Published : 23 Mar 2021 03:13 am

Updated : 23 Mar 2021 10:03 am

 

Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 10:03 AM

தேர்தல் வாக்குறுதிகள் - கல்வி: பிரகாசமான எதிர்காலம் சாத்தியமா?

election-promises

கல்வி உள்ளிட்ட சமூகநலக் குறியீடுகள் பலவற்றில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவோரின் விகிதம் (GER) 49 சதவீதம். இது தேசிய சராசரியைவிட அதிகம். இந்தச் சூழலில் இந்தி கற்பிப்பதை கட்டாயமாக்கும் மும்மொழிக் கொள்கை முதல் மருத்துவ பட்டப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் வரை கல்வித் துறை சார்ந்த கொள்கைகள், திட்டங்கள் பலவும் மத்திய அரசுக்கும் தமிழகத்துக்குமான உராய்வுக்குக் காரணமாக இருந்துவருகின்றன.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் முதன்மை பேசுபொருள்களில் ஒன்றாகியிருக்கிறது நீட் தேர்வு. இந்தப் பின்னணியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக, திமுக கல்வித் துறை தொடர்பாக அளித்துள்ள வாக்குறுதிகள் ஆழமான பரிசீலனைக்குரியவை.


மாநில ஆளுகையில் கல்வி

கல்வி மாநிலப் பட்டியலிலேயே முன்பு இருந்தது. 1976இல் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மத்திய அரசு -மாநில அரசு இரண்டுக்குமான ‘பொதுப் பட்டிய’லுக்கு மாற்றப்பட்டது. மத்திய அரசும் மாநில அரசும் கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே கல்வித் துறை சார்ந்த கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க முடியும் என்பதே இதன் பொருள். ஆனால், நடைமுறையில் பொதுப் பட்டியலில் உள்ள அனைத்துத் துறைகளும் மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன என்னும் விமர்சனம் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டுவருகிறது.

நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட பிறகு, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்னும் குரல் பல்வேறு தரப்புகளில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயலப் போவதாக அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வாக்குறுதி அளித்துள்ளன.

நீட் - விலக்கும் பயிற்சியும்

நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான சட்டம் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது.

அதிமுகவின் அறிக்கையில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவான வாக்குறுதிகள்

பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை மட்டுமே கற்பிக்கும் இருமொழிக் கொள்கை தொடரும் என்று அதிமுகவும் மொழிவழிச் சிறுபான்மையினர் இவ்விரு மொழிகளைத் தவிர தம்முடைய தாய்மொழியை கூடுதல் மொழியாகப் பயில்வதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று திமுகவும் வாக்குறுதி அளித்துள்ளன.

கல்விக் கடன் தள்ளுபடி, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் நுழைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவசப் பயிற்சி மையங்கள், மேல்நிலைப் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இலவச மொபைல் டேட்டா (இணைய வசதி), பட்டதாரிகள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான திறன் வளர்ப்பு மையங்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் வெவ்வேறு வகைகளில் இடம்பெற்றுள்ளன.

அதிமுக வாக்குறுதிகள்

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயித்தல்; தனியார் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் விரிவாக்கம்; சத்துணவுத் திட்டம் 9 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு நீட்டிக்கப்படும்; அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்; அரசுப் பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி; மண்டலம் வாரியாக உலகத் தரத்திலான விளையாட்டுப் பயிற்சி மையங்கள்; விளையாட்டு அரங்கங்களை அமைத்தல் உள்ளிட்டவை அதிமுகவின் வாக்குறுதிகளில் குறிப்பிடத்தக்கவை.

திமுக வாக்குறுதிகள்

திமுக அறிக்கையில் அனைத்து அரசுப் பள்ளி - கல்லூரி மாணவியருக்கு இலவச சானிடரி நாப்கின்; மூன்றாண்டுகளுக்குள் தமிழகத்தை 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக ஆக்குவதற்கான முனைப்பு; சுற்றுச்சூழல், வேளாண்மை குறித்த அடிப்படை தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளிக் கல்வியில் அவற்றைப் பாடமாக இணைத்தல்; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சி; ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிளைக் கற்றுத்தருவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை திமுகவின் வாக்குறுதிகளில் குறிப்பிடத்தக்கவை.

கேள்விகளும் விடுபடல்களும்

இரண்டு கட்சிகளும் கல்வித் துறையிலும் இலவசத் திட்டங்கள் பலவற்றைப் புதிதாகவும் விரிவுபடுத்துவதாகவும் அறிவித்துள்ளன. கல்வி, அறிவுத் தேடல், வேலைவாய்ப்புக்கான திறன்வளர்ப்பு ஆகியவற்றுக்கான இலவச வாக்குறுதிகள் வருங்காலத் தலைமுறையை சிறப்பாக உருவாக்குவதற்கான அடித்தளங்களாகவே கருதப்பட வேண்டும். ஆனால், மாநில அரசின் கடன் சுமை ஏறுமுகத்திலும் வரிவருவாய்க்கான வாய்ப்புகள் இறங்குமுகத்திலும் இருக்கும் சூழலில், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் குறித்த திட்டங்கள் எதையும் இவ்விரு கட்சிகளும் முன்வைக்கவில்லை. அதேபோல் பாடத்திட்ட மாற்றம்; பாடநூல்களின் தரத்தை உயர்த்துதல்; பள்ளிகள், கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; பல்கலைக்கழக நியமனங்களில் வெளிப்படைத்தன்மை; புதிய கல்வித் துறை சார்ந்த படிப்புகளை (courses) வழங்குதல்; கற்பித்தல் முறையில் மாற்றம் ஆகியவற்றைப் பற்றி எதுவும் இல்லை.

அதேபோல் புதிய கல்விக்கொள்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம், அது போன்ற முடிவுகளில் மாநிலத்துக்கு உடன்பாடில்லாத விஷயங்களை எப்படிக் கையாளப் போகிறோம் என்பது குறித்து வாக்குறுதிகள் இல்லை. கரோனா பேரிடரால் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வியை இழந்தவர்கள் அநேகர். இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை எப்படி ஈடுசெய்யப் போகிறோம் என்பதற்கான திட்டமும் இல்லை. கல்வி தொடர்பான மாற்றுசிந்தனைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்ட பார்வை வாக்குறுதிகளில் வெளிப்படவில்லை.கல்விபிரகாசம்Election promisesElectionபொதுவான வாக்குறுதிகள்வாக்குறுதிகள்அதிமுக வாக்குறுதிகள்திமுக வாக்குறுதிகள்Election 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x