Last Updated : 18 Mar, 2021 03:14 AM

 

Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

81 ரத்தினங்கள் 66: ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரி ஆண்டானைப் போலே

ஆளவந்தார் பத்மநாபனைத் தரிசிக்க திருவனந்தபுரம் செல்லும் முன்னர் தனது சீடரான தெய்வாரியாண்டானை அழைத்தார். ரங்கத்தில் உள்ள தனது மடத்தின் பணிகளை மேற்பார்வை செய்யுமாறு பணித்தார். தனது ஆச்சாரியாரைவிட்டுப் பிரிந்து இருக்க முடியாமல் நாளுக்கு நாள் தன் உடல் மெலிந்து ஆச்சாரியாரின் நினைவாக வாடி தெய்வாரியாண்டான் நோயில் விழுந்தார். அவரைப் பரிசோதித்த வைத்தியர், இந்த நோய் தீரவேண்டுமானால், அவரின் ஆச்சாரியாரை இவர் சந்திக்க வேண்டும். இந்த நோய் பிரிவால் வந்த நோய்; இதற்கு மருந்தில்லை என்று கூறிச் சென்றார்.

தெய்வாரியாண்டானை ஆளவந்தார் காண்பதற்காக, அவரைப் பல்லக்கிலிட்டு அழைத்துச் சென்றனர். ஆளவந்தாரும் அனந்தபுரம் சேவித்து ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பிவந்து கொண்டிருந்தார். வழியில் தனது ஆச்சாரியாரைக் கண்ட தெய்வாரியாண்டான் நெடுஞ்சான் கிடையாய் விழுந்து வணங்கினார்.

“உம்மை மடத்தின் பணியை கவனிக்க விட்டு வந்தால் எம்மைக் காண வந்துவிட்டீர். ராமனுக்கு, பரதன் இருந்தான் வைத்த இடத்திலே. ஆனால், நீர் இப்படி நான் சொன்னபடிக்கு அங்கே இல்லாமல் கிளம்பி வந்துவிட்டீரே.” என்று கண்டித்தார் ஆளவந்தார். “நான் இராமன் இல்லை என்பதால் தானோ, நான் சொன்னதைக் கேட்கவில்லை” என்றார்.

தெய்வாரியாண்டானோ, கண்கலங்கி, “தங்களைப் பிரிந்து வாழமாட்டாதவன் நான். தண்ணீரைப் பிரிந்து மீன் எப்படி வாழுமென்று கேட்டார். ராமரைப் பிரியாத லட்சுமணன் நான். சீதை பிரிந்தும் ராமர் வாழ்ந்தார். ஆனால், லட்சுமணனைப் பிரியமாட்டாமல் தன் உயிரையும்விட்டார். நான் தங்களைப் பிரிந்து வாழ முடியாமல் காண வந்தேன்" என்றார்.

தெய்வாரியாண்டானைப் போலே எனக்கு எந்த ஆச்சாரிய சம்பந்தமும் இல்லையே; நான் இங்கு வாழ்வதில் அர்த்தம் என்ன? என்று மனம் சலித்துக் கொண்டாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x