Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

உணர்ச்சிகளால் ஒரு சர்க்கஸ்! - ஷீலா ராஜ்குமார் நேர்காணல்

‘திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கக் கூடிய படம்’ என்று விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘மண்டேலா’. தேர்தல் அரசியலில், வாக்கின் வலிமை பற்றி பாடம் நடத்தாமல், அரங்கம் அதிரும் சிரிப்பொலிக்கு நடுவே, ‘இதில் வரும் மண்டேலா நான் தானே!’ என பெரும்பாலான பார்வையாளர்களை உணரவைத்திருக்கிறது இந்தப் படம். அறிமுக இயக்குநர் மடோன்னே அஸ்வின் இயக்கியிருக்கும் இதில், கதாநாயகனாக நடித்திருப்பவர் யோகிபாபு. அவருக்கு ‘மண்டேலா’ என்கிற பெயரைச் சூட்டி, சுயமரியாதை மிக்க முழு மனிதனாக அவரை வார்த்தெடுக்கும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் முத்திரை நடிப்பை வழங்கியிருக்கிறார் இந்தப் படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

‘டுலெட்’ படத்துக்கு முன்பு ஷீலா யார், எங்கிருந்து வந்தார், அவருடைய பின்னணி என்ன என்பதைப் பகிருங்கள்..

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சவேரியார்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். ஜெயங்கொண்டம் நகரில் உள்ள புனித பாத்திமா உறைவிடப் பள்ளியில்தான் படித்தேன். பள்ளியில் மாறுவேடப் போட்டி, நடனப் போட்டியில் கலந்துகொள்வது பிடிக்கும். ஈஸ்டர் திருநாளில் நடத்தப்படும் இரவு வழிபாட்டில், கல்லறையிலிருந்து இயேசு உயிர்த்தெழுந்து வரும் காட்சியை விடுதியில் தங்கிப் பயிலும் நாங்கள்தான் நடித்துக் காட்டுவோம். இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறையின் இருபுறங்களில் நிற்கும் சம்மனசுகளில் ஒன்றாக சிஸ்டர்கள் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஏங்குவேன்.

அதேபோல், கிறிஸ்துமஸ் வழிபாட்டின்போது, மரியாள், யோசேப்பு, குழந்தை இயேசுவைப் பிரதிபலிக்க ஆலயத்தில் அமைக்கப்படும் குடில் முன்பாகத் தோன்றுவோம். அதில் நான் மரியாளாக இருக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்திருக்கிறது. அதற்காகச் சிறு வயதில் மனமுருகப் பிரார்த்தனை செய்திருக்கிறேன். இப்படித்தான் நடிப்பின் மீதான ஆர்வம் அரும்பியது. நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவே மடியில் வந்து விழும் என்று சொல்வார்கள். ‘கும்பளங்கி நைட்ஸ்’ திரைப்படத்தில் ஒரு குடும்பத்தின் காவல் தேவதையாக என்னைச் சித்தரித்தபோது, சிறு வயதில் மரியாளாகத் தோன்றிய நினைவுகள் வந்து அலைமோதின.

வெற்றியும் வாய்ப்புகளும் அத்தனை எளிதாக வசப்பட்டுவிடுவதில்லை.. அதை நோக்கிய ஓட்டத்தில் எப்படி மாற்றிக் கொண்டீர்கள்?

கனவுகள் ஒரு நாள் நனவாகும் எனக் கனவை மட்டுமே வளர்த்துக்கொண்டிருந்தால், இடைப்பட்ட தூரத்தைக் கடந்துவருவது இயலாத ஒன்று என்கிற புரிதல் சிறுவயதிலேயே உண்டு. எங்கள் ஊரில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டால் திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். என்னுடைய பெற்றோர், அதிலிருந்து எனக்கு விலக்களித்தார்கள்.

எனது கலையார்வத்தைக் கண்ட எங்கள் ஆலயப் பங்கின் அருட்தந்தையர் சிபாரிசில் திருச்சி கலைக்காவேரி கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். இளங்கலை, முதுகலை இரண்டிலும் பரத நாட்டியம் பயின்றேன். பின்னர், திருச்சியில் நடிப்புப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்காக வந்த குழுவில் தம்பிச் சோழனை (ராஜ்குமார்) சந்தித்தேன். கலையே வாழ்க்கைத் துணையையும் கொண்டுவந்து சேர்த்தது. நாங்கள் இல்லற வாழ்வில் கரம் பற்றினோம்.

கணவர் வழியாகக் கூத்துப்பட்டறையின் அறிமுகம் கிடைத்தது. பரத நாட்டியம், நாட்டார் நடனக் கலைகள், நடிப்பு பயிற்சிக்கு அப்பால், நவீன நாடக வடிவமும் அரங்க மொழியுடன் கூடிய உடல்மொழியும் குரல்மொழியும் ஒரு நடிகரை உருவாக்குவதில் எத்தனை தாக்கம் செலுத்தக்கூடியவை என்பதைக் கற்றுணர்ந்தேன். இந்த இடத்தில் எங்கள் கல்லூரிக்கு அப்போது வருகை தந்த நடிகர், நாடகக் கலைஞர் சண்முகராஜாவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நடிகராக இருக்க இலக்கிய வாசிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். கூத்துப்பட்டறை ந.முத்துசாமியின் ‘இங்கிலாந்து’ என்கிற நாடகத்தில் நடித்திருந்த சமயத்தில் ஆனந்த விகடனில் என்னுடைய பேட்டி வெளியாகியிருந்தது. அதைப் படித்த இயக்குநர் அறிவழகன், அவருடைய ‘ஆறாது சினம்’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு செழியன் சாரின் ‘டுலெட்’ என்னைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிட்டது. ‘டுலெட்’ படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன்.

