Published : 17 Nov 2015 11:07 AM
Last Updated : 17 Nov 2015 11:07 AM

மாநிலங்களை அறிவோம்: பாலைவனச் சோலை- ராஜஸ்தான்

ராஜஸ்தானுக்கு ‘குஜராட்டிரா’ என்பதே நெடுங்காலமாக இருந்த பழைய பெயர் என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆர்.சி. மஜூம்தார். குஜராட்டிராவுக்கு குஜ்ஜர்களால் பாதுகாக்கப்பட்ட நாடு என்று அர்த்தம்.

இப்போதைய 1869-ல் ஜேம்ஸ் டாட்ஸ் என்பவர் எழுதிய புத்தகத்தில்தான் ராஜஸ்தான் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆவணங்களின்படி இதன் பெயர் ராஜ்புதனா என்றிருந்தது. ஆரம்பக் கால மொகலாயர் ஆட்சியின்போது ராஜ்பூத் பிரதேசம் என்று அழைக்கப்பட்டது.

சிந்து சமவெளி

சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்த பகுதி இது. தற்போதைய காலிபங்கன் அதன் முக்கிய நகரமாக இருந்திருக்கிறது. கி.மு. 405-435 களில் ஆண்ட இந்திய- ஸ்கைதியர்களின் வழித்தோன்றல்களான மேற்கு சத்ரபதிகள் உஜ்ஜைனியைக் கைப்பற்றியதிலிருந்து சாகா வம்சம் ஆளத் தொடங்கியது. ஜாட், மீனா, குர்ஜார், பில், ராஜபுரோகிதம், சாரானா, யாதவர், பிஸ்நோய் மற்றும் புல்மாலி ஆகிய சமூகத்தினர்கள் குறுநில மன்னர்களாக இருந்தனர்.

கி.பி.700-க்கு முந்தைய காலகட்டம் வரை மவுரியப் பேரரசு மற்றும் மாளவாக்கள், அர்ஜுன்யர்கள், குஷானர்கள், குப்தர்கள் மற்றும் ஹூணர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 8-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை ராஜபுத்திரர்களும் பிராத்திகர்களும் ஆண்டனர். அதிகாரத்தைக் கைப்பற்ற சாளுக்கியர்களும் பார்மர்களும் சவுகான்களும் நடத்திய போர் ராஜஸ்தான் வரலாற்றில் ஆழமாகப் பதிவாகியுள்ளது.

ஜாட் அரசன் மகாராஜா சுராஜ் மால், மார்வாரி மன்னன் மகாராணா பிரதாப் சிங், இந்து அரசராக அறிவித்துக்கொண்ட ஹெமு ஆகியோர் ராஜஸ்தானை ஆண்டவர்களில் முக்கியமானவர்கள்.

ராஜஸ்தான் உதயம்

மொகலாயப் பேரரசர் அக்பர் அதிகாரத்துக்கு வந்த பிறகு ஒன்றுபட்ட மாகாணத்தை உருவாக்கினார். மொகலாயர்கள் அதிகாரம் வீழ்ச்சியடைந்ததும் ராஜஸ்தான் துண்டு துண்டாக உடையத் தொடங்கியது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மராத்தியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். 1755-ல் அஜ்மீரைக் கைப்பற்றினர். பின்னர் முழுமையான ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். 1818-ல் ஆங்கிலேயர்கள் அவர்களை அகற்றினர். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜஸ்தான் முழுவதிலும் ஆங்கிலேயர் கொடி பறக்கத் தொடங்கியது.

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ராஜபுதனா மண்டலம் பின்னாளில் 1949 மார்ச் 30-ல் அதே பெயருடன் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டப்படி 1956 நவம்பர் 1-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதயமானது.

பெரிய மாநிலம்

இந்தியாவின் வடமேற்கில் ராஜஸ்தான் அமைந்துள்ளது. மேற்கு மற்றும் வட மேற்கில் பாகிஸ்தானும், வடக்கு மற்றும் வடகிழக்கில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசமும் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் மத்தியப் பிரதேசமும் தென் மேற்கில் குஜராத்தும் எல்லைகளாக அமைந்துள்ளன. தலைநகரம் ஜெய்பூர். மாநிலத்தின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனமும் தென்மேற்கில் விளைநிலங்களும் மலைகளுமாய்க் காட்சியளிக்கிறது.

மக்களும் மதமும்

மக்கள் தொகை 6.86 கோடி. இவர்களில் 75.1 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். நகர்ப்புறங்களில் குறைந்த அளவாக 24.9 சதவீதம் பேர் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் விவசாயத் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர். ஆயிரம் ஆண்களுக்கு 928 பெண்கள் என்ற பாலின விகிதாச்சாரம் நிலவுகிறது. படிப்பறிவு 66.11 சதவீதம்.

