இப்படியும் பார்க்கலாம்: நாளையைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை

இப்படியும் பார்க்கலாம்: நாளையைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை
Updated on
2 min read

தாம்பரம் டூ எழும்பூர் ரயில் கிண்டியைத் தாண்டியபோது சக பயணியின் ஃபோன் ஒலித்தது.அவருக்கு 50 வயது இருக்கலாம். சிரித்தபடிதான் ஃபோனை எடுத்தார். மறுமுனையில் யார் என்பதை கீழ்க்கண்ட உரையாடல் உணர்த்தும்.

“அப்படி செஞ்சிராதீங்க சார்...நான் அப்படிப்பட்டவன் இல்ல...என் தரப்பு விளக்கத்தையும் கேளுங்க சார்...அப்புறமா முடிவு எடுங்க...”

‘சார்’ என்னும் வார்த்தையை உருக்கமாகப் பயன்படுத்த நேர்கிற தருணங்கள் கொடுமையானவை. அதனுடன் ‘ப்ளீஸ்’- ம் சேர்ந்துகொண்டால்? நான் புள்ளக்குட்டிக்காரன்; இத்தனை வயசுக்குப் பிறகு என்னால... எனும் உணர்வு அதற்குள் ஓடும்.

‘சார்’ உருகுவதாகத் தெரியவில்லை. எல்லோரும் கவனிக்காமல் கவனித்தோம். ஃபோன் கட்டாகும் முன் அவசர ‘சார்...சார்’களுக்குப் பிறகு கண்கலங்கிக் கைக்குட்டையை எடுத்தார். அவமானத்தைத் துடைக்கும் வழியை கைக்குட்டை எப்படி அறியும்? என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட்டார்.

சுவாதியின் திருமணத்தை பெரியவர்கள் நிச்சயித்த அடுத்த நொடி இந்தக் கால வழக்கப்படி அவளும் வருங்காலக்கணவனும் செல்ஃபோனில் வாழத் தொடங்கினார்கள். இருவரும் சேர்ந்துதான் நெருங்கிய நட்புகளைக்கூட அழைத்தார்கள்.

கல்யாணமான அடுத்தநாள் கணவன் அவனது அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். “அவ எனக்கு சரியா வருவான்னு எனக்குத் தோணலை. டைவர்ஸுக்கு ஏற்பாடு செய்யுங்க.”

இந்தக் கணமே நிஜம், live the moment என்றெல்லாம் சொல்கிறார்கள். இவை இந்த நொடியின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சொல்லப்பட்டதே தவிர, நாளைய நொடியை நினைக்காதீர்கள் என்ற தொனியில் புரிந்துகொள்ளக் கூடாது. “நாளையைப் பத்தி எனக்கு அக்கறை இல்ல...”என்பதே எதிர்காலத்தின் மீது நமக்குள்ள பொறுப்பைத் தட்டிக்கழிப்பது. எதிர்காலம் என்ற ஒன்று இல்லையென்றால், இந்தக் கணம் என்ற ஒன்றும் இருக்கவே முடியாது.

நீங்கள் மூச்சை உள்ளிழுப்பது இந்தக் கணத்தில் என்றால், அந்த மூச்சு வெளியேறுவது எதிர்காலத்தில். உங்களின் ஒரு கால் ஓரடி முன் வைப்பது இந்தக் கணத்தில் என்றால், மறு காலை எதிர்காலத்தில்தான் வைத்தாக வேண்டும். ஆக, கண்ணுக்குத் தெரியாத மெல்லிய இழை நம்மை எதிர்காலத்துடன் பிணைத்திருக்கிறது.

இந்த இழைக்கு சில இயல்புகள் உண்டு. ஒரு மெல்லிய நூலில் 25 கிலோ எடையைத் தொங்கவிட்டால் அது அறுந்துவிடும். ஆனால், இந்த எதிர்கால இழைக்கு அப்படியெல்லாம் நியதிகள் கிடையாது. உங்களின் கனவுகள், திட்டங்கள், இலக்குகள் எல்லாவற்றையும் டன் கணக்கில் சொல்ல முடிந்தால், அது எத்தனை டன் எடையை வேண்டுமானாலும் தாங்கும். ஆனால், சில நேரங்களில் ஒரு மயிலிறகை வைத்தால்கூட சட்டென்று அறுந்துவிடும். தவிர, இடம், பொருள், ஏவல் தெரியாமல் நினைத்த நேரத்தில் அறுந்து ‘‘திட்டமா போடற...?’’ என்று கேலி செய்யும்.

