Last Updated : 28 Dec, 2015 10:41 AM

 

Published : 28 Dec 2015 10:41 AM
Last Updated : 28 Dec 2015 10:41 AM

டாடாவுக்கு கைகொடுக்குமா ஜிகா!

வாகன உற்பத்தியில் டாடா மோட்டார்ஸுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இருந்தாலும் கார் விற்பனையில் இன்னமும் இந்நிறுவனத்தால் முதலிடத்துக்கு முன்னேறவே முடியவில்லை.

மலிவு விலைக்காரான நானோ சந்தைக்கு வந்தால் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்ற ரத்தன் டாடாவின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது.

மலிவு விலைக் கார் என்று விளம்பரப்படுத்தியதுதான் இந்தக் கார் மக்களிடையே எடுபடாமல் போனது என்று ரத்தன் டாடாவே கூறினார். பிறகு பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாடல்களில் நானோ வந்தாலும் விற்பனை அதிகரிக்கவேயில்லை.

ஒரு கட்டத்தில் நானோ தயாரிப்புகளை நிறுத்திவிடலாமா என்ற நிலைக்கு டாடா நிறுவனம் வந்துவிட்டது. கடும் போராட்டத்துக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வெளியேறி குஜராத் மாநிலம் சனந்த் நகரில் நானோ தயாரிப்புக்கென உருவாக்கப்பட்ட ஆலையில் தற்போது புதிய ரக கார் தயாராகிவருகிறது.

புத்தாண்டில் சந்தையைக் கலக்க வரும் இந்தக் காருக்கு ஜிகா (Zica) எனப் பெயரிட்டுள்ளனர். ஏற்கெனவே இதற்கு கைட் (Kite) என செல்லப் பெயர் வைக்கப்பட்டு உருவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன.

நிறுவனத்தின் பிரபலமான தயாரிப் பான இண்டிகாவுக்கு அடுத்தபடியாக ஹாட்ச்பேக் பிரிவில் ஜிகாவின் வரவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என டாடா மோட்டார்ஸ் உறுதியாக நம்புகிறது. கடந்த காலங்களில் நிறுவனம் செய்த தவறுகளிலிருந்து கற்ற பாடத்தின் விளைவாக அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு, தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் சந்தையில் வரவேற்பைப் பெறும்போதுதான் டாடா மோட்டார்ஸ் சரியான பாதையில் பயணிக்கிறது என்பது நிரூபணமாகும். 1999-ம் ஆண்டு கார் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டது. இந் நிறுவனம் பல்வேறு கார்களைத் தயாரித்தபோதிலும் மக்களின் எதிர்பார்ப்புகளைக் கவனிக்க நிறுவனம் தவறிவிட்டது. இதன் வெளிப்பாடாகவே டாடா தயாரிப்புகள் போதிய அளவு விற்பனையாகவில்லை.

ஆனால் ஜிகா, இவையனைத்தையும் மாற்றிவிடும் என்று கார் குறித்த விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இண்டிகா காரைப் பொறுத்தமட்டில் இந்நிறுவனம் அவ்வப்போது தேவை யான மாற்றங்களைச் செய்தது. இதன் விளைவாக இன்றளவும் சந்தையில் இந்த பிராண்டுக்கு தனி இடம் உள்ளது.

இருந்தாலும் ஹூண்டாய், மாருதி சுஸுகி போன்ற பிற தயாரிப்பு நிறுவனங்களுக்கு இணையாக தன்னை நவீனப்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் டாடா மோட்டார்ஸ் தயாரிப்பு மீதான குற்றச்சாட்டாகும்.

பின்னாளில் வந்த போல்ட் மற்றும் ஜெஸ்ட் கார்கள் இதே பிரிவில் உள்ள பிற நிறுவன கார்களை விட மிகச் சிறப்பாக இருந்தபோதிலும் அவை பெருமளவில் விற்பனையாகவில்லை. விளம்பரப்படுத்துவதில் நிறுவனம் போதிய முக்கியத்துவம் அளிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது. இவையெல்லாம் டாடா மோட்டார்ஸ் மீதான தவறான கற்பிதத்தை சந்தையில் உருவாக்கியது. கடந்த சில ஆண்டுகளாக நிறுவனத் தயாரிப்புகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் ஜிகா-வின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எத்தனித்துள்ளது டாடா.

