Last Updated : 28 Mar, 2021 03:16 AM

 

Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

பார்வை: தேர்தல் வாக்குறுதியில் குழந்தைகளுக்கு இடமில்லையா?

தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துவிட்டன. தமிழகத்தில் உள்ள 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பெரும்பாலான கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்டன. 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 227 பெண் வாக்காளர்கள் இருப்பதால், அவர்களின் வாக்கை இலக்காக வைத்தே ஏகப்பட்ட இலவச அறிவிப்புகளைப் பிரதான கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீசியுள்ளன. ஆனால், காங்கிரஸ், மதிமுக தவிர்த்து மற்ற எந்தக் கட்சியும் தம் தேர்தல் அறிக்கைகளில் குழந்தைகளின் நலனை முன்னிறுத்த வில்லை என்பதுதான் சோகம்.

இயற்கைச் சீற்றங்கள், போபால் விஷவாயு விபத்து, கும்பகோணம் தீ விபத்து, சுனாமி, சென்னை வெள்ளம், ஒக்கி புயல், கரோனா முடக்கம் என எந்த ஒரு பேரிடரிலும் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் குழந்தைகள்தாம்.

ஏன் இந்தப் புறக்கணிப்பு?

குழந்தைகளுக்கே முன்னுரிமை, குழந்தைகள் நலனுக்கே முதலிடம் என்கிற இந்தியச் சமூகத்தின், குடும்பக் கட்டமைப்பின் அடிப்படை புரியாமல் அரசியல் கட்சிகள் இருக்கின்றனவா என்றால் அப்படியில்லை. குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லாததால் அவர்களைக் கண்டு கொள்வதில்லை அல்லது அவர்களின் நலன் குறித்து அக்கறை காட்டுவதில்லை. அரசும், அரசியல் கட்சிகளும் குழந்தைகளை மூன்றாம்தரமாகப் பார்க்கும் போக்கு பெருங்கவலையை அளிக்கிறது.

கருவிலேயே குழந்தைகளை அழித்தல், பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருட்டு, குழந்தையின் உடல் உறுப்புகள் திருட்டு, குழந்தைகளை நரபலி கொடுத்தல், குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர்கள் அவலம், கொத்தடிமை முறை, பிச்சையெடுக்க வைத்தல், கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, ஆபாசப் படம் எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், பொட்டு கட்டுதல், சாதி-மதரீதியிலான வன்முறை, இணையவழி வன்முறை எனக் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தேர்தல் காலம், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கின்றன. புள்ளிவிவரங்கள், நடப்புச் சம்பவங்களைப் பார்த்தால் தமிழகம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மாநிலமாக இல்லை.

இந்த அவல நிலையிலும் திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கல்வி சார்ந்த திட்டங்களைக் குறிப்பிட்டுள்ளனவே தவிர குழந்தைகள் நலன் சார்ந்து எதையும் குறிப்பிடவில்லை.

தனி அமைச்சகம் தேவை

குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று தனித் துறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் குறிப்பிட்டு உள்ளது. உண்மையில், இது ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், தற்போதைய சூழலில் குழந்தைகள் மீது 15-க்கும் மேலான வடிவங்களில் வன்முறையும், உரிமை மீறல்களும் நிகழ்த்தப்படும் நிலையில் தனித்துறை என்பது போதுமானதாக இருக்காது.

குழந்தைகள் பாதுகாப்பையும் பராமரிப்பையும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகமும், மாநில அளவிலான குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் மட்டும் பூர்த்திசெய்ய முடியாது என்பதே நிதர்சனம். குழந்தைகளுக்காகத் தனி அமைச்சகம் அமைப்பதே காலத்தின் கட்டாயம். அப்போதுதான் பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுக்க முடியும்.

ஜவ்வாதுமலைப் பகுதி குழந்தைகளின் கல்வி நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர் மகாலட்சுமியும் இதையே வலியுறுத்துகிறார்.

