Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

ஓடிடி உலகம்: இழைகள் பிசிறும் இருள்

பெருந்தொற்று சவால்களுக்கு மத்தியிலும் சுவாரசியமான திரைப்படங்களை மலையாளத் திரையுலகம் தொடர்ந்து வழங்கிவருகிறது. அந்த வரிசையில் கடந்த வாரப் புதுவரவு ‘இருள்’. ஃபஹத் ஃபாசில், சௌபின் ஷாகிர், தர்ஷனா நடிப்பில் நேரடித் திரைப்படமாக நெட்ஃபிளிக்ஸில் ‘இருள்’ வெளியாகி உள்ளது.

சௌபின் ஷாகிர் பெரிதாய் சோபிக்காத தொழிலதிபர். ‘இருள்’ என்கிற தலைப்பில், ஒரு சீரியல் கில்லரை மையமாகக் கொண்ட மர்ம நாவலையும் அப்போதுதான் எழுதி இருக்கிறார். கூடவே அழகான வழக்கறிஞரான தர்ஷனாவையும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். தர்ஷனாவின் பணி நெருக்கடியும் செல்போன் அழைப்புகளும் காதலர்கள் மத்தியில் ஊடலை உருவாக்குகிறது.

எனவே ரம்மியமான ஒரு தொலைதூரப் பயணம் மூலம் ஊடலைத் தணிப்பதென்று இருவரும் ஒருமனதாக முடிவுசெய்கிறார்கள். செல்போனைத் தலைமுழுகிவிட்டு, கும்மிருட்டு மழையில் இளமையின் தவிப்புகளோடு இளஞ்சோடியின் பயணம் தொடங்குகிறது. வழியில் பழுது காரணமாக அடர்ந்த தேயிலை எஸ்டேட் மத்தியில் கார் கழுத்தறுக்க, உதவிக்காக அருகில் தென்பட்ட மர்ம மாளிகையின் கதவைத் தட்டுகிறார்கள்.

கதவைத் திறப்பவர் ஃபஹத் ஃபாசில். சௌபின் - தர்ஷனா ஜோடியை வரவேற்று அவர் உபசரிப்பதன் ஊடே, இனம்புரியாத திகிலின் ரேகைகள் அங்கே படியத் தொடங்குகின்றன. மூவர் மத்தியிலான புதிரான உரையாடலும் தொடர்கிறது. இதற்கிடையில் மின் இணைப்பு அறுபட, அந்த இருள் மாளிகையின் நிலவறையில் ஓர் இளம்பெண் கொலையுண்டிருப்பது வெளிச்சத்துக்கு வருகிறது.

அங்கிருப்போரில் ஒருவர்தான் கொலையை செய்திருக்கிறார் என்பதுடன் கொலையாளி தொடர் கொலைகளை நிகழ்த்துபவன் என்பதும் தெரியவருகிறது. தொடரும் நிகழ்வுகளில் சீரியல் கில்லர் யார் என்பதைக் கண்டடைவதில் ஏற்படும் மோதலும், அதில் விழும் புதிர் முடிச்சுகளின் அவிழ்ப்பும் அடுத்தடுத்த காட்சிகளில் நிகழ்கின்றன.

கதையளவில் ஈர்த்தாலும் அதைச் சொல்லிய விதத்தில் சற்று சொதப்பி வைத்திருப்பதுதான் ‘இருள்’ திரைப்படத்தின் சிக்கல். அசலான நடிப்பை வழங்கும் கலைஞர்கள், இருளில் நகரும் காட்சிகளை அபாரமாய் பதிவு செய்த ஒளிப்பதிவு, இருக்கை நுனியில் அமர்த்தும் பின்னணி இசை எல்லாம் இருந்தபோதும் திரைப்படத்தின் பாதியில் தொடங்கும் தொய்வு, தெளிவின்மை காரணமாக இருளின் இழைகள் பிசிறடிக்கத் தொடங்குகின்றன.

ஆனபோதும் காட்சிக்கு காட்சி எகிறும் ஃபஹத் ஃபாசில், சௌபின் இடையிலான அசுரப் போட்டி, அவர்களுக்கு ஈடுகொடுக்கும் தர்ஷனாவின் நடிப்பு ஆகியவற்றை ரசிக்கப்பதற்காக இருளை தாராளமாய் தரிசிக்கலாம். சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலாக ஒரே ஷாட்டில் நீளும் கேமரா அலைபாய்தல், ஒன்றின் மீதமர்ந்த மற்றொன்றாய் மூவரின் உரையாடல்களும் ஒரு சேர நீடிக்கும் சவாலான காட்சிகள் போன்றவையும் ரசிக்கத்தக்கவை. கட்டுண்ட நிலையிலும் விநோதமாய் தரையில் ஊர்வது, மர்மங்களின் நிழல் படிந்த கண்களால் மிரட்டுவது என ஃபஹத் ஃபாசில் நடிப்பால் மூவரில் முந்துகிறார். அறிமுக இயக்குநர் நசீஃப் யூசுப் சற்று அவகாசம் தந்து திரைக்கதையை பாவித்திருந்தால் இருள் இன்னமும் ஈர்த்திருக்கும்.

