Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

பழவேற்காடு ஏரிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுகம்

பழவேற்காடு ஏரி, அங்கு மீன்பிடிக்கும் மீனவர்கள், காட்டுயிர்கள், வலசை வரும் பறவைகள், அலையாத்திக் காடுகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து இயற்கை அம்சங்களும் இன்னும் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தை விரிவுபடுத்த அதானி நிறுவனம் அரசுக்குக் கொடுத்துவரும் அழுத்தம்.

பழவேற்காடு ஏரியிலிருந்து மூன்று முக்கியக் கழிமுகங்கள் வங்காள விரிகுடாவை நோக்கி அமைந்துள்ளன. இங்கிருக்கும் உயிர்வாழ் சூழலியலுக்கு இந்தக் கழிமுகங்கள் பெரும் பங்காற்று கின்றன. பல தீவுகளை உள்ளடக்கிய இந்த ஏரியின் பெரிய தீவுகள் ஹரிகோட்டா, வேணாடு, இருக்கம், பேர்நாடு ஆகியவை. இத்தீவுகளில் வளர்ந்திருக்கும் காடுகள் ‘தெற்கத்திய வெப்பமண்டல வறண்ட பசுமைமாறா காடுகள்’ (Southern Tropical Dry Evergreen Forest). இந்தக் காடுகளில் உலக்கைப்பாலை, உசிலை, எட்டி, இரும்பிலி ஆகியவை வளர்ந்துள்ளன. ஏரியின் வடபுறத்தில் அலையாத்திக் காடுகளும் கரையோரத் தாவரங்களும் வளர்ந்துள்ளன.

இந்தச் சூழலியல் தொகுதியில் 2,487 வகைத் தாவரங்கள், பறவைகள், மீன்கள், ஊர்வன, வண்ணத்துப்பூச்சிகள், பாலூட்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கே காணப்படும் பல்வேறு விதமான வாழிடங்கள் பறவைகள் அதிக அளவில் வருவதற்குக் காரணமாக உள்ளன. எண்ணிக்கையில் குறைந்துவரும் சாம்பல் கூழைக்கடாவைப் போன்ற பறவைகளின் புகலிடமாக பழவேற்காடு அமைந்துள்ளது.

பூநாரை உள்ளிட்ட பறவைகளுக்குத் தேவையான உணவு இங்கு எளிதில் கிடைப்பதால் பறவைகள் அதிக எண்ணிக்கையில் இங்கே கூடு கின்றன. வலசைவரும் கடற்கரை வாழ் பறவைகளான உள்ளான், உப்புக்கொத்தி, ஆலா போன்ற வற்றுக்கு பழவேற்காடு குளிர்கால வாசத்தலமாகத் திகழ்கிறது. இந்தியாவில் முன்பு வாழ்ந்து தற்போது அற்றுப்போய்விட்ட செந்தலை வாத்து (Pink-headed Duck) இங்கே காணப்பட்டதாகப் பழைய பதிவுகள் கூறுகின்றன. சிறுத்தையும் இப்பகுதி களில் இருப்பது பதிவாகியுள்ளது. இப்படி மேம்பட்ட உயிரினப் பன்மையுடனும், மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் பழவேற்காடு ஏரி பல்வேறு காரணங்களால் சீரழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

அழிந்த அலையாத்தி

சூழலியல் நெருக்கடி காரணமாக அலையாத்திக் காடுகள் அச்சுறுத்தப்பட்ட தாலும், மண் குவிதலாலும் பழவேற்காடு ஏரியின் ஆழம் 3.8 மீட்டரில் இருந்து 2 மீ. ஆகக் குறைந்துவிட்டது. பழைய ஆய்வுகளில் பழவேற்காட்டில் பத்து அலையாத்தித் தாவர வகைகள், மிகப் பரந்த அளவில் வளர்ந்திருந்தது பதிவுசெய்யப்பட்டுள்ளது. தில்லை (Excoecaria agallocha) அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இன்றைக்கு அலையாத்தித் தாவரங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. கண்ணா (Avicennia marina) எனப்படும் அருகிவரும் அலையாத்தி தாவரம் ஏரியின் தெற்கில் எண்ணூர், குருவித்தொட்டு, வடக்கில் துகராஜபட்டினம் ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

