Published : 08 Apr 2021 03:12 am

Updated : 08 Apr 2021 09:04 am

 

Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 09:04 AM

பால் ப்ரண்டனை வழிநடத்திய மகாபெரியவர்

mahaperiyavar

எழுத்தாளர் பால் ப்ரண்டன், மகாபெரியவருடன் நடத்திய சந்திப்பென்பது பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. மகாபெரியவரின் அன்புக்கு தடையே கிடையாது. பால் ப்ரண்டனில் அவர் ஒரு உண்மையான சத்தியத் தேடல் நடத்துபவனைப் பார்த்ததால் அவரைச் சந்திப்பதற்கும் ஒப்புக்கொண்டார். அத்துடன் பால் ப்ரண்டனுக்கு திருவண்ணாமலையில் வசிக்கும் ரமணரை நோக்கி ஆற்றுப்படுத்தியதும் மகாபெரியவர்தான். பால் பிரண்டனை மகாபெரியவர் சந்தித்த உரையாடலிலிருந்து சில பகுதிகள்.

‘எ சர்ச் இன் சீக்ரெட் இந்தியா' நூலில் பால் ப்ரண்டன் இந்த அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தச் சந்திப்புக்கு உதவியவர் பத்திரிகையாளர் வெங்கட்ரமணி. காஞ்சி மகாபெரியவாள் என்று அன்புடன் அழைக்கப்படும்  சந்திரசேகரேந்திர சரஸ்வதி குறித்து தி இந்து குழுமம் சார்பில் வெளியாகியுள்ள ‘எம்பாடிமெண்ட் ஆப் ட்ரூத்’ என்ற சிறப்பு மலரில் வந்த கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.


ப்ரண்டன் : யோகாப்பியாசத்தில் சித்தி அடைந்த ஒரு நபரை நான் சந்திக்க விரும்புகிறேன். அவர் என்னுடன் பேசக்கூட வேண்டியதில்லை. நான் எனது சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதை அடைய வந்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம். இந்த விஷயத்தில் நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்.

மகாபெரியவர்: மேம்பட்ட யோக நிலையை அடைவதற்கான உங்களது லட்சியத்தில் எந்தத் தவறும் இல்லை. உங்களது அர்ப்பணிப்பு தான் உங்களுக்குப் பலனைத் தரப்போகிறது. அதற்கு அபாரமான மனோவலிமை வேண்டும். உங்களிடம் இரண்டு அம்சங்களுமே இருப்பதாக நினைக்கிறேன். உங்களுக்குள் உள்ளொளி இருப்பதற்கான அடையாளங்களைப் பார்க்கிறேன். அந்த ஒளி உங்களை உங்கள் இலக்கை அடையவைக்கும்.

ப்ரண்டன் : நீங்கள் சொல்வதின் முழு அர்த்தத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், அதைப் பற்றி நான் யோசிக்கிறேன். பண்டைய கால இந்திய ரிஷிகள் நமது இதயங்களில் கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை எனக்கு விளக்க முடியுமா?

மகாபெரியவர் : கடவுள் நீக்கமற எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார். ஓர் இதயத்துக்குள் மட்டுமே அவர் தன்னை வரையறுக்க வில்லை. அவர் தான் மொத்த பிரபஞ்சத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

ப்ரண்டன் : அப்படியெனில் நான் பின்பற்ற வேண்டிய வழியை எனக்குச் சொல்வீர்களா?

மகாபெரியவர் : உங்களது பயணத்தைத் தொடருங்கள். பயணத்தின் முடிவில் நீங்கள் சந்தித்த யோகிகள், ரிஷிகளைப் பற்றி எண்ணிப் பாருங்கள். உங்களது இதயத்துக்கு யார் நெருக்கமாக இருக்கிறாரோ அவரிடம் மீண்டும் செல்லுங்கள். அவர் உங்களுக்குப் பாதையைக் காண்பிக்கட்டும்.

ப்ரண்டன் : நான் எனது சொந்த முயற்சிகளில் தோற்றுவிட்டால், உங்கள் உதவியை நாடிவரலாமா?

மகாபெரியவர் : நான் ஒரு அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிப்பவன். அதன் விவகாரங்களை நான் தொடர்ந்து கவனிக்க வேண்டும். தனிமையில் கழிப்பதற்கு அவகாசம் உள்ள ஒரு நபரைத்தான் நீங்கள் அணுக வேண்டும்.

ப்ரண்டன் : உண்மையான மகான்களை சந்திப்பதே அரிதென்றும் அவர்களும் ஒரு ஐரோப்பியனைப் பார்க்க மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறதே.

மகாபெரியவர் : உண்மையான மகான்கள் இருக்கிறார்கள். அவர் களைச் சந்திப்பதும் சாத்தியம்தான்.

ப்ரண்டன் : அவர்களில் ஒருவரிடம் என்னை அனுப்ப முடியுமா?

மகாபெரியவர் : இரண்டு பேர் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றனர். ஒருவர், தெற்கில் வனத்தின் நடுவே வாழ்பவர். அவர் மௌன விரதம் பூண்டிருக்கிறார். அவரை மிகச் சிலரே பார்த்திருக்கின்றனர். அவரிடம் உங்களை அனுப்பலாம். ஆனால் அவர் ஒரு ஐரோப்பியனைப் பார்க்க மறுக்கலாம்.

ப்ரண்டன் : நான் இரண்டாமவரைப் பற்றி அறிய விரும்புகிறேன். அவரைப் பற்றிச் சொல்ல முடியுமா.

மகாபெரியவர் : அவர் நகரத்தில் தான் இருக்கிறார். அவர் மேன்மையான ஞானியும் கூட. அங்கே நீங்கள் போய்ப் பார்க்கலாம். அவர் அக்னித் தலமான அருணாச்சல மலையில் வசிக்கிறார். அதுதான் திருவண்ணாமலை. அவர் மகரிஷி என்று அழைக்கப்படுகிறார். உங்களுக்குத் தேவையானால் விவரங்கள் தருகிறேன்.

ப்ரண்டன் : எனது தென்னிந்தியப் பயணம் முடிந்துவிட்டது. நாளை திரும்பிச் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். நான் இப்போது என்ன செய்வது?

மகாபெரியவர் : உங்களது பயணத்திட்டத்தை மாற்றுங்கள். திருவண்ணாமலைக்குப் போய்ப் பார்த்த பின்னரே திரும்புவதற்குத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். கவலை வேண்டாம். உங்களது ஆசை நிறைவேறும்.பால் ப்ரண்டனைவழிநடத்திய மகாபெரியவர்மகாபெரியவர்Mahaperiyavar

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x