Last Updated : 18 Mar, 2021 03:14 AM

 

Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

இயேசுவின் உருவகக் கதைகள் 31: இரக்கம் காட்டுவோர் பேறுபெற்றோர்

இயேசு தன் மலைப்பிரசங்கத்தில் இரக்கம் பற்றிக் கூறிய சொற்களில் எத்தனை உண்மையுள்ளது என்பதைக் காட்டிய ஒரு நிகழ்வு அமெரிக்காவில் வாழ்ந்த இருவர் வாழ்வில் நடந்தது.

ஓர் ஏழைச் சிறுவன் தன் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தக் காலையிலும் மாலையிலும் வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்று வந்தான். ஒரு நாள் மாலை வீடுவீடாக ஏறி இறங்கிய போது, பசி அவனை வாட்டியது. கால்கள் வலித்தன. வேறு வழியின்றி அடுத்த வீட்டுக் கதவைத் தட்டி, ‘எனக்குப் பசிக்கிறது. ஏதாவது உணவு தர முடியுமா?' என்று கேட்க முடிவு செய்தான்.

அடுத்த வீட்டுப் படியேறி கதவைத் தட்டினான். ஓர் அழகான இளம்பெண் வந்து கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்ததும், கேட்க நினைத்ததை மறந்து, “குடிக்க தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான். அவனை நன்றாகப் பார்த்த அந்தப் பெண்ணுக்குச் சிறுவன் களைத்துப் போய் இருப்பது புரிந்தது. எனவே அவள் வீட்டுக்குள்ளே போய், ஒரு பெரும் குவளை நிறைய பால் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். ஆவலோடு அதனை வாங்கிக் குடித்த பிறகு, சிறுவன் அவளைப் பார்த்து, “நான் உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று கேட்டான். “எதுவும் தர வேண்டியதில்லை. அன்புச் செயல்களை செய்யும்போது எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று என் தாய் எனக்கு கற்பித்திருக்கிறார்” என்றாள் அந்தப் பெண். மனமும் வயிறும் நிறைந்திருக்க, அச்சிறுவன் “மிகுந்த நன்றி” எனச் சொல்லிவிட்டு நடந்தான்.

இது நடந்து பல ஆண்டுகள் கடந்த பின் அந்தப் பெண் நோய்வாய்ப்பட்டாள். உள்ளூர் மருத்துவர்களால் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே நகரத்தில் இருந்த பெரிய மருத்துவமனைக்கு அவளைக் கொண்டு சென்றனர். அவளுக்கு வந்திருந்த அந்த அரிய நோய்க்கான சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்த மருத்துவர் ஹவர்ட் கெல்லியிடம் அங்கிருந்த மருத்துவர்கள் இப்பெண்ணைப் பற்றிச் சொல்லி அவரது உதவியை நாடினார்கள். அந்தப் பெண் எந்த ஊரைச் சார்ந்தவர் என்று தெரிந்ததும் டாக்டர் கெல்லியின் கண்கள் ஒளிர்ந்தன. அவருக்குத் தனது சிறுவயதில் ஒரு பெண் செய்த உதவி ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பெண் மீது தனி அக்கறை காட்டி பல நாள் தொடர்ந்து சிகிச்சையளித்து அவளை முற்றிலும் குணமாக்கி அவளுக்குப் புது வாழ்வு தந்தார் டாக்டர் கெல்லி.

முழுக்கட்டணமும் செலுத்தப்பட்டு விட்டது

சிகிச்சை முடிந்து அவள் வீடு திரும்பும் நாள் வந்தபோது, அவள் மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்ட பில்லைப் பார்த்த டாக்டர் கெல்லி அதில் ஏதோ எழுதிக் கையெழுத்திட்டு, அதை அந்தப் பெண்ணிடம் கொடுக்குமாறு சொன்னார். மருத்துவமனையில் தங்கியதற்கான கட்டணத்தை, நான் திருப்பிச் செலுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் வேலை செய்ய வேண்டுமோ என்று தயங்கியபடி அந்த ரசீதைப் பார்த்தாள். ‘ஒரு குவளைப் பால் மூலம் முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டு விட்டது' என்று மருத்துவர் கெல்லி எழுதிக் கையெழுத்திட்டிருந்தார்.

பேறுபெற்ற மனிதர்களில் ஐந்தாவது வகையினர் யார் என்று இயேசு குறிப்பிட்டது இவர்களைத்தான். “இரக்கம் உடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.” ‘பிறருக்கு இரக்கம் காட்டுவோர் பிறரிடமிருந்து இரக்கத்தைப் பெறுவர். எனவே அவர்கள் பேறுபெற்றோர்’ என்று இயேசு சொன்னது இந்த இருவர் வாழ்வில் மட்டுமல்ல, எண்ணற்ற மனிதர்களின் வாழ்வில் உண்மையாகி இருக்கிறது.

பிறரின் இரக்கத்தை எதிர்பார்த்து நாம் இரக்கப்படுவது தவறு. இறைவன் நம்மீது பேரிரக்கம் காட்டுகிறார். நாம் செய்த தவறுகளுக்காக நாம் வருந்தினால் நம்மை அவர் எளிதாக மன்னிக்கிறார். நாம் மனமொன்றிக் கேட்கும் மன்றாட்டுகளுக்கு அவர் செவி சாய்க்கிறார். அவரின் இரக்கத்தைத் தினம்தோறும் பெற்றுக்கொள்ளும் நாம் அவரின் பிள்ளைகளான நமது சக மனிதர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனை.

தினமும் மகிழ்ந்திருங்கள்

ஒரு பணியாளர் அரசரிடமிருந்து கடனாகப் பெற்ற பெரும் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அந்தப் பணியாளர் அரசரின் காலில் விழுந்து மன்றாடுகிறார். அவரது நிலை கண்டு, அவர் மீது இரக்கப்பட்ட அரசர், அவரின் கடன் முழுவதையும் ரத்து செய்கிறார். இந்தப் பணியாளர் வெளியே சென்றபோது, அவரிடமிருந்து சிறிய தொகை ஒன்றை கடன் வாங்கியிருந்த சகபணியாளர் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை சிறையிலிருக்குமாறு செய்கிறார்.

இதைப் பார்த்தவர்கள் அரசரிடம் போய்ச் சொன்னதும், அரசர் அவரை அழைத்து, “நான் உனக்கு இரக்கம் காட்டியது போல நீயும் உன் சகபணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று கேட்டு, கடுஞ்சினம் கொண்டு, கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை அவர் வதைக்கப்பட ஆணையிடுகிறார். இரக்கம் காட்ட மறுப்போருக்கு இறைவனும் இரக்கம் காட்டுவதில்லை என்பதுதான் இந்தக் கதையின் கருத்து.

இரக்கம் என்பது வெறுமனே மனதில் தோன்றும் உணர்வாக இருந்தால் அதனால் துளியும் பயனில்லை. உடனடியாகச் செயலாற்றுவதே உண்மையான இரக்கம்.
‘பேறுபெற்றோர்’ என்ற சொல்லுக்கு ‘மகிழ்ந்திருப்போர்’ என்ற பொருளும் உண்டு. நாள் முழுவதும், வீட்டிலும் வெளியிலும், தெரிந்தவர்களிடமும் தெரியாதவர்களிடமும் இரக்கம் மிகுந்தவராக இருப்போம். அப்படியான நிலையில் எத்தனை மகிழ்வு அன்று நமக்குக் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x