Published : 03 Apr 2021 03:13 am

Updated : 03 Apr 2021 09:12 am

 

Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 09:12 AM

தேர்தல் அலசல்: சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கவனம் பெறும் காலம் வரும்

environmental-issues

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைத் தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது. அவற்றில் இயற்கையால் விளைந்தவை குறைவே. அந்தப் பிரச்சினைகளையும் அறிவியல்பூர்வமாகக் கையாண்டிருந்தால் பெருமளவு சேதத்தைத் தவிர்த்திருக்கலாம். அதேநேரம் நிகழ்ந்தவற்றில் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மனிதர்களால் தூண்டப்பட்டவை அல்லது மனிதர்களால் தீவிரமடைந்தவை.

ஆனால், 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலின்போது சுற்றுச்சூழல் பிரச்சி னைகள் தேர்தல் பரப்புரைகளில் முக்கியத்துவம் பெறவில்லை. வாழ்வா தாரப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் அளவுக்குச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பேசப்பட வில்லை. வாழ்வாதார, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குச் சுற்றுச்சூழல் சீர்கேடே முதன்மைக் காரணம் என்பது உணரப்படாததே இதற்கு அடிப்படை.


இந்தத் தேர்தல் பரப்புரைகள், வாக்குறுதிகளிலும்கூட உலகை உலுக்கும் பருவநிலை மாற்றம், ஒரு பிரச்சினையாகவோ கவனப்படுத்த லாகவோ மாறவில்லை. நேரடியாக இல்லாமல் மறைமுகமாக மணல் கொள்ளை ஒரு பிரச்சினையாகி இருக்கிறது. ஆனால், உண்மையிலேயே ஆறுகளைப் பாதுகாப்பதற்கான விரிவான செயல்திட்டங்கள், தொலைநோக்குப் பார்வையைக் கட்சிகள் முன்வைத் திருப்பதுபோல் தெரியவில்லை. இந்த அவநம்பிக்கை தோன்றுவதற்குக் காரணம், இது வரையிலான ஆட்சிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் போதிய அளவு முக்கியத்துவம் அளிக்காமலிருந்ததே.

சூழலியல் அலட்சியம்

கடந்த ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் நாவல் கரோனா வைரஸ் தொற்று பரவலானதற்கு அடிப்படைக் காரணம் சூழலியல் சமநிலை குலைக்கப்பட்டதும், சுற்றுச் சூழல் சார்ந்த அலட்சியமுமே. இதற்கு இணையான ஒரு பிரச்சினை தமிழகக் காடுகளில் உருவெடுத்து வருகிறது.

அது மனித-காட்டுயிர் எதிர் கொள்ளல். 2016இல் மதுக்கரை மகராஜ் என்கிற யானை சர்ச்சைக்குரிய வகையில் இறந்தது தொடங்கி, 2020இல் கோவை வனச்சரகத்தில் 17 யானைகளும், சத்தியமங்கலம் வனச்சரகத்தில் 20-க்கும் மேற்பட்ட யானைகளும் மர்மமாக உயிரிழந்தது வரை, இந்தப் பிரச்சினை தீவிரமடைந்து கொண்டே போகிறது.

மனித-காட்டுயிர் எதிர்கொள்ள லுக்குக் காடுகளில் தண்ணீர் வளம் குறைந்தது ஒரு காரணம் என்றால் காடு கள் வளமிழந்து போனது, காடுகளின் எல்லைகள் சுருக்கப்பட்டுக்கொண்டே இருப்பது, காடுகள் பல்வேறு வகைகளில் ஊடறுக்கப்பட்டு இயற்கைக்கும் உயிரினங் களுக்கும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே போவது உள்ளிட்டவைதாம் மற்ற காரணங்கள். சில மனிதர்களின் உயிரிழப்பு, காட்டுயிர்களின் உயிரிழப்புடன் இது முடிந்துவிடப் போவதில்லை.

மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் என்பது நம் ஐந்திணை நிலப்பகுதிகள் சமநிலையுடன் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் காய்ச்சலைப் போன்ற நோய் அறிகுறி மட்டுமே. மேம்போக்காகக் காய்ச்சலைப் போக்கிவிட்டால், இந்தப் பெருநோய் தீர்ந்துவிடப் போவதில்லை. இப்பிரச்சினை மொத்த மாநிலத்தையும் பாதிக்கத் தொடங்குவதற்கு முன் தீர்வு காணப்பட வேண்டும்.

தண்ணீர் பிரச்சினைகள்

‘நியூயார்க் டைம்ஸ்’, ‘கார்டியன்’ போன்ற சர்வதேச நாளிதழ்கள் கவனப் படுத்தும் அளவுக்கு சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு 2019இல் தீவிரப் பிரச்சினையாக உருவெடுத்தது. 2015இல் பெருவெள்ளம் வந்திருந்த நிலையில், மூன்றாண்டு இடைவெளி யில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. இது பிரச்சினையின் ஒரு முகம் மட்டுமே.