பழவேற்காடு ஏரியைச் சரணாலயமாக அறிவிப்பதற்கு முன்பு, உலக அளவில் முக்கியத்துவம் கொண்ட ஒரு நீர்நிலையாக மத்திய அரசு 1981இலேயே அறிவித்திருந்தது. 1997ஆம் ஆண்டு மொத்த ஏரியும் (ஆந்திரம், தமிழகம் இரு மாநிலப் பகுதிகளையும் சேர்த்து, ஏரியில் உள்ள தீவுகள், காடுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி) சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 1990இல் கடலோர ஒழுங்காற்று மண்டல விதிகள் (Coastal Regulatory Zone) பிரிவு 1இன்கீழ் பட்டியலிடப்பட்டது.

அழிந்துவரும் பழவேற்காடு

ஆரணி, காலாங்கி ஆறுகள் வழியாக மோசமாக மாசுபட்ட நீர், பூச்சிக்கொல்லி, வேளாண் வேதிக் கழிவுகள், ஆலைக்கழிவுகள் போன்றவை மழை நீருடன் கலந்து ஏரியை வந்தடைகின்றன. ஏரியின் கிழக்குப் பகுதியில் நடத்தப்படும் மீன் வளர்ப்புத் தொழிலும் மாசுபடுதலை மோசமாக்குகிறது. இச்சீர்குலைவால் இந்த ஏரியை அண்டி வாழும் ஏழைகள், மீனவர்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த மாசுபாடு பழவேற்காட்டைப் பாதிப்பது ஒருபுறம் என்றால், அதைவிடப் பெரிய ஆபத்தாகக் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ளது.

துறைமுக ஆபத்து

2012இல் காட்டுப்பள்ளி துறைமுகம் திறக்கப்பட்டது. லார்சன் – டூப்ரோ நிறுவனம் நடத்திவந்த இந்தத் துறை முகத்தை 2018இல் அதானி குழுமம் வாங்கியது. இந்தத் துறைமுகத்துக்கு 40 மில்லியன் மெட்ரிக் டன் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பழவேற்காடு, சுற்றுப்புறவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இந்த விரிவாக்கத் திட்டத்துக்கு 2120 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகின்றது. இதில் 1,368 ஹெக்டேர் துறைமுக பயன்பாட்டில் உள்ள நிலம். 761 ஹெக்டேர் நிலம் அரசுப் பொறுப்பில் உள்ளது. எஞ்சிய 781 ஹெக்டேர் தனியார் நிலம், 440 ஹெக்டேர் கடற்பகுதி. இவற்றை அதானி துறைமுக நிறுவனம் கையகப்படுத்தப்பட உள்ளது.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் பழவேற்காடு ஏரியின் உயிரினப் பன்மையை அழிப்பது மட்டுமல்லாமல், அதைச் சார்ந்து வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கும். அரசு நிறுவனங்களின் ஆய்வுகளே இதை உறுதிப்படுத்துகின்றன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் 2012இல் வெளியிட்ட அறிக்கையில், மீனவர்களின் வாழ்வாதாரம், உயிரினப் பன்மை மட்டுமல்லாமல் 10 லட்சம் மக்களும், சென்னையின் 144 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும் கடல்நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. அத்துடன் உப்பளங்கள் அழிந்து, கடல் அரிப்பு ஏற்படுவதற்கான ஆபத்தும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகமே சூழலியல் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது. மத்திய நில அறிவியல் அமைச்சகத்தைச் சேர்ந்த ஒருங்கிணைந்த கடலோர, கடல்பகுதி மேலாண்மைத் திட்ட இயக்குநரகம் 2004இல் தயாரித்த அறிக்கையில், இம்மாதிரியான துறைமுகங்கள் உருவானால் பழவேற்காடு ஏரி அழிந்துவிடும் என்று எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்வது ஒருபுறம் என்றால், இதுபோல் செயற்கையாக உருவாக்கப்படும் துறைமுகக் கட்டுமானங்களும் கடல்மட்டம் உயரக் காரணமாகின்றன. எண்ணூர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் எண்ணூர் துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டபோதே வடக்கு பகுதியில் எந்த விரிவாக்கமோ கட்டுமானமோ கூடாது என்ற கட்டுப்பாட்டுடன்தான் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