ஒரு நடிகருக்கு இலக்கிய வாசிப்பு அவசியம் என்று கூறினீர்கள். வாசிப்பு, நடிப்பின்போது எப்படி உதவுகிறது என்பதைக் கூறுங்கள்?

வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டேயிருப்பதுதான் கலை என்று நினைக்கிறேன். கலையில் அதிகமாகப் பங்கும்பெறும்போது கற்றுக்கொள்வதும் அதிகரிக்கிறது. அதேபோல் வாசிப்பு என்பதே அறிதல்தான். கதாபாத்திரங்களை வாசிக்கும்போது அவற்றின் அடிப்படையான குணங்கள், எதிர்முரண்கள், உள்முரண்கள் அனைத்தும் நம் மனதின் அடியாழத்தில் நம்மையும் அறியாமல் பதிந்துவிடுகின்றன. நாம் வாசித்து அறிந்த கதாபாத்திரத்துக்கு நெருக்கமாக ஒரு கதாபாத்திரத்தை மேடையிலோ, கேமரா முன்பாகவோ வெளிப்படுத்த வாய்ப்பு அமையும்போது, மனத்தின் சேமிப்பிலிருந்து நாம் இயக்கப்படுகிறோம் என்று நம்புகிறேன்.

‘அழகிய தமிழ் மகள்’ தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

மிக முக்கியமான அனுபவம். ‘ஜீ தமிழ்’ குழுவுக்கு என் நன்றி. தொடருக்கான நடிப்பில், ஒரே நாளில் 6 முதல் 8 காட்சிகளில் நடிக்கக் கடும் உழைப்பு தேவைப்படும். முதல் காட்சியில் மிக மகிழ்ச்சியாக நடித்து முடித்திருப்பீர்கள்; தடாலடியாக அழுது நடிக்க வேண்டிய காட்சியை அடுத்து எடுப்பார்கள். சீரியலில் நடிப்பது அத்தனை எளிதல்ல, நடிகருக்கு உணர்ச்சிகளால் சர்க்கஸ் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலும் சீரியல் கதாநாயகிகள் தங்கள் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசமாட்டார்கள். அனுபவம் வேண்டும் என்பதற்காக நானே எனக்கு டப்பிங் பேசி, அதிலும் நிறையக் கற்றுக்கொண்டேன். அந்தத் தொடரில் 250 எபிசோட்களில் நடித்து முடித்திருந்தபோதுதான் ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.

தற்போது ‘மண்டேலா’ அனுபவம் எப்படி அமைந்தது?

தாம் சுரண்டப்படுகிறோம் என்பதே தெரியாமல், தனது சொந்த அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கிற ஒரு சாமானியனுக்கு அவனுடைய அடையாளத்தை மீட்டுத் தருகிற கதாபாத்திரம் என்னுடையது. கதையைக் கேட்டதுமே சிலிர்த்துப்போனேன். என்னுடைய சினிமா பயணத்தின் தொடக்கத்திலேயே ‘டுலெட்’, ‘மண்டேலா’ போன்ற படங்கள் அமைந்தது அபூர்வம். ‘மண்டேலா’வுக்காக குவியும் பாராட்டுகளால் திக்குமுக்காடி நிற்கிறேன். இதற்காக இயக்குநர் மடோன்னே அஸ்வினுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.

தற்போது நடித்துவரும் படங்கள்?

இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டேன். அதில் ஒன்று அறிமுக இயக்குநர் சம்பத்குமார் இயக்கியிருக்கும் ‘மாயத் திரை’. கதைப்படி ஒரு திரையரங்குக்குள் 30 பேய்கள் வசிக்கின்றன. நானும் அதில் ஒரு பேய். இது வழக்கமான பேய் படம் அல்ல. குலதெய்வ வழிபாட்டை இயக்குநர் இதில் முன்னிறுத்தியிருக்கும் விதம், பார்வையாளர்களை அசரவைக்கும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பல நூறு படங்களுக்கு காஸ்டியூமராகப் பணிபுரிந்த சாதனையாளரான சாய் அண்ணன்.

அடுத்து ‘ஜோதி’ என்கிற பெண் மையப் படம். இதில் ’எட்டு தோட்டாக்கள்’ வெற்றி, ‘ராட்சசன்’ படத்தில் வில்லனாக நடித்த கிறிஸ்டோபர் சரவணன், ‘மைம்’ கோபி என பலர் இணைந்து நடித்திருக்கிறோம். இதுவொரு சமூக த்ரில்லர். இவை தவிர ஒரு மலையாளப் படம், தொடக்க நிலையில் இருக்கும் பல தமிழ்ப் படங்கள் என சிறகடித்துக்கொண்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x