‘‘கரோனா முடக்கக் காலத்தில் ஜவ்வாது மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மட்டும் சுமார் 400 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. திருப்பூர் பனியன் கம்பெனிகள், கோவை பஞ்சாலைகள், ஆம்பூர் தொழிற்சாலைகள் என ஆங்காங்கே எம் குழந்தைகள் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டு வதைபடுகின்றனர். அவர்கள் மீது உடல்ரீதியான சுரண்டலும், உழைப்புச் சுரண்டலும் நிகழ்கின்றன.

மலைவாழ் குழந்தைகள், சமவெளிக் குழந்தைகள், நரிக்குறவர்களின் குழந்தைகள், நாடோடிகளின் குழந்தைகள் என எல்லாக் குழந்தைகளின் நலனையும் காப்பதே அரசியல் கட்சிகளின் கடமை. ஆனால், இங்கு எந்தக் குழந்தைகளின் நலனும் காக்கப்படுவதில்லை. வாக்கு இல்லை என்று அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அறமற்ற செயல். மலைவாழ் குழந்தைகள் 1%, 2%தான் என்று புள்ளிவிவரம் பார்க்காமல் அவர்களும் மனிதர்கள்தான் என்று அரசும், கட்சிகளும் நினைக்க வேண்டும்.

ஆனால், குழந்தைகள் நலன் சார்ந்து யோசிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை அமைச்சரவையில் குறைவு. பள்ளிக் கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, தேர்வுகள், மதிப்பெண்கள் ஆகிய பணிகளில் கவனம் செலுத்துகிறது. சமூக நலத்துறையை எடுத்துக்கொண்டால் மதிய உணவு, உணவுப் பட்டியல் என அதன் பணிகள் நீள்கின்றன. இவை எல்லாம் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள்தான். ஆனால், பள்ளிகள், வீடுகள், பொது இடங்கள் என எங்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழந்தைகள் நல அமைச்சகம் தேவை.

கருவில் உருவானது முதல் 18 வயது ஆகும் வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் உரிமைகள் குறித்து அறிய, கலந்துரையாட, விவாதம் செய்ய வேண்டிய சூழல் நேரிடுகிறது. அதனால் குழந்தைகள் நல அமைச்சகம் அவசியமாகிறது.

பாடப்புத்தகங்கள் எப்படிப்பட்ட கருத்துகளை வைக்க வேண்டும் என்பதையும் குழந்தைகள் நல அமைச்சகம்தான் பரிந்துரை செய்ய வேண்டும். இளம் குடிமக்கள் மனித உரிமை மன்றம் தொடங்க வேண்டும். குழந்தை உரிமைக் கல்வியைப் பாடத்திட்டமாகக் கொண்டுவர வேண்டும். குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்கள், கதை சொல்லிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும். பாலினச் சமத்துவக் கல்வியைத் தர வேண்டும்.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பணி செய்வதைத் தடுக்கும் விதமான அம்சங்களைக் கொண்ட தனிச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். நடைமுறையில் உள்ள குழந்தைகளுக்கான சட்ட திட்டங்களில் ஒரே சீராக 18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள் என்ற வரையறை செய்து குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமாக குழந்தைகளுக்குத் தனி அமைச்சகம் வேண்டும்.

நாடற்ற, வீடற்ற, உணவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும், குழந்தைகளுக்காக யோசிக்கக்கூடிய அரசு இதையெல்லாம் நிறைவேற்றவும் குழந்தைகள் நல அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்’’ என்கிறார் மகாலட்சுமி.

எந்தக் குழந்தையும் விடுபடக் கூடாது

விடுபட்டவர்கள் (இவர்களும் குழந்தைகள்தான்) நூலின் மூலம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் இனியன். அவர் கூறுகையில், ‘‘கரோனா முடக்கக் காலத்தில் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் மாறியுள்ளன. ஆண் குழந்தைகள் அதிகமான அளவில் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகியுள்ளனர். நிறைய பெண் குழந்தைகளுக்குத் திருமணங்கள் நடந்துள்ளன.