புதிய சிக்கல்

இப்படிப் பழவேற்காடு ஏரியை பல்வேறு பிரச்சினைகள் நெரித்துக்கொண்டி ருப்பது போதாதென்று பழவேற்காடு சரணாலயத்திலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் செயற்கை கரிம வேதிப்பொருட்கள், ஒருங்கிணைந்த வண்ணப்பூச்சு தொழில்பூங்கா தொடங்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு சிப்காட் இயக்குநர் விண்ணப்பித்துள்ளார். இந்தச் செயல்பாடுகள் சூழலியல் செயற் பாட்டாளர்கள், பழவேற்காட்டின் சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன.

விடிவு எப்போது?

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உயிரினப் பன்மை நிறைந்த வாழ்வாதார மையமான பழவேற்காடு ஏரியை அழிவிலிருந்து காப்பாற்றld துறைமுகம் விரிவாக்கம், தொழிற்பூங்கா போன்ற எந்த வளர்ச்சி நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

பழவேற்காடு ஏரியை ஒட்டியும் சுற்றுப்புறத்திலும் சர்க்கரை, கிரானைட், ரசாயனம், ஜவுளி ஆலைகள், எண்ணூர் துறைமுகம், பெட்ரோலிய ஆலைகள் இயங்கிவருகின்றன. இவை ஏரியின் சூழலியல் மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. எண்ணூர் அனல் மின்நிலையத்திலிருந்து வெளியிடப்படும் சாம்பல், எண்ணூர் கழிமுகத்துக்கு அருகில் பக்கிங்ஹாம் கால்வாய் மூலமாக பழவேற்காடு ஏரியை வந்தடைகிறது. இதனால் சுற்றுச்சூழல், மீன்வளம், நீர்வளம், மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க வேண்டும்.

செயற்கையாக மணல் தடை ஏற்படுத்து தல், கழிமுகத்தை மூடுதல் போன்றவையும் ஏரியின் வளம் குறைவதற்குக் காரணமாக உள்ளன. கழிமுகத்தில் ஏற்படும் அடைப்பால், இனப்பெருக்கத்துக்காக இடம்பெயரும் மீன்களின் நடமாட்டம் பாதிக்கப்பட்டு மீன்களின் வகைகளும் எண்ணிக்கையும் சரிகின்றன. மீன்களை உணவுக்காக நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பறவைகள், மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பழவேற்காடு ஏரி, இப்படிப் பல்வேறு நெருக்கடிகளால் நிலப்பரப்பில் குறைந்துகொண்டே வருகிறது. உலக இயற்கை நிதி அமைப்பு (Global Nature Fund) 2010இல் ஆசியா, உலக நீர்நிலைகள் பட்டியலில் பழவேற்காடு ஏரியை அச்சுறுத்தப்பட்ட (threatened) ஏரியாக அறிவித்தது. இயற்கைப் புதையல்களில் ஒன்றான பழவேற்காடு ஏரியை நம் கண் முன்பாகவே பலிகொடுப்பது அவலம். மக்கள் விழிப்புணர்வு, போராட்டம், அரசு முன்முயற்சி போன்றவற்றால் பழவேற்காடு ஏரி பாதுகாப்பட்டால், அது நாட்டிலுள்ள மற்ற நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும் வழிவகுப்பதாக அமையும்.

கட்டுரையாளர், சென்னையைச் சேர்ந்த EMAI ஆராய்ச்சி பிரிவின் ஆராய்ச்சியாளர், தொடர்புக்கு: kannan.vaithianathan@gmail.com;

கட்டுரையாளர், பேராசிரியர், தொடர்புக்கு: mcwhale.t@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x