‘நிதி ஆயோக்’ அமைப்பு 2018இல் வெளியிட்ட ‘கூட்டு நீர் மேலாண்மைக் குறியீட்’டில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்தது. அதற்கு முந்தைய பத்தாண்டுக் காலத்தில் தமிழகத்தின் 87 சதவீதக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருந்தது. சூழலியல் சமநிலை சமவெளிகளில் பேணப்படாததன் அறிகுறிகள் இவை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வர்தா (2016), ஒகி (2017), கஜா (2018), நிவர் (2020) ஆகிய புயல்கள் தமிழகத்தைத் தாக்கின. இந்தப் புயல்களால் காவிரி பாசன மாவட்டங்கள், சென்னை சுற்று வட்டாரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இவற்றால் ஏற்பட்ட வேளாண், பொருளாதார இழப்பு களுக்கு மாநில அரசோ மத்திய அரசோ உரிய வகையில் இழப்பீடு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. ஒகி புயலின்போது நடுக்கடலில் சிக்கித் தவித்த மீனவர்கள் காப்பாற்றப்படாதது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

வடுவும் தடையும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராகவும் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் 2018 மே 22 அன்று உள்ளூர் மக்கள் பேரணி சென்றனர். அப்போது, மாநில நிர்வாகத்துக்கே தெரியாமல் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். அதற்குப் பிறகு மே 28இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்தது. ஆலை மூடப்பட்டது வரவேற்பைப் பெற்றாலும், அதற்காக அப்பாவி மக்கள் 13 பேர் பலிகொடுக்கப்பட்டது ஆறாத வடுவாகவே நீடிக்கிறது.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்குத் தமிழக அரசு 2019இல் தடை விதித்தது, வரவேற்பைப் பெற்றது. இந்தத் தடை சிறிது காலம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதுவும் சடங்குச் சட்டங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால், குறைந்த அளவில் கமுக்க மாக விற்கப்பட்டுவந்த ஒருமுறை பயன் படுத்தும் ஞெகிழிப் பைகள், ஞெகிழிப் பொருள்கள் கரோனா தொற்றுக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப் படு வதைப் பார்க்க முடிகிறது. ஓரிரு ஆண்டுகளில் மிகப் பெரிய திடக்கழிவு பிரச்சினையாக ஞெகிழிக் கழிவு உருவெடுப்பதற்கான சாத்தியம் தெரிகிறது. மேற்கண்டவற்றைப் போன்று தமிழக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

அமைப்புகள் என்ன செய்கின்றன?

அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், இப்படி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையின் ஒரு பகுதியாகிவிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் களையாமல் செயல் படுவது சாத்தியமில்லை. அடுத்து வரும் ஆட்சியில் சுற்றுச்சூழல் துறைக்குப் பொறுப்பு வகிக்கவுள்ள அமைச்சர் பொறுப்புணர்வுடன் செயல்பட்டாக வேண்டிய தேவையை மேற்கண்ட பிரச்சினைகள் அதிகமாக்கியுள்ளன.

அதேநேரம் சுற்றுச்சூழல் பிரச்சினை களில் முன்னிற்பதாகக் கூறிக்கொள்ளும் சுற்றுச்சூழல் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் சுற்றுச்சூழலை ஒரு அரசியல் பிரச்சி னையாகப் பார்ப்பதில்லை அல்லது அது அரசியல் பிரச்சினையாக மாறி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்களோ என்கிற கேள்வி எழுகிறது. தேர்தல் நேரத்தில்கூட சம்பிரதாயமான அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகளுடன் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் முடிந்துபோய் விடு கின்றன. மேம்போக்கு சுற்றுச்சூழல் கரி சனங்கள் முதலுக்கே மோசமாக முடியும்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரண மாகவோ துணைநிற்கவோ செய்தால் அது எந்தக் கட்சியாக இருந்தாலும், தட்டிக் கேட்க வேண்டிய தேவை மக்கள் அனைவருக்குமே இருக்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல்-வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகக் கவனப்படுத்தப்படும்போது, புரிந்துகொள்ளப்படும்போது, பேசப்படும் போது, போராட்டங்கள் முன்னெடுக்கப் படும்போது மட்டுமே உலகையும் இங்கு வாழும் மக்களையும் உய்விக்க முடியும்.

தொடரும் வேளாண்மைச் சிக்கல்கள்

கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு இடையில் 2020 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ‘புதிய வேளாண் சட்டம் 2020’ உள்ளிட்ட மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, வேளாண் விளைபொருள்களுக்கு அளிக்கப்பட்டுவந்த குறைந்தபட்ச ஆதார விலையை, புதிய சட்டங்கள் இல்லாமல் ஆக்கிவிடும் என்று உழவர்கள் போராடத் தொடங்கினார்கள். நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய உழவர்களின் ‘டெல்லி சலோ’ போராட்டம் 125 நாள்களைக் கடந்து தொடர்ந்துவருகிறது. பல நூறு உழவர்கள் போராட்டக் களத்திலேயே பலியாகியும் போயிருக்கிறார்கள்.

# சென்னை - சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடியில் எட்டுவழிச் சாலை அமைக்கும் திட்டம் 2018இல் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக உழவர்கள், பகுதிவாழ் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அனுமதி கிடைத்த பிறகு, இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

# தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், கரூர் ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கி ‘காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல’மாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் 2020இல் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், நடைமுறையில் இது உரியப் பாதுகாப்பை வழங்குமா என்கிற கேள்வியும் விமர்சனமும் எழுந்துள்ளன. சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும், இது சார்ந்து வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கெனவே, நடைபெற்றுவரும் வேளாண்மைக்கு எதிரான எந்தத் திட்டமும் இதுவரை நிறுத்தப்படவும் இல்லை.

# தமிழகக் கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.யுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கக் கடுமையான எதிர்ப்பு நிலவிவந்த நிலையில், காவிரிப் படுகைக்குக் கிழக்கே கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை உழவர்கள் ஆபத்தாகக் கருதுகிறார்கள்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in


சுற்றுச்சூழல் பிரச்சினைகள்Environmental issuesEnvironmentகவனம் பெறும் காலம்தேர்தல் அலசல்சூழலியல் அலட்சியம்தண்ணீர் பிரச்சினைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x