குழந்தைகள் உரிமைகள் சார்ந்த விஷயங்களை எந்த அளவுக்குக் கையாள்கிறோம் என்பதில் தமிழக அளவில் சுணக்கம் உள்ளது. இதைக் களைய, குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்ட, பொதுச் சமூகத்தில் குழந்தைகளைச் சமூக மனிதராக வளர்த்தெடுக்க குழந்தைகள் நல அமைச்சகம் தேவை. இது கல்வி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படாமல் தனித்து இயங்க வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் மொழிச் சிறுபான்மையினருக்குச் சிக்கல் உள்ளது. தமிழகத்தில் தமிழைத் தவிர மாற்று மொழி பேசும் எல்லையோரக் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் குழந்தைகள் நல அமைச்சகம் முனைப்பு காட்ட வேண்டும். கல்வி அமைச்சகம் குழந்தைகள் நல அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். கல்வி அமைச்சகம் ஒரு முடிவை எடுக்கிறதென்றால் அதைக் குழந்தைகள் நல அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று செயல் வடிவமாக்க வேண்டும். ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகளும் இதனைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இந்த அமைச்சகத்துக்கு பெண் அமைச்சரையே நியமிக்க வேண்டும்.

ஆட்டிசம், மாற்றுத்திறனாளிகள், மனநலக் குறைபாடு, மரபணுக் குறைபாடு, ஹெச்ஐவி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தனிப் பெற்றோரின் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் என எந்தக் குழந்தையின் உரிமையும் பாதிக்கப்படக்கூடாது. அவர்களின் சிறந்த நலனைக் கண்காணிக்க, பாதுகாப்பை உறுதி செய்ய குழந்தைகள் நல அமைச்சகம் தேவை’’ என்கிறார் இனியன்.

குழந்தைகள் நல அமைச்சகத்தை மாநில அளவில் அமைப்ப தோடு நிற்காமல், அதன் அலகுகளை மாவட்ட அளவில் நிர்வகிக்க வேண்டும் என்கிறார் சிறார் எழுத்தாளர் விழியன்.

‘‘கருவில் இருந்து 18 வயது வரையில் அனைவரையும் குழந்தைகளின் கணக்கில் சேர்க்கவேண்டும். ஊட்டச்சத்துள்ள சத்தான உணவு உள்ளிட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தினை கண்டிப்பாக இந்த அமைச்சகம் கணக்கில் கொண்டிருக்கும். அதேபோல மன ஆரோக்கியத்திலும் தற்காலத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். ஒவ்வொரு வயதிலும் அவர்களின் வயதினருக்கு ஏற்ப மனச்சிக்கல்கள் உள்ளதா என ஆராயவும் அதனைக் களையவும் வேண்டும். வட்டார அளவில் குழந்தைகளுக்காக உளவியல் நிபுணர்களை குழந்தைகள் நல அமைச்சகம் பணியமர்த்த வேண்டும்.

குழந்தைகளுக்கான நூலகங்களும், ஏட்டளவில் என்றில்லாமல் செயல்படும்விதமாக திட்டங்களை அமைக்க வேண்டும். நூலகங்களைக் குறிப்பாக குழந்தைகள் புழங்கும் இடமாக மாற்ற நூலகத்திற்கு ஆலோசனைகளையும் திட்டங்களையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு நிலப்பகுதியில் வாழும் குழந்தைகளுக்கும் பிரத்யேகமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றைக் களைய ஒரு வலுவான அமைப்பு கிடையாது. மலைவாழ் மாணவர்கள், கடல்சார்ந்து வாழும் மாணவர்கள், நீண்ட தூரம் பயணிக்க வேண்டியவர்கள் ஆகியோர் நலனுக்கான திட்டங்களை அமைச்சகம் தனித்தனியே வகுக்க வேண்டும்’’ என்கிறார் விழியன்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதத்தினர் குழந்தைகள்தான். சுமார் 3 கோடி குழந்தைகளை அரசியல் கட்சிகள் பாராமுகமாகக் கடப்பது சரியல்ல. தேர்தல் அறிக்கையில் குழந்தைகள் நலன் இடம்பெறாவிட்டாலும், குழந்தைகள் நல அமைச்சகம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம். அடுத்து ஆட்சிக் கட்டிலில் அமரும் அரசு இதைச் செய்யும் என நம்புவோம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x