ஐ.ஐ.டி. வழிகாட்டி 3 - நுழைவுத் தேர்வு விதிகள்

ஐ.ஐ.டி. வழிகாட்டி 3 - நுழைவுத் தேர்வு விதிகள்
Updated on
2 min read

“ஐ.ஐ.டி. என்ற ‘ப்ராண்டு’க்கு இருக்கும் மதிப்பே தனி தான். வேறு கல் லூரிகளில் படித்த பிறகு, மேற்படிப்புக்கோ, உயர்ந்த பதவிகளுக்கோ விண்ணப்பித்தால், அந்தக் கல்லூரியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்வார்கள். ஐ.ஐ.டி.என்றால் அது ஒன்றே போதும்”.

“B.Tech-ல் குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் படிக்கிறேன். இது சமீபத்திய கல்விப் பிரிவு. ஐ.ஐ.டி.யில்தான் படிக்க முடியும். இதை முடித்தால் வெளிநாடுகளில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன”.

“Ocean Engineering படிக்கிறேன். ஐ.ஐ.டி.யில் இருப்பது போன்ற ஆராய்ச்சி வசதிகள் வேறு எங்கே இருந்துவிட முடியும்? இதே துறையில் பேராசிரியராக நானும் விளங்கப் போகிறேன்’’.

“வெறும் படிப்பு மட்டுமல்ல. இசை, விளையாட்டு என்று அனைத்துத் துறைகளிலும் வாய்ப்பு கொடுக்கிறது ஐ.ஐ.டி.வளாகம். ஒரு முழுமையான மனிதனாக வெளியே செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது’’.

ஐ.ஐ.டி.யில் படிக்கும் சிலரைக் கேட்டபோது. இப்படிப்பட்ட பதில்கள் கிடைத்தன. எனினும் உங்களில் சிலருக்கு ஐ.ஐ.டி.குறித்து அச்சம் இருப்பதற்கு ஏதாவது உளவியல் காரணமாக இருக்குமோ?

பெரும்பாலான ஐ.ஐ.டி.க்கள் புறநகர்ப் பகுதிகளில், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில்தான் கோலோச்சுகின்றன. சென்னை ஐ.ஐ.டி., நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்தாலும் அதுவும் ஒரு தனி வனப்பகுதியில் தான் இருக்கிறது. அந்த வளாகத்துக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்துவிட முடியாது. நுழைந்தவர்கள் பிரமித்திருப்பார்கள். பிரம்மாண்டமான பரப்பு. மான்களையும் குரங்குகளையும் அதிக அளவில் காண முடியும். மரங்களைப் பரவலாகப் பார்த்து ரசிக்க முடியும்.

உள்ளுக்குள்ளேயே கல்லூரி, நூலகம், பிரம்மாண்டமான ஆய்வு அரங்குகள், திறந்தவெளித் திரையரங்கு, அழகிய நீச்சல் குளம், ஜிம், பல விடுதிகள், ஷாப்பிங் மால், நாலைந்து உணவகங்கள் என்று வசதிகள் நீள்கின்றன. சந்தேகமின்றி ஐ.ஐ.டி. கல்வி என்பது ஒரு பெருமைதான். இதற்கான நுழைவுத் தேர்வு தொடர்பாக இத்தொடரில் சில அடிப்படை விவரங்கள்/தகுதிகளை அளிக்கிறோம். அவை சென்ற சில ஆண்டுகளில் விதிக்கப்பட்டவை. 2016-க்கான நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்களில் மாறுதல் இருந்தால் அவை இனிதான் தெரியவரும். (ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வின் அதிகாரபூர்வ வலைத்தளம் >jeemain.nic.in).

நுழைவுத் தேர்வை எழுத அதிகபட்ச வயது 25. பட்டியல் பிரிவினருக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் 30 வயதுவரை அனுமதி உண்டு. ஆனால் ஒன்று உச்சகட்ட வயதுவரை எவ்வளவு முறை வேண்டுமானாலும். நுழைவுத் தேர்வை எழுத முடியாது. அதிகபட்சம் மூன்று முயற்சிகளுக்குதான் அனுமதி. பள்ளியில் இயற்பியல் (Physics) மற்றும் கணிதம் ஆகியவற்றை நிச்சயம் படித்திருக்க வேண்டும்.

தவிர வேதியல், உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology), கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் (Biology) ஆகியவற்றில் ஒன்றையாவது தேர்ந்தெடுத்துப் படித்திருக்க வேண்டும். நீங்கள் ப்ளஸ் 2 அல்லது அதற்குச் சமமான தேர்வில் மொத்தத்தில் 50 சத விகித மதிப்பெண்களாவது எடுத்திருக்க வேண்டும்.

நண்பர்களே, ஐ.ஐ.டி. என்பது புதிர் உலகமோ எட்டாக்கனியோ அல்ல. ஐ.ஐ.டி. கல்வியை அலி பாபாவின் குகை என்று வேண்டுமானால் கூறலாம். அதற்குள் நுழைய ‘மந்திரச் சொல்’ வேண்டும் தான். ஆனால் அந்த மந்திரச் சொல்லை இன்னார்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. யார் சொன்னாலும் கதவு திறக்கும். நீங்கள் சொன்னாலும்தான்.

உங்கள் வாழ்வின் திருப்புமுனையாக விளங்கக் கூடிய அந்த மந்திரச் சொற்கள் என்ன? தொடர்ந்து படியுங்கள்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றால் எந்தக் கல்வி நிறுவனத்தில் சேரலாம்? இப்படிக் கேட்டால் உங்கள் பதில் என்ன? ‘இதென்ன கேள்வி? ஐ.ஐ.டி.யில் சேரத்தானே அந்த நுழைவுத் தேர்வு? ’ என்கிறீர்களா?

அங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட். மேற்படி நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு வேறு சில சிறந்தகல்வி நிறுவனங்களிலும் சேரலாம். அதாவது உங்கள் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு ஐ.ஐ.டி.யில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் கூட உங்கள் முயற்சிகள் வீணாகி விடாது. இதைப் பற்றியும் அடுத்ததாகப் பார்ப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in