88.45 சதவீதம் பேர் இந்து மதத்தையும் 9.08 சதவீதம் பேர் இஸ்லாம் மதத்தையும் 1.27 சதவீதம் பேர் சீக்கியத்தையும், 0.91 சதவீதம் பேர் சமணத்தையும் பின்பற்றுகின்றனர்.

இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜஸ்தானி முக்கிய மொழியாகும். ராஜஸ்தானி மொழிக் குடும்பத்தில் ராஜஸ்தானி, மார்வாரி, மால்வி மற்றும் நிம்மாடி ஆகிய மொழிகள் அடக்கம். பேசும் மொழியாகவும் அலுவல் மொழி யாகவும் இந்தி இருக்கிறது. இது தவிர பிலி, பஞ்சாபி மற்றும் உருது மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.

கலையும் கலாச்சாரமும்

பிகானேரில் நடைபெறும் ஒட்டகத் திருவிழா, நாகூரில் ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் மாடு, ஒட்டகச் சந்தை, 18 நாள் திருவிழாவான மேவார் திருவிழா, ஜெய்பூரில் நடக்கும் காங்கூர் சித்திரைத் திருவிழா, கைலா தேவி விழா, மகாவீர் விழா, கோடை விழா, தீஜ் பண்டிகை, காளிதீஜ், தசரா, புஷ்கர், சந்திரபாகா, கொல்யாட் உள்ளிட்டவை ராஜஸ்தான் மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடும் விழாக்கள்.

மாநிலத்தின் பாரம்பரியமிக்க கோமார் நடனம், கய்ர், சாரி நடனம், காச்சி கோதி (பொய்க்கால் குதிரை), நெருப்பு நடனம், பழங்குடிகளின் தெரா தாலி, காட்ச்புட்லி (பொம்மலாட்டம்), மான்ட் எனப்படும் கஜல் ஆகிய நடனங்கள் ராஜஸ்தானுக்கு உரியவை.

துணி வகைகள், கைவினை நகைகள், விரிப்புகள், பீங்கான் பாத்திரங்கள், காலணிகள், பளிங்கு பொருட்கள், பிரசித்தி பெற்ற ஐவெரி வளையல்கள் செய்வதிலும் ஓவியங்கள் தீட்டுவதிலும் இவர்கள் வல்லவர்கள்.

பண்பாட்டுச் செறிவு மிக்க பிரதேசமாக ராஜஸ்தான் திகழ்வதற்குப் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டது முக்கியக் காரணம். இங்குள்ள ஏராளமான கோட்டைகள், அரண்மனைகள் இஸ்லாமிய, சமணக் கலை வடிவத்தைப் பறைசாற்றுகின்றன.

ஜெய்பூர், அஜ்மீர்- புஷ்கர், உதய்பூர் ஏரி, ஜோத்பூர் பாலைவனக் கோட்டை, தாராகர் கோட்டை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தலங்கள். இவை தவிர, குடைவரை கோயில்கள், ஜந்தர் மந்தர், தில்வாரா கோயில்கள், ஏரி மாளிகை உள்ளிட்டவை ராஜஸ்தானின் பெருமை மிகு அடையாளங்கள்.

பொருளாதாரம்

ராஜஸ்தானின் பொருளாதார பலம் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் கோதுமை, பார்லி முதன்மைப் பயிர்கள். பருப்பு வகைகள், கரும்பு, எண்ணெய் வித்துகள், பருத்தி, புகையிலை மற்றும் அபின் விளைவிக்கப்படுகின்றன. வடமேற்கு ராஜஸ்தானில் சாகுபடிக்கு முக்கியப் பங்காற்றுகிறது இந்திராகாந்தி கால்வாய். மழைப் பொழிவு குறைந்த மாநிலங்களில் முதலிடம் ராஜஸ்தானுக்கு.

கனிம, ஜவுளித் துறைகளிலும் ராஜஸ்தானுக்கு முக்கிய பங்கு உண்டு. பருத்தி மற்றும் பாலியஸ்டர் துணி ஏற்றுமதியில் பெரிய பங்காற்றுகிறது.

தாஜ்மகால் கட்டுவதற்கான வெள்ளை மார்பிள் கல் இங்குள்ள மக்ரானா நகரத்தில் இருந்துதான் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்.

உப்பு வளம், தாமிர மற்றும் துத்தநாகச் சுரங்கங்கள், உள்ளிட்ட கனிம வளங்களை இம்மாநிலம் உள்ளடக்கியிருக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு ரூ.15 கோடி என அபரிமிதமான வருவாய் கிடைக்கிறது. டெல்லி - மும்பை தொழிற்பாதையின் நடுவே ராஜஸ்தான் அமைந்திருப்பது அதன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் பாலைவனத்தைக் கொண்ட ஒரே மாநிலம் ராஜஸ்தான்தான். இருப்பினும் பண்பாட்டு ரீதியில் இந்தியாவின் சோலைவனமாக ஜொலிக்கிறது.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x