Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

அஞ்சலி: திரைமொழியின் பேராண்மை! - எஸ்.பி. ஜனநாதன்

ஓவியம்: பொன்வண்ணன்

நாற்பத்து நான்கு வயதில் ‘இயற்கை’ என்கிற படத்தை இயக்கி தேசிய விருது! அதன் பின்னர் நான்கு படங்கள். அவற்றில் ‘லாபம்’ இறுதிக்கட்டப் பணிகளில் இருந்தபோதே உரையாடலை உருவாக்கி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஐந்து படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் எஸ்.பி. ஜனநாதனால், தமிழ் சினிமாவின் ‘ட்ரெண்ட் செட்டர்’களில் ஒருவராக ஆக முடிந்திருப்பது தனித்த முன்மாதிரி.

வணிக வெற்றிக்கான ஃபார்முலாவை நம்பும் மோகன் ராஜாவை ஒரு ‘வேலைக்காரன்’ எடுக்கத் தூண்டியதும் தமிழ் சினிமா பார்க்கத் தவறிய சென்னையின் அசலான வாழ்க்கையைத் திரையில் அறிமுகம் செய்த பா.இரஞ்சித்தை, ‘நிலத்தின் உரிமை’ குறித்து தனது ‘காலா’ படத்தில் உரிமைக் குரல் எழுப்பத் தூண்டியதும் ஜனநாதன் தனது படங்கள் வழியாகப் பதியமிட்ட மார்க்ஸிய அரசியல்தான்.

வெகுஜன சினிமாவுக்கும் அசலான அரசியல் சினிமாவுக்குமான இடைவெளியைத் தகர்த்த இயக்குநர் எனத் தயக்கம் ஏதுவுமின்றி ஜனநாதனை பிரகடனப்படுத்திவிடலாம். மோகன் ராஜா, பா. இரஞ்சித் மட்டுமல்ல; புத்தாயிரத்துக்குப் பிறகான புதிய தலைமுறை இயக்குநர்களில் கோபி நயினார், லெனின் பாரதி, அதியன் ஆதிரை, பெ.விருமாண்டி என ஜனநாதனால் தாக்கம் பெற்றவர்கள் பலர். இவர்கள் அனைவரும், எளிய மக்களுக்கான அரசியலை, நசுக்கப்படும் அவர்களுடைய குரலை, சுரண்டப்படும் அவர்களுடைய உழைப்பை, பறிகொடுக்கும் அவர்களுடைய உரிமைகளை, உற்பத்தியின் வழியாக நியாயமாக கிடைக்க வேண்டிய லாபம் இடம் மாறுவதைப் பற்றிப் பேசும் படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்துவருவதற்கு, வெகுஜன திரை மொழியில் ஜனநாதன் பொதிந்துகொடுத்த மார்க்ஸிய அறிமுகத்தின் தாக்கம் ஒரு மறுக்கமுடியாத காரணம்.

ஜனநாதனுடைய எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும் வர்க்க முரண்பாடுகளை ஒழிப்பதன் வழியாகவே சாதியத்தையும், சுரண்டலையும் ஒழிக்க முடியும் என்று தனது கதாபாத்திரங்கள் வழியாகப் பார்வையாளர்களுக்கு உணர்த்திக்கொண்டேயிருப்பதைக் காணமுடியும். எந்த இடத்திலும் பரப்புரை என்கிற எல்லைக்குத் தனது திரைமொழியை கொண்டுசென்றுவிடாமல், திரைக்கதை ஆக்கம், உரையாடல் ஆகிய இரண்டையும் தொழில்நுட்பத்துக்கு இணையாகப் பயன்படுத்திய அசாதாரண இயக்குநர்.

முதல் படத்தின் வெற்றியும் அதன் தேசிய விருது அங்கீகாரமும் வணிக வெற்றிகளின் பின்னால் ஓட வைத்துவிடும் மாதிரிகளால் நிறைந்தது தமிழ்த் திரையுலகம். ஆனால், தன்னுடைய ஒவ்வொரு படத்துக்குப் பிறகும் ஆராவாரம் இல்லாமல் அடுத்த படத்துக்கானத் திரைக்கதை கோரும் ஆய்வில் சளைக்காமல் ஈடுபட்டவர். பதற்றமில்லாமல் மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு தனது ஒவ்வொரு படத்தையும் கொடுத்தவர்.

உயிர்பெறும் கதைக்களங்கள்

எழுத்தாளர்களுக்கு இடம் தர மறுப்பவர்களால் நிறைந்தது தமிழ் சினிமா. அறிமுகப் படத்திலேயே தனது இணை இயக்குநர் கல்யாணகிருஷ்ணனுக்கு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பைக் கொடுத்ததுடன், டைட்டில் கார்டிலும் ‘திரைக்கதை - இணை இயக்கம்’ என அங்கீகரித்தவர். ‘இயற்கை’ திரைப்படத்தை வெறும் முக்கோணக் காதல் கதை எனக் கடந்து சென்றுவிட முடியாது. அதில் க்யூப தேசத்தையும் பிடல் காஸ்ட்ரோவையும் அறிமுகப்படுத்தியிருப்பார்.

ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர், கதை நிகழும் களத்தை, கதாபாத்திரங்களுக்கு இணையாக அதை உயிருடன் எழுப்பிக் காட்டுவார். ஜனநாதனின் கதைக் களங்கள், படம் தொடங்கிய சில நிமிடங்களில் பார்வையாளர்களை உள்ளிழுத்துக்கொள்ளும் உயிரோட்டம் கொண்டவை. நிலப்பரப்பைக் காண ஏங்கும் மனதுடன், தொழில்முறை கடல் பயணத்தில் அல்லாடுகிறவர்களின் ஏக்கம், கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகத்தை நம்பி வாழும் எளிய மனிதர்களின் அன்றாடம், அங்கே துளிர்க்கும் காதல், அதன் தூய்மை, அதன் பிரிவு, காத்திருப்பு ஆகிய உணர்வுகளைக் கட்டியெழுப்ப, ‘இயற்கை’ படத்தில், கலை இயக்கம் (சாபு சிரில் - செல்வகுமார்), ஒளிப்பதிவு (ஏகாம்பரம்), இசை (வித்யா சாகர்), உரையாடல் ஆகிய கலைத் துறைகளை அவர் கைகொண்டு அணுகிய விதம், சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை பல தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

கடற்கரையை ஒட்டி, முட்டிக்கால் அளவு தண்ணீரில், பைசா நகர கோபுரம்போல் சற்று சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் அந்த கலங்கரை விளக்கம், 2000-த்தின் பார்வையாளர்கள் மனதில் காதலின் படிமமாக உறைந்துகிடக்கிறது. உடைந்து சிதிலமடைந்த அந்தக் கலங்கரை விளக்கத்தின் கண்ணாடி மாடத்தில், தேடலும் காத்திருப்பும் நிறைந்த கண்களோடு கதாநாயகியை அறிமுகப்படுத்துவார் ஜனநாதன். கடல் வாழ்க்கையால் சொந்த ஊருக்கு வரமுடியாத நிலையில், நீண்ட காலத்துக்குப்பின் சொந்த நிலத்தில் கரையிறங்கும்போது அதில் மண்டியிட்டு, மண்ணை முத்தமிடும் கதாநாயகனை அதற்குமுன் தமிழ் சினிமா கண்டிருக்கவில்லை. “எனக்காக மட்டுமில்ல; யாருக்காகவும் காத்திருக்காதே... நல்லா படிக்கணும்” என்று சொல்லி காதலிக்கு விடைதரும் மற்றொரு நாயகன், காதலை, அவளுடைய மனத்தில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் மனத்திலும் அரியாசனத்தில் ஏற்றிவைக்கிறான்.

பொய்களைப் புறந்தள்ளும் திரைமொழி

மாஸ் கதாநாயகர்களை முன்னிறுத்தி உருவாகும் தமிழ் வெகுஜனத் திரைப்படங்கள் தரும் பொய்யான நம்பிக்கைகள், சினிமா ரசனையை வளர்த்தெடுக்க இங்கே பெரும் தடையாக இருக்கின்றன. நட்சத்திர நடிகர்களைப் பயன்படுத்திக்கொண்டபோதும், ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ தொடங்கி ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ வரை பொய்யான நம்பிக்கை எதையும் ஜனநாதன் தனது படங்கள் வழியே கொடுத்ததில்லை. இதற்கு ‘பேராண்மை’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஓர் உதாரணமாகக் கூறமுடியும். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை, அதிகார வர்க்கம் எப்படித் தனதாக்கிக் கொள்கிறது என்பதை அவர் துணிவுடன் காட்சிப்படுத்தியிருந்ததை திரைமொழியின் பேராண்மை எனலாம்.

இன்று கரோனா பெருந்தொற்று உலகத்தையே உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கிய ‘ஈ’ திரைப்படம், சர்வதேச அரசியலில், உயிரித் தொழில்நுட்ப யுத்தம் (பயோ வார்) உண்மை என்பதையும் அதன் முதல் இலக்கு எளிய விளிம்புநிலை மக்கள்தான் என்பதையும் உரக்கச் சொன்னது.

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தில், அரசின் பார்வையில் பயங்கரவாதியாகத் தெரியும் ஒரு லட்சியப் போராளி, அப்போராளிக்கு சட்டம் விதித்த மரணத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய கடமையைச் சுமந்துகொண்டிருக்கும் நேர்மையான சிறை அதிகாரி, அவர் கண்டறிந்து அழைத்துவரும் மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட தூக்கிடும் தொழிலாளி ஆகிய மூன்று கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மரணத் தண்டனை என்கிற அபத்தத்தின் குரூரத்தை பார்வையாளர்களுக்கு கடத்தியவர்.