புணேயில் உள்ள டாடா லேக் ஹவுஸில் கடந்த வாரம் ஆரஞ்சு நிறத்தி லான ஜிகா கார்கள் அணிவகுத்திருந்தன. இதைப் பார்க்கும் வாய்ப்பு வெகுசில கார் விமர்சகர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்த கருத்துகள் இந்தக் காரின் மீது மிகுந்த அபிப்ராயத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காரின் வெளிப்புறத் தோற்றம் அனை வரையும் கவரும் விதமாக இருந்தது. இந்தக் காரின் முன்பகுதியில் உள்ள கிரில் சிரிப்பதைப் போல அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வடிவமைப்பு முந்தைய டாடா நிறுவன கார் எதிலும் இருந்தது கிடையாது.

தேன் அடை போன்ற பின்னலைக் கொண்ட முன்புற கிரில் பின் பகுதியில் மிகச் சிறப்பாக அழகாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள், சக்கர வளைவுகள் ஆகியன இந்தக் காரின் ஒட்டுமொத்த தோற்றத்தையே மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியது.

பொதுவாக டாடா நிறுவன கார் டயர்களுக்கும் அதன் மட்கார்டு வளைவுகளுக்கும் அதிக இடைவெளி இருக்கும். இது காரின் தோற்றப் பொலிவை குறைக்கும். ஆனால் அந்தக் குறையும் இதில் நீக்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறம் வெகு நேர்த்தி யாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல அதைவிட கூடுதல் கவனத்தோடு உள்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக அழகாக அதேசமயம் சிறிய வடிவிலான ஸ்டீரிங் ஒன்றே நேர்த்தியைப் பறைசாற்றும். உயரத்திற்கேற்ப இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இதில் உள்ளது. பொதுவாக அதிக விலைகொண்ட கார்களில் மட்டும்தான் இத்தகைய வசதி இருக்கும். தற்போது முதல் முறையாக இந்த வசதி ஜிகாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்புற டேஷ்போர்டு பியானோ போன்ற வடிவில் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முன்புறத் தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக யுஎஸ்பி, புளூடூத் வசதி, 8 ஸ்பீக்கர்களில் ரம்மியமான இசை மற்றும் ஜூக் கார் ஆப் (செயலி) உள்ளது. இது 10 போன்களுடன் இணையக்கூடியது.

மிக சவுகர்யமான பயணத்துக்காக இடவசதியை அளித்துள்ளது. நீண்ட பயணம் சென்றாலும் சோர்வடையாத அளவுக்கு 2400 மி.மீ விட்டமுடைய சக்கரம் உள்ளது. அதேபோல இடமும் மற்ற மாடல்களைவிட விஸ்தாரமாக உள்ளது.

1.2 லிட்டர் 3 சிலிண்டர் அலுமினியத் தாலான இன்ஜின் உள்ளது. முதல் முறையாக முழுவதும் அலுமினியத் தாலான இன்ஜினை டாடா பயன்படுத்தியுள்ளது. இது காரின் எடை கணிசமாகக் குறைய வழியேற்படுத்தி யுள்ளது. இதனால் காரின் செயல்திறன் 85 பிஎஸ், 6000 ஆர்பிஎம், 114 நானோமீட்டர் டார்க், 3,500 ஆர்பிஎம் திறன் கொண்டது. இது சாலைகளில் மிகச் சிறப்பாக செயல்பட வழிவகுக் கிறது. இதேபோல டீசல் காரும் 1.05 லிட்டர் இன்ஜினோடு வெளிவந் துள்ளது. இதில் மிகச் சிறப்பான பிரேக்கிங் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. 80 கி.மீ. வேகத்தில் சென்று சடன் பிரேக் போட்டாலும் கார் அப்படியே நிற்கும். உள்ளிருப்பவர்களுக்கு பெரிய ஜெர்க் இருக்காது. அந்த அளவுக்கு பிரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது.

டிரைவருக்கும் முன்புற பயணிக்கும் உயிர் காக்கும் ஏர் பேக் வசதி உள்ளது. சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், விரைவு உணர் தானியங்கி கதவு மூடும் வசதி, கிளட்ச் லாக், இரவு பகல் கண்ணாடி, இம்மொபிலைசர் ஆகியன உள்ளன. புதிய கார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி விரைவில் சந்தைக்கு வருகிறது ஜிகா. இதன் விலை ரூ. 3.60 லட்சம் முதல் ரூ. 5.60 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

டாடா மோட்டார்ஸை பல மைலுக்கு இழுத்துச் செல்லுமா ஜிகா என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x