அன்று காலை எவ்வளவு திட்டங்களுடன் அந்த ரயில் பயணி கிளம்பியிருப்பார்! மண்டபக் கணக்குகளைக்கூட இன்னும் முடிக்காத நிலையில், பெற்றோரின் கண்ணீரால் சுவாதி நிலைகுலைவதைத் தவிர என்ன செய்ய முடியும்?

ஒட்டுமொத்த வாழ்க்கையும் பறிபோகிற மாதிரி எதிர்காலத்துடன் தங்களைப் பிணைத்திருக்கும் இழை அறுகையில் தாங்கள் தொலைந்துபோய்விட்டோம், இனி அவ்வளவுதான் என்ற முடிவுக்குத்தானே இந்த இருவரும், இது போன்ற தருணங்களில் நாமும் வர முடியும்?

எதிர்காலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் அதிர்ச்சிப் பொழுதுகளை நம்மில் உணராதவர் உண்டோ?

நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கலாம். அதற்காக உங்களின் எதிர்கால இழையில் ‘உறுதியானது; தரச்சான்றிதழ் பெற்றது’ என்ற முத்திரை இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. எல்லாத் தொப்புள் கொடிகளும் கத்தரிக்கோலுக்குக் கட்டுப்பட்டவைதான்.

எனினும் நம்பிக்கை இழக்க வேண்டாம். எதிர்கால இழை அறுபடுவதைவிட இயல்பானது அது மீண்டும் துளிர்ப்பது! இந்த விநோத இழை அதுவாகவே தன்னைப் பிணைத்துக்கொண்டு உங்களை எதிர்காலத்துடன் இணைத்துவிடும்!

என்றாலும், இதில் ஒரு சிறு நிபந்தனை இருக்கிறது. நிறைய பேர் தவறு செய்கிற இடமும் இதுவே...

அறுந்த இழை துளிர்த்துவிட்டதா என்று அடுத்த நொடியே எட்டிப்பார்க்கக் கூடாது. அதற்கு incubation சந்தர்ப்பம் தேவை. ‘அடை காக்கும் பொழுதுகள்’ அவமானகரமானவை அல்ல.

காதலில், வியாபாரத்தில், குடும்பத்தில்,வேலையில் அவமானம் கொள்கிற நிறையபேர் அந்த நேரங்களில்தான் உணர்ச்சிபூர்வமான முடிவுகளை எடுத்து சூழலை இன்னும் சிக்கலாக்குகிறார்கள். எதிர்மறைச் சிந்தனைகளுக்கு முக்கியம் கொடுத்து பின்னர் தாங்களே நினைத்தாலும் எந்த மலைகளாலும் நிரப்ப முடியாத பள்ளங்களை உருவாக்கி விடுகிறார்கள்.

‘எதிர்காலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற அறிவிப்புப் பலகை கண்களில் படவில்லைதான். அதற்காக ‘உள்ளே வர அனுமதி இல்லை; தடை செய்யப்பட்ட பகுதி’ எனும் எச்சரிக்கையை எதிர்காலம் விடுத்திருப்பதாக நினைத்தால் என்ன செய்வது?

மனதில் கொள்ளுங்கள். துண்டிக்கப்பட்ட இழை துளிர்த்து விட்டதா என்பதை அடுத்த நொடியே ஆராயக் கூடாது. சில நாட்களின் நகர்வு அல்லது ஒரு குட்டித்தூக்கம், குறைந்தபட்சம் ஒரு கப் டீக்கான இடைவெளி தேவை!

அப்போது உங்கள் பார்வை சமநிலையை அடைந்திருக்கும்.

எனவேதான் சுவாதியால் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு அடுத்த வாழ்க்கைக்குத் தயாராவதும், பத்து நாட்களுக்குப் பிறகு ரயில் பயணி “இப்பதான் ஜாய்ன் பண்ணேன்...”என்று நண்பரிடம் ஃபோனில் சொல்வதும் சாத்தியமாகிறது!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in