Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கல்விக்கு அருளும் கருப்பறியலூர் ஈசன் :

ஒரு சமயம், இலங்கை வேந்தன் ராவணன் மகன் மேகநாதன் புஷ்பக விமானத்தில் சென்று கொண்டிருந்தான். அவனது விமானம் ஓரிடத்தில் தடைப்பட்டு நின்றது.

அவன் அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது விமானத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு சிவாலயம் இருப்பது தெரியவந்தது. உடனே அவன் அச்சிவாலயத்துக்குச் சென்று அங்குள்ள சூரியதீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டான். வழிபாட்டின் பயனாகத் தடை நீங்கி விமானம் பறக்கத் தொடங்கியது. தன்னுடனேயே சிவலிங்கத்தை எடுத்துச் செல்ல முயன்ற மேகநாதன், தனது உடல் வலிமையால் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்றான். அவனால் அச்சிவலிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.

உடல் சோர்வுற்று மயக்கமடைந்து அங்கேயே விழுந்தான். தனது மகன் மயக்கமடைந்து விழுந்ததை அறிந்த ராவணன் உடனே அச்சிவாலயம் சென்று சிவனிடம், தன் மகன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்படி வேண்டினான். அவன் வேண்டுதலுக்குச் செவிசாய்த்த சிவன், மேகநாதனுக்குச் சுயநினைவு வரச்செய்து அருளினார். இதனால் இறைவனுக்குக் குற்றம் பொறுத்த நாதர் என்று பெயர் வந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இப்புராண வரலாற்றுடன் தொடர்புடைய தலம் திருக்கருப்பறியலூர் எனும் தலைஞாயிறு ஆகும்.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 27ஆவது தலமாகவும் ஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குவது திருக்கருப்பறியலூர் ஆகும்.

குழந்தைப் பேறருளும் ஈசன்

விசித்திராங்கன் என்ற சோழ மன்னன் தன் மனைவி சுசீகையுடன் குழந்தை வரம் வேண்டி இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்ட தாகவும் நம்பிக்கை நிலவுகிறது. குழந்தை பிறந்தபின்னர் மனம் மகிழ்ந்த மன்னன் இந்த ஆலயத்தை எழிலுற வடிவமைத்துக் கட்டினான் என்று கூறப்படுகிறது. இன்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

உயிர்களின் குற்றங்களை எல்லாம் பொறுத்தருள்பவர் எல்லாம் வல்ல ஈசன். இத்தலத்து இறைவனும் நம்முடைய குற்றங்களைப் பொறுத்தருளும்  குற்றம்பொறுத்த நாதராக அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் ஸ்ரீகோல்வளைநாயகி. சுந்தரர் தம் தேவாரத்துள், “கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல் வளையால் அவளோடும்” என்று பாடியுள்ளார்.

இத்தலத்தில் அருளும் நடராஜப்பெருமான் திருவுருவம் மிகப்பழமையான தோற்றத்தோடு மிளிர்கிறது. மேலும் சித்தி விநாயகர், பைரவர், கஜலெட்சுமி, சனிபகவான், வள்ளி தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகளும் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் தன் மனைவியுடன் வீற்றிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. கொகுடிக்கோயில் எனும் கட்டடக்கலை பாணியில் அமைந்த ஒரே தலம் இதுவாகும்.

கல்விக்கு அருளும் கடவுள்

“கற்றவன் இருப்பது கருப்பறியலூரே” என்று ஞானசம்பந்தரும், “கற்றோர்தம் இடர்தீர்க்கும் கருப்பறியலூர்” என்று சுந்தரரும் இத்தலத்து இறைவனைப் போற்றிப்பாடியுள்ளார்கள். இத்திருத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதியில், “சுற்றமொடு’ எனத் தொடங்கும் தேவாரப்பாடலைப் பாராயணம் செய்து வந்தால் கல்வி அறிவு மேம்படும் என்பது நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x