சார்லஸ் சோப்ராஜ் கதை

‘இருள்’ போன்ற கற்பனை கதைகளைவிட சீரியல் கில்லர் குறித்த நிஜக் கதைகள் உறைய வைப்பவை. இந்தியப் பின்னணியில் பிறந்து, கற்பனைக்கும் எட்டாத குற்ற நடவடிக்கைகளால் உலகையே கிடுகிடுக்க வைத்த சார்லஸ் சோப்ராஜின் கதையைத் தழுவி உருவாகியிருக்கும் ‘த செர்பன்ட்’(The Serpent) ஓர் அசத்தல் உதாரணம். வலைத்தொடராக கடந்த வாரம் முதல் நெட்ஃபிளிக்சில் காணக் கிடைக்கிறது.

ஹிப்பி கலாச்சாரத்தில் ஊறிய ஐரோப்பியப் பயணிகளை குறிவைத்து, எழுபதுகளின் மத்தியில் தெற்காசிய நாடுகளில் சார்லஸ் சோப்ராஜ் நடத்திய நர வேட்டைதான் கதை என்றபோதும், ‘பிபிசி ஒன்’, ’நெட்பிளிக்ஸ்’ இணைந்து தரமானக் கூட்டுத் தயாரிப்பாக ‘த செர்பன்ட்’ வலைத்தொடரை சிறப்பான ஓடிடி படைப்பாகத் தந்துள்ளன.

வெறுக்கத்தக்க கொலைக் குற்றவாளி தனது கொடூரத்தை மறைத்துக்கொண்டு, சமூகத்தில் மதிப்பான வலைப்பின்னலை உருவாக்குவது, தனக்கான மனித இரைகள் முதல் கூட்டாளிகள் வரை மனங்களை வசியப்படுத்தி சாதிப்பது என நுட்பமான ஓட்டங்களில் வலைத்தொடர் விறுவிறுப்பாகப் பயணிக்கிறது.

வெறுமனே குற்றச் சம்பவங்களின் பீதியுட்டும் தொகுப்பாக அல்லாது, அவற்றைச் சூழ்ந்த மனித மனங்களின் பல்வேறு திசைகளில் நகரும் ஊசலாட்டங்களை பதிவுசெய்த வகையில் வலைத்தொடர் ரசிக்க வைக்கும். பாங்காக்கைக் கடக்கும் செழிப்பான பயணிகளிடம் தயாள குணமுடைய வைர வியாபாரியாக அறிமுகமாகி, உடலை மெல்ல முடக்கும் மருந்துகளை ரகசியமாய் புகட்டி அவர்களை ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கிறான் சார்லஸ் சோப்ராஜ். பின்னர் அந்த அப்பாவிகளின் பாஸ்போர்ட் அடையாளங்களில் உலக நாடுகளில் வலம் வந்து புதிய இரைகளைத் தேடுகிறான்.

இடையில் தங்கள் நாட்டு பயண ஜோடி தலைமறைவானதை விசாரிக்கத் தலைப்படும் டச்சு தூதரக அதிகாரி ஒருவர், தனது அதிகாரங்களுக்கு அப்பால் தலையைத் தந்து சார்லஸ் பின்னணியை அம்பலப்படுத்துகிறார். அங்கு தொடங்கி பாங்காக் போலீஸார் பிடியிலிருந்து தப்பி, இந்தியா, பிரான்ஸ் என சரியும் சாம்ராஜ்யத்தை மீட்க முனைவது முதல் சிறைவாசம் வரையிலான சார்லஸ் சோப்ராஜ் சரிதத்தை தலா ஒரு மணி நேரத்துக்கு நீளும் எட்டு அத்தியாயங்களில் ‘த செர்பன்ட்’ வலைத்தொடர் பதைபதைப்புடன் பின்தொடர்கிறது.

ஆழமாய் அடக்கி வாசிக்கும் தாஹர் ரஹிம் நடிப்பு, சார்லஸ் கதாபாத்திரத்துக்கு மெருகூட்டுகிறது. ஜென்னா கோல்மன், எல்லி பாம்பர் உள்ளிட்டோர் உடன் நடிக்க டாம் ஷாக்லாண்ட், ஹான்ஸ் ஹெர்பாட்ஸ் இணைந்து இயக்கி உள்ளனர். சார்லஸ் சோப்ராஜுக்காக மட்டுமன்றி தரமான ‘க்ரைம் டிராமா’ வகையறாவில் ஆர்வம் கொண்டோரும் சற்று நேரம் ஒதுக்கி ‘த செர்பன்ட்’ வலைத்தொடரை ரசிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x