வேர்களைத் தேடிச் சென்றவர்

தஞ்சை அருகேயுள்ள வடசேரி என்கிற கிராமத்திலிருந்து சென்னையின் மயிலாபூருக்கு குடிபெயர்ந்தவர்கள் ஜனநாதனின் பெற்றோர். பழனி என்கிற இயற்பெயர் கொண்ட ஜனநாதனின் பால்யத்திலேயே அப்பா இறந்துவிட, பட்டாணிக் கடை நடத்திப் பிள்ளைகளை வளர்த்து ஆளாகியிருக்கிறார் அம்மா. பத்தாம் வகுப்பு தேறி, பி.யூ.சி முதலாண்டையும் வெற்றிகரமாக முடித்து, தாவரவியல் பாடத்தில் டிஸ்டிங்ஷன் மதிப்பெண் பெற்றார் ஜனநாதன். படிப்பை தொடரமுடியாமல்போன தனது இளமையில், திமுகவில் இணைந்து கட்சிப் பணியும் செய்திருக்கிறார்.

ஈழ இனப் பிரச்சினையால் பெரிதும் தாக்கம் பெற்றவர், ‘தமிழ் ஈழம்’ எனப் பெயரிட்டு தேநீர் கடை ஒன்றை மயிலாப்பூரில் நடத்தியவர். தேநீர் கடைக்கு வந்த இடதுசாரித் தோழர்களின் வழியாக ரஷ்ய செவ்விலக்கியம் ஜனநாதனுக்கு அறிமுகமானது. அதன் வழியான அவர் வசிப்பு, தனது இனத்தின், மொழியின் வேர்களைத் தேடுவதாக விரிந்தது. அடுத்து, சென்னை சோவியத் கலாசார மையத்தில், ‘புடோவ்கின்’ திரைப்படச் சங்கம் திரையிட்ட ரஷ்ய திரைப்படங்களைப் பார்த்து மார்க்ஸியத் தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக மாறினார்.

அதன் தொடர்ச்சியாக சினிமாவின் மீது காதலை வளர்த்துக்கொண்டவர், தனது உறவினரான அழகன் தமிழ்மணி தயாரிப்பில் உருவான ‘சோலைக் குயில்’ படத்தில் உதவி இயக்குநராக முதன்முதலில் பணிபுரிந்துள்ளார். அவரது ஈடுபாட்டைக் கண்ட திரைப்படக் கல்லூரி மாணவரான கேயார், தனக்கான உதவியாளராக ஜனநாதனை அமர்த்திக்கொண்டார். கேயாரின் ‘ஈரமான ரோஜாவே’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது எடிட்டர் பி.லெனினின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடம் உதவியாளராகச் சேர்ந்ததும் திரைப்படக் கலையின் நுட்பங்களை கிரகித்துக்கொள்ளும் பயிற்சிப் பட்டறைபோல் லெனினின் எடிட்டிங் அறை மாறியதுடன், ஜனநாதனை ஒரு தீவிர படைப்பாளியாக உருக்கொள்ளச் செய்யும் தொடக்கக் களமாகவும் ஆகியிருக்கிறது.

லெனினிடம் உதவியாளராக இருந்து, படத்தொகுப்பு நிகழ்தும் ஜாலங்களை நன்கு அறிந்தவராக இருந்தாலும் ‘எடிட்டிங்’ என்பது ஒரு தொழில்நுட்பம் என்பதையும் தாண்டி, அது ஒரு கலையாக நிறுவப்பட்டுவருவதை ஜனநாதன் ஏற்றுகொண்டதில்லை. திரைப்படம் எடிட்டரின் மேசையில்தான் உருவாகிறது என்கிற கருத்தை அவர் முற்றாக மறுதலித்த இயக்குநர். ஓவியம் என்பது ஓவியனுடைய கலை. இசை என்பது இசைக் கலைஞனின் கலை என்பதுபோல், சினிமா என்பது இயக்குநரின் கலை என்று கடைசிவரை நம்பி, அதை இயக்குநரின் ஊடகமாகக் கையாண்டவர் ஜனநாதன்.

தமிழர்களின் வியப்புக்குரிய பழங்காலக் கட்டிடக் கலை தொழில்நுட்பம், வரலாற்றுப் புதினங்களின் புனைவில் எழுந்த ராஜராஜ சோழன் சித்தரிப்பை விடுத்து, அவர் எளிய அரசனாக எப்படி வாழ்ந்தார் என்பதை அக்காலத்தில் வாழ்ந்த வெகுமக்களின் காதல் கதை ஒன்றுடன் இணைத்து, 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் ஒன்றை இயக்க நீண்ட ஆய்வுகளில் ஈடுபாட்டிருந்தார். இந்தியத் தேர்தல் முறை குறித்த விவாதத்தை உருவாக்கும் திரைப்படம் ஒன்றை உருவாக்குவதும் அவரது கனவாக இருந்தது.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x