முதன் முதலாகத் தேசிய சப்ஜூனியர் பிரிவில் பங்கேற்றுத் தங்கப் பதக்கத்தை வென்று தன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கிய பவானி, தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்தார். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த நிலையில், கல்லூரிப் படிப்புக்காகக் கேரளத்துக்குச் சென்றார். பெண் பிள்ளையை இப்படித் தனியாக அனுப்பலாமா என்கிற வழக்கமான விமர்சனங்கள் எழவே செய்தன. இன்னொரு பக்கம் கேலி, கிண்டல் செய்யவும் ஆட்கள் இருந்தனர். இதுபோன்ற ஏச்சுகளும் பேச்சுகளும் பவானி தேவியை இன்னும் வலிமையாக்கின.

சறுக்கலுடன் தொடக்கம்

கேரளத்தில் விளையாட்டுக்கு அதிக நிதி உதவி கிடைக்கும் என்பதால் அங்கே சென்றார் பவானி. அங்கேயே கல்லூரிப் படிப்பை முடித்து, கேரள அணி சார்பாகத் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவந்தார். மீண்டும் சென்னைக்குத் திரும்பி முதுகலை படித்தபோது, நிதி உதவி கிடைக்காமல் பல வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திண்டாடும் சூழல் பவானிக்கு ஏற்பட்டது. ஆனால், அவருடைய அம்மா அளித்த ஊக்கம்தான் பவானியை அந்த விளையாட்டில் அவரை நீடிக்க வைத்தது. அந்தக் காலகட்டத்தில் கடன் வாங்கி போட்டிகளில் பங்கேற்று வந்தார் பவானி. வாள்வீச்சு விளையாட்டுக்கு இங்கே அந்த அளவுக்குதான் மதிப்பு.

தேசிய அளவில் வாள்வீச்சில் சாதனை புரிந்த பவானி தேவி, சர்வதேச அளவில் காலடி எடுத்து வைத்தபோது, தொடக்கமே அவருக்குச் சறுக்கல்தான். துருக்கியில் நடைபெற்ற தொடரில் 3 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக, ‘பிளாக் கார்டு’ காட்டப்பட்டு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார் பவானி தேவி. தொடக்கத்தில் பல தோல்விகளை எதிர்கொண்டபோதும், கொஞ்சமும் துவண்டு போகாமல் எப்படியும் வாள்வீச்சில் வெற்றிக் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். அதற்காகக் கடுமையாக உழைத்தார்.

வரிசையாகப் பதக்கங்கள்

வாள்வீச்சில் ஒன்பது முறை இந்தியாவின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற பவானி, 2009-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் முதல் முறையாக வெண்கலம் வென்று சர்வதேச அரங்கில் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து 2010-ல் பிலிப்பைன்ஸில் ஆசிய வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலம், 2012-ல் ஜெர்ஸி காமன்வெல்த்தில் வெள்ளி- தங்கம், 2014-ல் பிலிப்பைன்ஸில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, 2015-ல் மங்கோலியாவில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் எனத் தொடர்ச்சியாகப் பல சர்வதேசத் தொடர்களில் பதக்கம் வென்று வாள்வீச்சில் இந்தியாவின் முதல் வீராங்கனையாக உருவெடுத்தார்.

2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் எப்படியும் இடம் பிடிக்க வேண்டும் என்று தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார் பவானி. ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக சீனாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியான ஆசியா - ஓசியானாவின் காலிறுதியில் தோல்வியைத் தழுவினார். இதனால், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

நிறைவேறிய லட்சியம்

தன்னுடைய முயற்சி தோல்வியடைந்தது பற்றி பவானி தேவி இப்படி கூறியிருந்தார்: “வெற்றி பெறுகிறவரை முயல வேண்டும். 2016 ரியோ ஒலிம்பிக் எனக்கானது அல்ல. அதற்காக 2020 ஒலிம்பிக் போட்டிக்கு நான் தகுதி பெறமாட்டேன் என்று அர்த்தம் கிடையாது. முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன்”.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்னதுபோல இப்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார்.

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவது மிகவும் சவாலானது. வாள்வீச்சில் தகுதி பெற வேண்டும் என்றால், தொழில்முறைப் பயிற்சி அவசியம். 2016 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற முடியாமல் போன பிறகு இதை உணர்ந்த பவானி தேவி, இத்தாலியில் தங்கித் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். இத்தாலி பயிற்சியாளர் நிக்கோலா ஜெனாட்டியிடம் ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் வாள்வீச்சில் இறக்கிவருகிறார் பவானி.

அந்த நாளுக்காக

உலகத் தரவரிசையின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆசியா-ஓசியானா பிரிவில் இரு இடங்கள் இருந்தன. தற்போது வாள்வீச்சு உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் இருக்கும் பவானி தேவி அவற்றில் ஓரிடத்தை உறுதிப்படுத்தி, ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான இடத்தைப் பிடித்துவிட்டார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். கரோனா பெருந்தொற்றால் ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், தற்போது பயிற்சிக்காக ஜெர்மனிக்குப் பறந்துவிட்டார் பவானி.

ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பாட்மிண்டன் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பலர் தனி நபர் பிரிவில் உலக அளவில் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் பவானி தேவியின் வாள்வீச்சும் சேரும் நாளுக்காக ஒட்டு மொத்த தேசமும் காத்திருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x